சவூதி அரேபியாவின் பத்திரிகையாளர் ஜமால் கவுஜி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகள் அதிக கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சி.ஐ.ஏ இன் பதிவுகளுக்கு அப்பால் சவூதி அரேபியாவுடன் நட்பு கொள்வதென அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் வரலாறு காணாத அளவு முதலீடு ஒப்புக் கொண்டுள்ள சவூதி அரேபியா எங்களது திடமான நட்பு நாடு. ஜமால் படுகொலை சவூதி இளவரசர் சல்மானுக்கு தெரிந்திருந்தது என்பதை ஒப்புக் கொண்ட ட்ரம்ப். எனினும் சவூதி அரேபியாவுடன் உறவு தொடரும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னால் உள்ள அரசியலை தேடுவதே இக்கட்டுரையின் இலக்காகும்.
ஜமால் படுகொலை சர்ச்சை வெளியான போது ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். இந்த படுகொலையில் சவூதிக்கு தொடர்புண்டென உறுதியாக ஆதாரங்களுடன் கண்டறிந்தால் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார். பின்னர் துருக்கி ஆதாரங்களை வெளிப்படுத்தி ஒலிப்பதிவுகளை கையளித்த பின்பு அந்த ஒலிப்பதிவைத் தான் கேட்கப் போவதில்லை என ட்விட்டரில் தெரிவித்தார். இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டது சவூதி மன்னன் முகமது பின் சல்மான் என்பதை சி.ஜ.ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களை விரிவாக சி.ஜ.ஏ மதிப்பீடு செய்துள்ளதாக தெரிய வருகின்றது. துருக்கியும் அதனையே உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய சமூக வலைத்தளங்களிலும் அத்தகைய தகவல்கள் வலம் வருவதாக தெரிய வருகின்றது. எனவே ஒட்டு மொத்தமாக சவூதி மன்னனின் உத்தரவின் பேரிலேயே ஜமால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இவை அனைத்தையும் கடந்து ட்ரம்ப் சவூதியுடனான உறவில் மாற்றம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.
சிரிய ஜனாதிபதிக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனங்களும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளும் உறவினை முறித்தலும் வெறும் நலன்சார் அரசியலின் அங்கம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை வெளிப்படுத்தும் ஊடகங்களினது போலிகளும் அம்பலமாகியுள்ளன. இவை அனைத்தையும் கடந்து ஒரு பத்திரிகையாளனின் படுகொலையை இலங்கை பத்திரிகையாளர் உட்பட தமிழர் தரப்பிலும் ஜமாலுக்காக அஞ்சலி செய்யப்படவில்லை. ஜமால் தொடர்பில் எந்த வெளிப்பாடு இப்பத்தி எழுதிக் கொண்டிருக்கும் வரை வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த சூழலிலும் அமெரிக்காவுக்கு சவூதி அரேபியா அவசியமான நட்பு நாடாகவே கருதுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிடுவது போல் வரலாறு காணாத முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டுள்ள சவூதி அரேபியா திடமான நட்பு நாடாகவே விளங்கும் என்கிறார். அத்தகைய வரலாறு காணாத முதலீடுகள் எவை என்பதே முக்கியமான கேள்வியாகும். அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இராணுவ, பொருளாதார, பயங்கரவாதத்திற்கு எதிரான உடன்பாடுகள் அதிகம் உண்டு.
அமெரிக்க – சவூதி உறவானது 1938 ஆம் ஆண்டு ஆரம்பமானது. 1933 இரு நாட்டுக்குமான வர்த்தக உறவு முதன்மைப்படுத்தப்பட்டது. பின்பு எண்ணெய் வள ஆய்வுக்கான நடவடிக்கையை கிழக்கு சவூதி அரேபியாவில் அமெரிக்க கம்பனி ஒன்று மேற்கொண்டது. இது வெற்றிகரமானதாக அமையப் பெற்றதுடன் ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் அகழ்வு ஆய்வு நிறுவனங்கள் ஈரான், ஈராக் நோக்கி படையெடுத்தன. இவ்வாறு சவூதி – அமெரிக்க உறவு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு மேலும் பலமடைந்தது.
1940களின் பிற்பகுதியில் எண்ணெய் அகழ்வுடன் தொடர்பு பட்ட அமெரிக்கா 1980களில் எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நாடாகியது. 2016 இல் 7.55 மில்லியன் பரல்கள் மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி விளங்கியது. இதில் அனேக அமெரிக்க கம்பனிக்கு ஊடாகவே ஏற்றுமதி நிகழ்ந்தது.
