மனித குலத்தின் ஈருலக வெற்றிக்காக உழைத்த உத்தமர் முஹம்மத் (ஸல்) | தினகரன் வாரமஞ்சரி

மனித குலத்தின் ஈருலக வெற்றிக்காக உழைத்த உத்தமர் முஹம்மத் (ஸல்)

இற்றைக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா இறைத்தூதராகத் தெரிவு செய்தான். அதுவும் உலகிற்கான இறுதித் தூதராகவே அல்லாஹ் அன்னாரை ஆக்கி வைத்தான்.

அதாவது ஆதம் (அலை) முதல் ஈஸா (அலை) அவர்கள் வரையும் காலத்தினதும் சமூகத்தினதும் தேவைக்கு ஏற்ப அல்லாஹ் இறைத்தூதர்களை தெரிவு செய்து மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தான். அவர்களுக்கு அல்லாஹ் இறை வழிகாட்டல்களையும் வழங்கினான்.

இவ்வாறு வழங்கப்பட்ட இறைவழிகாட்டல்கள் சில சந்தர்ப்பங்களில் அந்தந்த இறைத்தூதரோடு செயலிழந்துள்ளன அல்லது ஒரு தூதருக்கு வழங்கப்பட்ட இறைத்தூது அடுத்த தூதர் தெரிவு செய்யப்பட்டு இறைவழிகாட்டல் வழங்கப்படும் வரையும் நடைமுறையில் இருந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இறைத்தூதர்களாக வெவ்வேறு பிரதேசங்களில் அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்டு தூதுத்துவ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மக்களின் இம்மை மறுமை விமோசனத்திற்காகவே உழைத்தார்கள். அவர்கள் அந்தந்த சமூகங்களுக்கும் பிரதேசங்களுக்கும் தான் இறைத்தூதர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

உலகலாவிய இறைத்தூது

ஆனால் உலகிற்கான இறுதித் தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை தெரிவு செய்து அன்னாருக்கு தேவையான இறைவழிகாட்டலையும் அல்லாஹ் வழங்கினான். அதாவது உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவரதும் ஈருலக விமோசனத்திற்கு நேர்வழிகாட்டக்கூடிய இறைவழிகாட்டலையே அல்லாஹ் அன்னாருக்கு வழங்கினான். இந்த இறைவழிகாட்டலே மனித சமூகத்திற்காக அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே வாழ்க்கை நெறியாகும்.

அதனால் உலகம் இருக்கும் வரையும் தோற்றம் பெறக் கூடிய எல்லா கால சூழ்நிலைகளுக்கும் பொறுத்தமானதாகவும் சாத்தியம் மிக்கதாகவும் அவன் இந்த இறைவழிகாட்டலை அவன் அமைத்துள்ளான். இவ்வழிகாட்டலை அவன் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக உலகிற்கு அருளவில்லை. மாறாக உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கான இறைவழிகாட்டலாக இது இருப்பதால் அதனை அவன் கால, இட சூழ்நிலைகளுக்கு ஏற்பட்ட கட்டங் கட்டமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகுக்கு அருளி செயலுருப்படுத்தி முழுமைப்படுத்தியுள்ளான். இதற்கென 23 வருட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வினால் மிகவும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள இந்த இறைவழிகாட்டலில் குறைகளைக் காணவும் முடியாது. அதில் புதிதாக எதனை சேர்க்க வேண்டிய தேவையும் அதில் இல்லை. அது ஒரு முழுமைத்துவம் பெற்ற உலகலாவிய வாழ்க்கை நெறியாகும்.

இந்த இறைவழிகாட்டல் கி.பி ஆறாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி செலுருப்பட்டாலும் அதனை உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டம் மிக்க இறைவழிகாட்டலாகவே அவன் ஆக்கி வைத்திருக்கின்றான்.

