ரஷ்ய-உக்ரைன் போர் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்ய-உக்ரைன் போர்

இடதுசாரிகளின் சிந்தனை பற்றி அழகான பழமொழி ஒன்றுண்டு. அதாவது மொஸ்கோவில் மழை பொழிந்தால் புதுடில்லியில் குடைபிடித்துள்ளோம் என்று. இது இப்போதும் நிகழ்கிறது. சற்று தலைகீழான முறையில் நிகழ்கிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் மோதல் என்றால் புட்டினுடனான சந்திப்பை ட்ரம்ப் நிறுத்திக் கொள்வார் என்பதன் மூலம் இன்றைய சர்வதேச அரசியலில் இவ்வாறான எதிரொலிப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையும் உக்ரைன் - ரஷ்ய விவகாரத்தை மையப்படுத்தி எழுந்துள்ள அரசியலை விளக்குவதே நோக்கமாகும்.

ரஷ்யா அண்மையில் இணைத்துக் கொண்ட கிரிமியாவின் கடற்பகுதியில் நிறுத்தப்பட்ட மூன்று உக்ரைன் கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா சிறைப்பிடித்துள்ளது. 2014 முதல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பதற்றம் நிலவுகிறது. உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டதுடன் கிருமியா மீது ரஷ்யா மேற்கொண்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் அப்பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது. இதனை நிராகரித்த உக்ரைன் ரஷ்யாவின் இணைப்பை சட்டவிரோதமானதென அறிவித்துள்ளது. இதுவே இரண்டு நாடுகளுக்குமான முரண்பாட்டுக்கு காரணமெனக் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் ரஷ்யாவின் எல்லையோரத்திலும் கருங்கடலை அண்டிய பகுதியிலும் அமெரிக்க உக்ரைனுடனான நட்புறவை பயன்படுத்திக் கொண்டு கடற்படைக் கப்பல்களையும் தாம் ஏவுகணையையும் பொருத்துவதற்கு முயன்றதன் பிரதிபலிப்பே இம்மோதலென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் அன்றைய மோதல் போக்கில் ரஷ்யா தீவிரமாக இறங்கியதனாலும் ரஷ்யாவின் புவிசார் அரசியல் என்பதனாலும் அமெரிக்காவின் நகர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் உக்ரைனை நேட்டோவுடன் இணைப்பதில் கரிசனை கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இராணுவ ரீதியாக உக்ரைனை அமெரிக்கா இராணுவ ஆயுத தளபாடங்களால் நிரப்பி வருவதுடன் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அரசாக உக்ரைனை மாற்றி வருகிறது.

தற்போதைய பதட்டத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோவின் தனிப்பட்ட நலனே காரணமென ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குற்றம் சாட்டி வருகின்றார். 2019 இல் நிகழவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தவே வேண்டுமென்று திட்டமிட்டு இந்நகர்வை மேற்கொண்டதாவும், ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. இதே நேரம் ரஷ்யாவின் நடவடிக்கை தேவையற்றது: புத்திசாலித்தனமற்றது என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதே நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைன் கப்பலிருந்த படையினரும், பணியாளர்களையும் ரஷ்யா சிறையில் அடைத்துள்ளது. அதுமட்டுமன்றி சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

உக்ரைனும் ரஷ்யாவும் பகிர்ந்து கொள்ளும் கடற்பகுதியான கொர்ச் ஜல சந்தியானது அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே கடற் பாதையாகும். இது கருங்கடலுக்கு அஸோவ் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதுடன் போர் விமானங்கள் அப்பகுதியை கண்காணித்து வருகின்றன.