ஓபெக் அமைப்பில் சவூதிஅரேபியாவின் பங்கினை வைத்துக் கொண்டு அமெரிக்க அதிக தலையீட்டை ஏற்படுத்தியது. 2014 இற்கு பின்பு அமெரிக்கா சவூதியிடமிருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய் இன் அளவை 50 சதவீதமளவுக்கு குறைத்தது. இதனால் ஒபெக் அமைப்பு அதிக சவாலை எதிர் கொண்டது. 2014 இல் 110 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பரல் மசகு எண்ணெய் 2016 இல் 27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது. 2017 இல் 50 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இராணுவ ரீதியில் வளைகுடா நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு நீண்டதாக அமைந்திருந்தாலும் 1991 ஈராக் யுத்தத்திற்கு பின்பே வலுவானது. 1979 இல் அமெரிக்காவின் Twin pillar கொள்கை சவூதி அரேபியாவுடன் வலுவான இராணுவ உறவை நோக்கி நகர தூண்டியது. ஈரானில் அமெரிக்க அடைந்த தோல்விக்கு பின்பே அத்தகைய கொள்கையை பிராந்திய நாடுகள் மத்தியில் அமெரிக்கா வகுக்க ஆரம்பித்தது. 9|11 தாக்குதலுக்கு பின்பான மேற்காசிய அரசியல் இராணுவக் கொள்கையில் சவூதி அரேபியா முதன்மை வகித்தது. 2011 – 2015 இடையில் 9.7 சதவீத இராணுவ ஆயுத தளபாடங்களை அமெரிக்காவிடமிருந்து சவூதி அரேபியா கொள்வனவு செய்தது. 2006 – 2010 இடைப்பட்ட காலத்தில் 27.5 சதவீதமாகக் காணப்பட்டது என SIRI இராணுவ ஆய்வு மையம் அறிக்கை தந்துள்ளது.
இவ்வாறு மிக நெருக்கமான உறவையும் நட்பையும் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு தற்போது மேற்காசியா சவால் மிக்க பிராந்தியமாக விளங்குகிறது. சிரியா - ஈரான் - ரஷ்யா – சீனா என்ற பெரும் சக்திகளின் எழுச்சி அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரானுடனான ட்ரம்பின் கொள்கை அதிக தோல்விகளை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2017 ஜனவரியில் சவூதி அரேபியாவின் புலனாய்வு அதிகாரி படுகொலை செய்யப்பட்ட ஜமாலை சந்தித்த போது ஈரானின் ஆட்சி மாற்றம் பற்றி உரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஈரானின் ஆட்சி மாற்றம் பற்றி ட்ரம்பின் ஆலோசகர் பிளின், இஸ்ரேலிய சமூக வலைத்தளங்களின் தந்திரோபாயப் பணியாளர் சவூதி அரேபியாவின் புலனாய்வாளர் அகமட் அல் அஸாரி ஆகியோருடன் ஜோல் சமால் ஆகியோரது சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக றோலேட் முல்லர் அறிக்கை குறிப்பிடுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஜமால் சவூதியரேபியா மன்னனது நடவடிக்கையை அதிகம் கண்டித்திருந்ததுடன் அவர் தொடர்பான கொள்கைகளை அதிகம் விமர்சித்ததாகவும் தெரிய வருகின்றது. இதில் இரண்டு பிரதான விடயம் முக்கியமானது.
சவூதி அரேபியாவின் முடியாட்சிக்கும் இஸ்ரேலிய பரம்பரைக்கும் இடையிலுள்ள உறவு பிரதானமானது. இந்த நெருக்கமான உறவின் உள்ளடக்கங்கள் ஜமால் மூலம் அதிகம் வெளிவர வாய்ப்புள்ளதாக நம்பப்பட்டது. அது ஒரு வகை எச்சரிக்கையாக அமையவும் வாய்ப்புண்டு. காரணம் ஜமாலின் மரணத்திற்கு பின்பு சவூதி மன்னன் ஜமால் ஒரு பயங்கரமான இஸ்லாமியன் எனக் குறிப்பிட்டது கவனத்திற்குரியது.
ஈரானின் ஆட்சி மாற்றம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இஸ்ரேலுக்கும் அவசியமானது. இஸ்ரேலின் இருப்பினை மேற்காசியாவில் நெருக்கடிக்குக்கு உள்ளாக்கக் கூடிய நாடு ஈரான் மட்டுமே. அந்தவகையில் ஈரான் மீதான நடவடிக்கைகளை இஸ்ரேல் வெளிப்படையாக செய்யமுடியாதுவிட்டாலும் சவூதி மூலம் அதனை மேற்கொள்ள முடியுமென கருதுகிறது.