மக்களிடம் கொண்டு செல்லல்

அல்லாஹ்வினால் வடிவமைக்கப்பட்ட இந்த வாழ்க்கை நெறியை செயலுருப்படுத்துவதற்காக முஹம்மத் (ஸல்) அவர்கள் உச்ச அர்ப்பணிபோடும், தியாகத்தோடும் செயற்பட்டார்கள். அல்லாஹ் வழங்கிய பொறுப்பை அச்சொட்டாக நிறைவேற்றினார்கள். ஒவ்வொருவரதும் இம்மை மறுமை விமோசனத்தை இலக்காகவும் நோக்காகவும் கொண்ட இந்த இறைவழிகாட்டலை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்ப்பதில் அன்னார் உச்சபட்ச முயற்சிகளை மேற்கொண்டார். இதன் நிமித்தமான பிரசாரத்தை தனிநபரிலிருந்து ஆரம்பித்த அன்னார் தன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் முதலில் இறைத்தூதைக் கொண்டு சென்றார். இதனால் 'அல் அமீன்,' 'அல் சதீக்' என்று அன்னாரை அழைத்த அவர் வாழ்ந்த சமூகத்தினர், அவர் அல்லாஹ்வின் தூதை கொண்டு செல்லத் தொடங்கியதும் அவரை தூற்றவும், விமர்சிக்கவும் தொடங்கினார்கள். அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களில் இருந்து தொடங்கிய இந்த எதிர்ப்பும், விமர்சனமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தன. அவை சொற்ப காலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இம்சிப்புக்களாகவும், துன்புறுத்தல்களாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இருந்த போதிலும் அன்னார் அல்லாஹ்வின் தூதை அச்சொட்டாக கொண்டு செல்வதில் உச்சபட்ச அர்ப்பணிப்போடு செயற்பட்டாரேயொழிய இந்த விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், தூற்றுதல்கள் மற்றும் ஏச்சு பேச்சுக்களை கண்டு தன் பணியிலிருந்து சிறிதளவேனும் பின்வாங்கவில்லை. அதனால் முஹம்மத் (ஸல்) அவர்களையும், அவரது தூதை ஏற்றுக்கொண்டவர்களையும் ஒரு கட்டத்தில்சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும் செய்தார்கள். இருந்த போதிலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் பொறுமை, சகிப்பு தன்மையின் சிகரமாகத் திகழந்தபடி அல்லாஹ் தமக்களித்துள்ள தம் பணியை திட உறுதியோடு முன்னெடுத்தார்கள். அதனால் ஒரு சந்தர்ப்பத்தில் பதவி, சொத்து, செல்வ ஆசையைக் காட்டி இறைத்தூதுவப் பணியை அன்னாரைக் கைவிடச் செய்திடவும் இறை நிராகரிப்பாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அன்னார் ஆசை வார்த்தைகளைக் கண்டு மயங்கவும் இல்லை. அற்ப நலன்களுக்காக செயற்படவும் இல்லை. முற்றிலும் அல்லாஹ்வின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்தார்கள். அதனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த சமூகத்தினர் அவரை படுகொலை செய்துவிடவும் கூட திட்டமிட்டார்கள். இதன் விளைவாக அவர் தாம் பிறந்து வளர்ந்த மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்கு சென்றார்கள்.

மதீனாவில்...

மதீனா மக்கள் அன்னாரை உட்சாகத்துடன் வரவேற்றார்கள். கோத்திரங்களாக பிரிந்திருந்து பல தாசப்தங்களாக யுத்தங்களில் ஈடுபட்டு வந்த மக்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒன்றிணைத்தார்கள். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களையும் மதீனாவாசிகளையும் இணைத்து சகோதரத்துவ ஒப்பந்தம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்த எல்லா மக்களையும் உள்ளடக்கி உலக வரலாற்றின் முதலாவது அரசியல் சமாதான ஒப்பந்தமாகக் கருதப்படும் ‘மதீனா சாசனத்தை’ மேற்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அங்கு வாழ்ந்த கோத்திரங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய அரசின் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். இதன் ஊடாக இஸ்லாம் உலகில் தனியொரு மார்க்கமாக தோற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அது வளர்ந்து வியாபித்து அகன்ற சாம்ராஜ்யமானது.

அதேநேரம் மனிதனின் தனிப்பட்ட வாழ்வுக்கும், குடும்ப வாழ்வுக்கும், சமூக வாழ்வுக்கும், தேவையான அத்தனை அடிப்படை அம்சங்களையும் அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி முழுமைப்படுத்தி உள்ளான். அல்லாஹ் இந்த இறை வழிகாட்டலை எந்த ஒழுங்கில் அருளினானோ அதே ஒழுங்கில் அன்னார் மக்களிடம் கொண்டு சென்றார்கள். இந்த இறைவழிகாட்டலின் இலக்கும் நோக்கும் ஒவ்வொரு மனிதனதும் ஈருலக வெற்றியும் சுபீட்சமுமாக உள்ள போதிலும் இதில் பலவந்தமோ, கட்டாயப்படுத்தல்களோ கிடையாது. ஆனால் இந்த இறைத்தூது ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லப்படுவது அவசியமானது.

அந்த வகையில் அல்லாஹ்வின் கொள்கையை இம்மண்ணில் நிலைநிறுத்துவதற்காக உயிராபத்தைக் கூட எதிர்கொண்ட அன்னார் பல யுத்தங்களுக்கும் முகம் கொடுத்ததோடு, காயங்களுக்கு உள்ளாகி இரத்தமும் சிந்தினார்கள்.

இருந்த போதிலும் அன்னார் அல்லாஹ் அளித்த பணியை அச்சொட்டாக நிறைவேற்றினார்.