இச்சந்தர்ப்பத்தில் உக்ரைன் நேட்டோவிடம் உதவி கோரியுள்ளது. குறிப்பாக தனது பாதுகாப்பாகவும், அஸோவ் கடற்பகுதிக்கு தனது கப்பல்கள் பயணம் மேற்கொள்வதற்காகவும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறு நேட்டோவை கோரியுள்ளது. அஸோவ் கடற்பகுதிக்கு உடனடியாக நேட்டோவின் கப்பல்களை அனுப்பி வைக்குமாறும் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி ஜேர்மனி ஊடகங்கள் கருத்துக் கூறும்போது நேட்டோ உக்ரையினின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவுவதற்காகவும் கப்பல்களை அஸோவ் கடற்பகுதியில் நிறுத்தக் கூடுமென நம்புவதாக தெரிவித்துள்ளன. உக்ரைன் நேட்டோவின் அங்கத்துவத்தை முழுமையாக பூர்த்தி செய்யாத போதும் மிக நெருக்கமான நாடாக உக்ரைன் விளங்குகிறது.

இப்பிரச்சினையில் உடனடியாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையைக் கூட்டுமாறு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது ஒரு சர்வதேச சர்ச்சையாக மாறுவதற்கான பரிமாணத்தை இரு தரப்பும் மேற்கொண்டு வருகின்றன. இதில் உக்ரைன் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் களமிறங்கியுள்ளது. இதனை ரஷ்யா எதிர்கொள்வதென்பது இராணுவ ஆயுத பலத்தை விட புவிசார் அரசியல் பலமே மேலானது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உக்ரைனும் ரஷ்யாவின் நடவடிக்கையை அடுத்து கடந்த 28ம் திகதி முதல் அடுத்து வரும் 30 நாட்களுக்குள் இராணுவச் சட்டத்தினை அமுல்ப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் எல்லையிலுள்ள பிராந்தியங்களில் இராணுவத்திற்கான முழு அதிகாரமுடைய இராணுவச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை உக்ரைன் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 276 உறுப்பினர்களது ஆதரவுடன் இராணுவச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இத்தகைய இராணுவச் சட்டம் எல்லையோரம் மட்டுமன்றி ரஷ்யாவின் பகுதிகளுக்கும் பாதிப்பான நடவடிக்கையை மேற்கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் இராணுவச் சட்டம் இராணுவ நடவடிக்கைக்கு மட்டுமன்றி எதிர் தரப்பின் மீதான அழிவுகளையும், உள்நாட்டில் இராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்குமானதாக அமைவதுண்டு. அதுமட்டுமன்றி இராணுவச் சட்டமானது ஒரு வகை போர் பிரகடனமாகவே பார்க்கப்படும் மரபு காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நேட்டோவின் அறிவிப்பொன்றை அதன் தலைமையான ஜென்ஸ் ஸ்டோல்டென் பெர்க் வெளியிட்டுள்ளார். அதாவது ரஷ்யா கைது செய்து சிறையிலடைத்துள்ள உக்ரைன் கப்பல்களையும், கடற்படையினரையும், அதன் பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்கும்படியும், ரஷ்யா தன்னுடைய நடவடிக்கையின் விளைவுளை உணர வேண்டும். எனினும் உக்ரைன் நாட்டுக்கு அரசியல் மட்டும் நடைமுறை ஆதரவினை நேட்டோ வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கு நடைமுறை ஆதரவு இராணுவத் தேவைகள் என்றே பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

ரஷ்யாவின் உயிர்வாழ்வென்பது கருங்கடலில் அதிகம் தங்கியுள்ளது. இப்பகுதியே ரஷ்யாவின் கடற்படை சார்ந்த இராணுவ வலிமைக்கான தளமாக கருதுகிறது. எனவே உக்ரைன் நடவடிக்கையும் ரஷ்யாவின் அணுகுமுறையும் இப்பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரித்துள்ளது எனும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் மேற்குலகம் அமெரிக்கா உட்பட ரஷ்யா மீது அதிக நெருக்கடியை கொடுக்க விரும்புவதுடன் ஜனாதிபதி புட்டினின் நடவடிக்கைகள் ஆபத்துமிக்கவை எனக் கருதுகின்றன.

