வடகொரிய அமெரிக்க நெருக்கடி மீண்டும் ஒரு ராஜதந்திர உத்தியா? | தினகரன் வாரமஞ்சரி

வடகொரிய அமெரிக்க நெருக்கடி மீண்டும் ஒரு ராஜதந்திர உத்தியா?

கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

மனித உரிமை பற்றிய உரையாடல் இலங்கையிலும் உலகத்திலும் அதிகமாக பேசப்பட்டுவரும் மாதமாக டிசம்பர் காணப்படுகின்றது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி மனித உரிமைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அந்நாளை மையமாகக் கொண்டு மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மீண்டுமொரு மனித உரிமைக் குற்றச்சாட்டுடன் அமெரிக்கா- வடகொரியா உறவு நெருக்கடிமிக்க நிலைக்குள் தள்ளப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. இக்கட்டுரையும் அமெரிக்க வடகொரிய முறுகலுக்கு பின்னாலுள்ள அரசியலை தேடுவதாகவே உள்ளது.
வடகொரியாவின் ஆளும் தரப்பின் முக்கியமான சோரியோங்ஹே, பாதுகாப்பு அமைச்சர் ஜோங்க்லோங் தாயெக் மற்றும் தகவல் பரப்புத்துறையின் அதிகாரி பாக்கவாங்ஹோ ஆகிய மூவர் மீதும் அமெரிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் வட கொரியா தொடர்பான அறிக்கையில் வெளிவிகார அமைச்சகம் முன்வைத்துள்ளது. அத்தகைய அறிக்கையை அடுத்து வடகொரியாவின் அமைச்சு மற்றும் அதிகாரிகள் மீது தடைவிதிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் அவர்களது சொத்துக்களை தடை செய்யும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ராமர்ட் பல்லாடினோ தெரிவித்திருக்கும் விடயம் வடகொரியாவை அதிகம் பாதித்துள்ளது. அதாவது உலகில் மோசமாக மனித உரிமை மீறப்படும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா உள்ளது. நீதி விசாரணை இல்லாமல் கொல்வது, பலவந்தமாக வேலையில் மக்களை ஈடுபடுத்துவது, கொடுமைப்படுத்துவது, விருப்பம் போல் நீண்டகாலம் கைதிகளை அடைத்து வைப்பது, பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது, கட்டாயக் கருக்கலைப்பை மேற்கொள்வது என பல மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதற்கு பதிலளித்த வடகொரியா அமெரிக்காவின் செயல் கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிடும் என எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் செயல் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வடகொரியா வெளிப்படுத்தியுள்ளது.
இங்கு இரண்டு பிரதான சந்தேகம் இரு நாடுகள் மீதும் ஏற்படுகின்றது. ஒன்று அமெரிக்காவின் மனித உரிமை பற்றிய வெளிப்பாடு ஏற்கனவே அமெரிக்கா மனித உரிமைகள் கவுன்சிலிருந்து வெளியேறிய நிலையில் மனித உரிமையை வட கொரியா பின்பற்றவில்லை எனக்கூறுவது எப்படி நியாயமானதாக அமையும்! இஸ்ரேலிய நலன்களுக்காக மனித உரிமைகள் அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா அதனை மிக நீண்டகாலமாக அரசியலாக பயன்படுத்திய அமெரிக்கா, மீண்டும், அவ்வாறு சிந்திக்க ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு மட்டுமல்ல உலகத்திற்கே அமெரிக்கா மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் போதிக்கிறது. இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீதுமேற்கொள்ளும் மனித உரிமை மீறல் பற்றி எந்த உரையாடலும் மேற்கொள்ளாது வடகொரியா பற்றி கூறுவது அதிக அரசியல் சார்ந்தது. அதிலும் வடகொரியாவின் ஆளும் தரப்பின் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது.