அயல் நாடுகளது தலைவர்களுக்கு அழைப்பு

அல்லாஹ்வின் இந்த இறைவழிகாட்டலை தனிநபர் மட்டத்தில் கொண்டு செல்ல ஆரம்பித்த முஹம்மத் (ஸல்) அவர்கள் சொற்ப கட்டத்தில் குடும்பங்களுக்கும், குழுக்களுக்கும் கொண்டு சென்றதோடு நின்று விடாது அன்றைய அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் கூட இஸ்லாத்தின் தூதைக் கொண்டு செல்லும் நோக்கில் கடிதங்களை எழுதினார்கள்.

இந்தடிப்படையில் ஹபஸா - அபிஸீனியா (எதியோப்பியா), மிஸ்ர் (எகிப்து), பாரசீகம் (ஈராக், ஈரான்), ரோம், சிரியா, ஓமான் ஆகிய நாடுகளின் மன்னர்களுக்கும் பஹ்ரெய்ன் ஆளுநருக்கும் கடிதங்கள் எழுதப்பட்டன. அந்தக் கடிதங்களைப் பொதுவாக எடுத்து நோக்கினால் எல்லா கடிதங்களையும் அல்லாஹ்வை புகழ்ந்தபடி தான் அன்னார் ஆரம்பித்துள்ளார்கள்.

இங்கு ஒரு முக்கிய விடயம் தெளிவாகின்றது, தாம் மாற்று மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்த மன்னர்களுக்கு இஸ்லாத்தை கொண்டு செல்லும் நோக்கில் கடிதங்களை எழுதியுள்ள போதிலும் அன்னார் அல்லாஹ்வை புகழ்ந்தபடியே கடிதத்தை எழுதத் தொடங்கியுள்ளதைக் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அதேநேரம் அன்னார் ஒவ்வொரு மன்னரதும் பெயரையும் விழித்து தான் கடிதத்தை எழுதியுள்ளார்கள்.

இதன்படி ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த நாடுகளின் மன்னர்களது பெயர்களை அன்னார் அறிந்தே இருந்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

அதனைத் தொடர்ந்து, ‘வணக்கத்திற்குரிய நாயகன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை யாரும் இல்லை. அவன் எவரையும் மனைவியாகவோ பிள்ளைகளாகவோ எடுத்துக் கொள்ளவுமில்லை. நிச்சயமாக முஹம்மத் அவனது அடிமையும், அவனது தூதராகவும் இருக்கின்றார் என சாட்சி பகருகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னர் ‘நான் உங்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கின்றேன். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஈடேற்றம் கிடைக்கும். நீங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் சமுதாயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் குற்றமும் உங்களையே சாரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: ரஹீக்குல் மக்தூம்)

அதாவது அல்லாஹ்வின் இறுதி இறைவழிகாட்டல் என்பது முழு உலக மக்களுக்குமானது, அதனால் இந்த இறைவழிகாட்டலின் மூலமான பிரதிபலன்கள் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை இந்த அழைப்பு கடிதங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஏனெனில் அன்னார் அல்லாஹ்வின் இறை வழிகாட்டல்களின் அடிப்படையில் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவரதும் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சம் விேமாசனத்திற்காகவே உழைத்தார்கள்.

அதனால் தான் அன்னார் ஹஜ்ஜத்துல் விதா உரையில், 'மறுமையில் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன கூறுவீர்கள்?' என்று மக்களை நோக்கி கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் (தோழர்கள்), ‘நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள். நிறைவேற்றினீர்கள். நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் கூறுவோம்' என்றனர். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தி, பின்னர் மக்களை நோக்கி திருப்பி ‘யா அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி' என்று மூன்று முறை கூறினார்கள். 'இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில் செய்தியை கேள்விபடுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்'. என்றார்கள்.

(ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்)

இதன்படி உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்குமான இந்த இறைவழிகாட்டலை ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்வதில் முஹம்மத் (ஸல்) அவர்கள் எவ்வளவு அக்கறை காட்டியுள்ளார்கள் என்பது நன்கு தெளிவாகின்றது. இந்த இறைவழிகாட்டலான அல் குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களது போதனைகளையும் எடுத்து நோக்கினால் அவை ஒவ்வொரு மனிதனதும் இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்தையும் சுபீட்சத்தையும் இலக்காகக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும். அப்படி இருந்தும் இந்த இறைவழிகாட்டலான இஸ்லாம் தனியே முஸ்லிம்களுக்குரிய மாக்கம் என்ற பார்வை காணப்படுகின்றது. ஆனால் இது உலக மக்களுக்கான இறைவழிகாட்டல் என்பது மிகத் தெளிவான உண்மையாகும். 

Comments