ஐரோப்பாவுக்குள்ளும் மேற்காசியாவிலும், கிழக்காசியா பக்கமும் ரஷ்யா அதீத தலையீட்டை மேற்கொள்வதாகவே அமெரிக்கா கருதுகின்றது. ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் அணியாக விளங்குவது கவனிக்கத்தக்கது.

புட்டின் மீள மீள ஒரு குற்றச்சாட்டை உக்ரைன் ஜனாதிபதி மீது முன்வைக்கின்றார். அதாவது அவர் 2019 ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே இத்தகைய பதட்டத்தை ஆரம்பித்தார் என்று அதனையே ரஷ்யா கைது செய்த உக்ரைன் கடற்படையினரும் பணியாளரும் குறிப்பிடுவதாக தெரிவிக்கின்றார். மிகப் பிந்திய செய்தியாக உக்ரைன் ஜனாதிபதி ரஷ்யாவுடன் தாம் போருக்கு தயார் எனவும் நேட்டோ படைகளை அனுப்புமாறும் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடும்போது உக்ரைன் கடுமையான மிரட்டலுக்கு உட்பட்டு வருகின்றது. தற்போது நடக்கும் விடயங்கள் சாதாரணமான அம்சங்களல்ல. ரஷ்யா தாக்குதலுக்கு தயாராகியுள்ளது. எனவே ரஷ்யாவுடன் முழுப்போருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ தனது கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே நேரம் அதிக நேட்டோ நாடுகளை கொண்டுள்ள ஐரோப்பிய ஆணையகம் போர்ப்பதற்றம் கவலையளிக்கிறது. ரஷ்யா இராணுவபலத்தை பிரயோகப்படுத்தியது தவறு எனக் குறிப்பிட்டுள்ளது.

வெய்னோ ஐரிஸில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மகாநாட்டில் அமெரிக்க - ரஷ்யத் தலைவர்கள் சந்திப்பு பற்றி முன்னர் அதிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாது போகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது தேசிய பாதுகாப்பு குழுவினர் முடிவை அடுத்தே சந்திப்பு பற்றிய முடிவு அறிவிக்கப்படுமெனக் குறிப்பிட்ட ட்ரம்ப் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் தனக்கு பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனவே இங்கு ஒரு புவிசார் அரசியலில் அதிகாரப் போராட்டமென்று நிகழ்ந்து வருகிறது. அதுவும் உலகத்தின் இருதய நிலத்தின் மீதான போராட்டமாகவுள்ளது. ரஷ்யாவை ரஷ்சியர் அல்லாதவர் ஆளுவதற்கும் ரஷ்யாவை ரஷ்சியர் ஆளுவதற்குமான போராட்டமாக உள்ளது. மைக்கின்டரின் கோட்பாடு என்றுமே தோற்றுப் போகவில்லை.

நிலையான உலக அரசியலுக்கான தளமாகவுள்ளது. பெட்ரோ புட்டின் மோதல் போக்கு 2014 இல் உக்ரைனுக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியதென்பது நல்ல அனுபவமாக அமையும். கிருமியாவை மீளச் சேர்த்துக் கொள்ள உக்ரைன் விரும்புவதாக பிரதிபலிப்பே இராணுவச் சட்டத்தின் பிரகடனப்படுத்தலாகும். எனவே போர் வெடிக்கும் சூழல் வலுவானதாக அமைந்தாலும் நேட்டோவின் அணுகுமுறையே சரியான தீர்மானத்தை ஏற்படுத்துமெனக் கருதுகின்றனர்.

எனவே ரஷ்ய உக்ரைன் மோதல் போக்கானது யுத்தமாக வெடிப்பதென்பது நேட்டோவினதும், அமெரிக்காவினதும் கைகளிலேயே தங்கியுள்ளது. பெட்ரோ மீள மீள நேட்டோவையே கோரி வருகின்றனர். இப்பதற்றம் போரா வெடிப்பதற்கான வாய்ப்பு சமவலுவுடையதாகவே உள்ளது. ரஷ்யாவை விட உக்ரைன் இதனை போராக மாற்ற அதிகம் முனைகிறது.

கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

Comments