காரணம் வடகொரியா அமெரிக்கா என்பனவற்றால் அண்மையில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மகாநாடு உலகத்தினால் உற்றுப் பார்க்கப்பட்டதொன்றாகும். அதில் அமெரிக்கா வடகொரியாவின் வலையில் விழுந்துள்ளதாகவே அரசியல் விமர்சனம் உண்டு. சிங்கப்பூர் மகாநாட்டில் பரஸ்பரம் பரிமாறப்பட்ட விடயங்களிலிருந்து வட கொரியா எவ்வளவு தூரம் நகரமுடியுமென கணக்குப் போட்டதோ அதையும்விட அதிக தூரம் வடகொரியா நகரத் தொடங்கிவிட்டது. அணுவாயுதத்தை மட்டுப்படுத்தப் போவதாக கூறிய வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது மட்டுமன்றி அணு உலைகளை பாதுகாப்பாக பராமரித்தும் வருவதாகவே பென்டகன், சி.ஜ.ஏ என்பன குற்றம்சாட்டி வருகின்றன. அத்தகைய குற்றச்சாட்டைக் கடந்து அமெரிக்கா வடகொரியாவுடன் உறவு பேணிவந்தது. ஆனால் தற்போது முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை வடகொரியாவின் அண்மைய இராணுவ ஆயுததளபாடக் பரிசோதனைக்கு பதிலானதே. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் அமெரிக்க உறவைப் பலப்படுத்துவதில் வெற்றி கண்டுவரும் அமெரிக்க வடகொரியாவை கையாள ஆரம்பித்துள்ளது. வட கொரியாவின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா அதிக மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலையை கடந்த காலங்களில் அனுபவித்தது. தற்போது இலங்கையிலும் மாலைதீவிலும் அடைந்த வெற்றியை அடுத்து பலமான மாற்றங்களை வடகொரியாவில் மேற்கொள்ள திட்டமிடுகிறது. இந்தோ பசுபிக் வட்டகையில் உள்ளநாடுகளுடன் உறவைப் பலப்படுத்தும் அமெரிக்கா வடகொரியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கி வழிக்குக் கொண்டுவர முற்படுவது அதன் நலனுக்கானதாகும்.


அதாவது இப்பிராந்தியத்தில் அமெரிக்கப் பிடி பலமடைய வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட ஆரம்பித்துள்ளது. மனித உரிமை விவகாரம் பலவீனமானதென அமெரிக்கா உணர்ந்த போதும் அதனை ஒரு பலமான விடயமாக மாற்றிக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பிரசாரம் ஒன்றினை முதன்மைப்படுத்த விளைகிறதை காணமுடிகிறது. இது வடகொரியாவுடன் போருக்கு போவதற்கான வழிமுறையோ அல்லது போர் ஏதும் சாத்தியப்படுத்தி வெற்றி பெறலாமென்றோ அமெரிக்கா கருதவில்லை என்பதாகும். இத்தகைய அணுகுமுறை இலங்கைக்குள் சாத்தியமானதாக அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு அமெரிக்கா வட​ெகாரியாவில் செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் இலங்கை மக்கள் போன்றோ அல்லது பண்பாடு போன்றதோ அல்ல வடகொரியரது அரசியல். வடகொரியாவின் புவிசார் அரசியல் இலங்கை போன்றதல்ல. அதுவே அமெரிக்காவின் நெருக்கடிக்கு காரணமாகும். சிங்கப்பூர் மகாநாட்டுக்கு பின்பு வடகொரியா மீது பாரிய தாக்கத்தை அமெரிக்காவால் ஏற்படுத்த முடியவில்லை என்பது கவனத்திற்குரியது.


இரண்டாவது வடகொரியாவை பொறுத்தவரை இத்தகைய விடயத்தை முன்வைத்து அமெரிக்காவை மிரட்டி பணிய வைக்க திட்டமிட்டுள்ளது. வடகொரியாவின் இருப்பு, பலம் அனைத்துமே அணுவாயுதமே. அதனை முன்வைத்து அமெரிக்காவை வழிக்கு கொண்டுவந்த வடகொரியா, அதனை இழக்காது பாதுகாக்க மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்த மனித உரிமை எனும் விடயத்தை முன்னிறுத்தி வடகொரியாவும் செயல்படுகிறது. சிங்கப்பூர் மகாநாட்டுக்கு பின்பு அமெரிக்காவின் எல்லைக்குள் நுழைந்த வடகொரியா பொருளாதார வாய்ப்புக்களையும் அரசியல் உறுதிப்பாடு பற்றியும் அதிக எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. ஜப்பான் மற்றும் தென்கொரியாவை கையாளும் சூழலை பலப்படுத்திக் கொண்ட வடகொரியா பொருளாதார வாய்ப்புக்களை எதிர்பார்த்த அளவு பெற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால் மேற்கிடமில்லாத பொருளாதார வாய்ப்பினை பிற பிராந்தியங்களில் தேடுவதில் கரிசனை கொண்டது வடகொரியா. அதில் அதிக வெற்றியை பெறமுடியாது விட்டாலும் ஒரளவு பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டது எனலாம்.