இதனால் சவூதியுடனான உறவு அவசியமானது மட்டுமல்ல சவூதி வீழ்ந்துவிடக் கூடாது என அமெரிக்காவும் - இஸ்ரேலும் கருதுகின்றன. சவூதியின் பலத்திலும் அதன் புவிசார் அரசியலிலும் தங்கியிருக்கும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாப்பதும் அதன் பிரதான உத்தியாக உள்ளது. இஸ்ரேல் - சவூதி அரேபியா அமெரிக்க எனும் பலமான கூட்டிலேயே எதிரி தரப்பை கையாள முடியுமெனக் கருதுகின்றது. இதற்கு அமைவாகவே பாதுகாப்பு நெருக்கத்தையும், அரசியல் உத்தரவாதங்களையும் சவூதி அரேபியாவுக்கு ஏற்படுத்தி வருகிறது.
ஜமாலின் கொலையுடன் தொடர்புடைய சக்திகள் பலவாக அமைந்தாலும் நேரடியாக சவூதி அரேபியா தொடர்புபடுகின்றது. சவூதியின் முடியாட்சி நேரடியாக தொடர்புபடுகின்றது என்பதை மீறி அமெரிக்க அரசியல் நலன் மேலோங்கியுள்ளது. அமெரிக்காவின் மேற்காசிய இருப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய சிரியா மற்றும் ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கான பாதுகாப்பினையும் உத்தரவாதத்தை ஏற்படுத்த விளைகின்றது.
சவூதியினூடாக ஈரானுக்கு எதிரான சக்திகளை தூண்டிவிடுவதுடன் சவூதியின் எமன் மீதான நடவடிக்கை வாய்ப்பாக அமைந்துள்ளது. துருக்கி – சவூதி முரண்பாட்டினாலும் துருக்கி - ரஷ்ய நெருக்கத்தினாலும் அதிருப்தியடைந்துள்ள துருக்கி – அமெரிக்க உறவைப் பற்றியும் அமெரிக்கா கவனம் கொள்கிறது. இதனால் சவூதியின் உறவு அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாததாக உள்ளது.
சிரியாவுடன் அமெரிக்க உறவு வைத்திருந்தாலும் அதன் பலம் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடியும் வரையுமானதாகவே அமையும் என்பதுவும் அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். சிரியாவும் அமெரிக்காவை கையாளும் சக்தியாக வைத்துக் கொள்வதால் மூலமே தனது நிலையை பாதுகாக்க முடியுமெனக் கருதுகிறது. சிரியா - ரஷ்யா நெருக்கமே பலமான உறவை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கையுடைய ஆட்சியாளர்கள் அரசாங்கத்தினை கைப்பற்றியுள்ளனர். எனவே அப்பகுதியில் அமெரிக்காவின் இருப்பு என்பது சவூதி அரேபியாவையும், இஸ்ரேலையும் மையப்படுத்தியது.
பாலஸ்தீனம் மீதான அமெரிக்காவின் கொள்கையால் அதாவது ஜெரூசலேம் தொடர்பான கொள்கையினால் அதிக நெருக்கடிகளை ஜோர்தான், லெபனான் என்பன கொண்டுள்ளன. எனவே அமெரிக்காவுக்கு மேற்குறித்த சவூதியும், இஸ்ரேலுமே நம்பிக்கையான நட்பு நாடுகள். பலமான சக்திகளாகவும் உள்ளன.
இதில் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஒப்பான நாடுதான். சவூதியரேபியா மட்டுமே நிரந்தரமான நட்பு நாடாகும். ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணத்தினை சவூதி அரேபியா நோக்கி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, ட்ரம்ப் குறிப்பிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு என்பது ஈரானின் ஆட்சிமாற்றமாகவே பிரதானமானதாக அமையும். அதிலிருந்தே மேற்காசியாவின் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் சாத்தியமானதாகும். அமெரிக்கா எப்போது நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் அரசாக மட்டுமன்றி காலம் வரும் வரை காத்திருக்கும் நடாகவும் காணப்படுகின்றது. தனக்கு ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ளவும் பின்வாங்கவும் முரண்பாடுடைய முடிவுகளை எடுக்கவும் தயங்காத அரசாகும்.
எனவே ஜமால் மீதான படுகொலையை சவூதி அரேபியா மேற்கொண்டதை உறுதிப்படுத்திய பின்பும் தனது நலனுக்காக உறவை பலமாக்க ட்ரம்ப் திட்டமிடுகின்றார். சவூதியை கைவிடுவதென்பது மேற்காசியாவை முழுமையாக இழப்பதாகும். இதுவே ட்ரம்பின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாகும்.