எனவே, வடகொரியாவின் தற்போதைய நகர்வு அணுவாயுதத்தை தக்க வைப்பதாகும். அதற்கான சூழலையும் அயல் நாடுகளுடனான உறவையும் பற்றிய நகர்வையே மேற்கொள்கிறது. வடகொரியாவில் மனித உரிமை இல்லை என்பதனைவிட மனித உரிமையை முன்னிறுத்தி அதன் மீதான பிரசாரத்தை மீள ஆரம்பிக்க அமெரிக்க முயல்கிறது. இதனை முறியடிப்பதற்கான உத்திகளே வடகொரியாவுக்கு தற்போது அவசியமானதாக உள்ளது.
இதே நேரம் மீண்டும் ஆரம்பித்துள்ள எதிர்ப்பிரசாரம் சர்வதேச மட்டத்தில் கொரியத் தீபகற்பத்தை குழப்பத்திற்கு உள்ளாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகள் எவையும் நிரந்தரமான வலிமையுடையவையாக அமைவதில்லை. இன்றைய குற்றச்சாட்டு நாளைய பேச்சுக்களுக்கு வாய்ப்பினைக் கொடுப்பது போல் அமெரிக்காவின் நகர்வுகள் அமைவதுண்டு. சில வேளைகளில் இரண்டாவது கட்டப் பேச்சுக்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.


ஆனால் வடகொரியர்களோ மிக நிதானமாக செயல்படுகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது. மீண்டும் வடகொரியாவின் பலமே மேலோங்கியுள்ளது. ஆனால் சிரியாவில் தரித்திருந்த அமெரிக்கப் படைகளை முகாமை மூடிவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் பணித்துள்ளார். அவ்வாறே பென்டகனில் அமைக்கப்பட்டிருந்த இந்தியக் கண்காணிப்பு மையத்தை அமெரிக்கா இடம் மாற்றியுள்ளது. இவை எல்லாம் அமெரிக்காவின் பிறிதொரு நகர்வுக்கான திட்டமிடலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் அதன் ஜனாதிபதிகளும் உலகத்தை அமைதியாக எதிர்கொள்வதில்லை என்ற பதிவு ஒன்றுள்ளது. அதற்கு அமைவாகவே வடகொரியாவினதும் அதன் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவின் நிலைப்பாடுகள் அமைந்துள்ளன.இதில் அமெரிக்கா மேற்காசியாவை விட்டு வெளியேறினாலும் அதன் நடவடிக்கை இந்தோ, -பசுபிக் பகுதியை நோக்கியதாக அமையுமாயின் அதன் விளைவுகள் வடகொரியாவை பாதிப்பதாக அமையும்.


எனவே வடகொரியா அமெரிக்கா உறவு மீளவும் நெருக்கடிக்குள்ளாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கான எல்லை மட்டுப்பாடானது. வடகொரியா அணுவாயுதத்தை வைத்துக் கொள்ளும் வரை அத்தகைய மட்டுப்பாடு தவிர்க்க முடியாதது. தற்போதைய நெருக்கடி அமெரிக்காவின் இயலாமையின் பிரதிபலிப்பென்றே தோன்றுகிறது. அத்தகைய நகர்வு அமெரிக்காவை விட வட கொரியாவுக்கு வாய்ப்பான சந்தர்ப்பமாகும். அதற்காக அமெரிக்கா வாய்ப்புக்களை பயன்படுத்த தவறாத நாடு என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பரஸ்பரம் இரு நாடுகளும் அதிகாரத்தில் சமவலு அரசியலை கொரியக்குடாவில் பிரதிபலிக்கின்றன.

Comments