சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் யுத்தம் வெடிக்கும் சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் யுத்தம் வெடிக்கும் சாத்தியம்

உலக அரசியலில் மேற்காசியா அதிக முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. அதிலும் அமெரிக்க ரஷ்யப் போட்டி ஒருபுறமும் இஸ்ரேல் விடயம் இன்னொரு பக்கமான அரசியல் நெருக்கடியையும் உருவாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார தேவையும் அரசியல் வல்லரசு பலமும் மேற்காசியாத் தளத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு இஸ்ரேலின் அரசியலும் அமைந்துள்ளது. இஸ்ரேலைப் பாதுகாப்பதென்பது அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கு சமதையானது என்ற எண்ணத்துடன் அமெரிக்கா மிக நீண்டகாலமாக செயல்படுகிறது. சிரியாவின் தலைநகர் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகளையும் அமெரிக்க இராணுவ நகர்வுகளையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் சிரியாவிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் அறிவித்துள்ள செய்தியின் முக்கியத்துவத்தை நோக்குவோம்.

ஐ.எஸ் உடனான போரில் தாம் வெற்றி கண்டுள்ளதாகவும் அதனால் சிரியாவில் தங்கியுள்ள அமெரிக்கப்படை முகாங்களை மூடிக்கொண்டு வெளியேற வேண்டுமென ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதனால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இராஜினாமாச் செய்ததுடன் பெரும் சர்ச்சையை எதிர் கொண்டது. இது அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்குமிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உணர்த்தும் செய்தி ஜனாதிபதி தனித்து முடிவுகளை எடுத்து செயல்பட முனைகின்றார் என்பதாகும். அத்துடன் அமெரிக்க நலன்களில் ஜனாதிபதியின் முடிவுகள் அதிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதென்னபதாகும். ஆனால் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவு தவறதானதாக அமைந்தாலும் ரஷ்யாவின் பலத்தினால் சிரியாவுக்கு எதிரான அமெரிக்க கொள்கை தேல்வியடைந்துவிட்டதென்றே கூறவேண்டியுள்ளது. இரண்டாவது அமெரிக்க உத்திகள் மேற்காசியாவில் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது என்பதாகும். ஈரான் – சிரியா, ரஷ்யா – சீனா என்கின்ற கூட்டின் பலம் மேலெழுந்த பின்பு அமெரிக்காவினால் தனித்து செயல்பட முடியாதுள்ளது என்பது மட்டுமன்றி இஸ்ரேல் சவுதி அரேபியா என்பன அமெரிக்க நலன்களுக்குள் இயங்கக் கூடிய அரசுகளாக இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

ஆனால் ட்ரம்ப் வெள்ளைமாளிகையின் நெருக்கடியைக் கடந்து ஈராக்குக்கு திடீர் விஜயம் ஒன்றை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளார். தமது இராணுவத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது சிரியாவிலிருந்து படைகள் வெளியேறியுள்ள நிலையில் ஈராக் தளத்திலிருந்து சிரியாவை கண்காணிக்கவும் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் சிரியாவுக்குள் படைநகரவும் முடியுமென அறிவித்துள்ளார். இது வெள்ளைமாளிகையில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வதற்கான வெளிப்பாடாவே உள்ளதெனலாம். படைவிலக்கியதற்கு அவரது பொருளாதார அளவீடு தான் காரணமாக அமைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பானது. ஆனால் இராணுவக் கொள்கை சார்ந்து அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்கொள்கின்றது என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்திலேயே இஸ்ரேலின் தாக்குதல் சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் மீது நிகழ்ந்துள்ளதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளது. இத்தகைய வான் தாக்குதலில் சிரியாவின் ஆயுதக்கிடங்கொன்று சேதமடைந்துள்ளதாகவும் மூன்று சிரியப் படைகள் காயமடைந்ததாகவும் அச்செய்தியில் இராணுவம் அறிவித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேலின் ஏவுகணைகள் பல தாக்குதல் இலக்கை அடையமுடியாத விதத்தில் சிரியாவின் எதிர்ப்பு ஏவுகணைகள் தடுத்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது பற்றி எந்தவிதமான கருத்தினையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை. இதே போன்ற தாக்குதல்கள் பலவற்றை சிரியாவின் மீதும் ஈராக் மீதும் இஸ்ரேல் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் சிரியாவின் ஆயுதக்கிடங்கின் மீதான தாக்குதலாகும். இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட் உலகளாவிய புலனாய்வு பிரிவுகளில் மிக வலிமையானது. தனது எதிரிகளை இலக்குவைத்து அதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டது. தற்போதும் அதே வல்லமையுடன் செயல்படும் அமைப்பாக மொசாட் விளங்குகிறது. உலகத்தின் எல்லா மூலைமுடுக்குகளையும் சென்றடையும் திறன் உடைய அமைப்பாக மொசாட்’ விளங்குகிறது. இதன் பலமே இஸ்ரேலின் பலமாகும். இதன் கடந்த கால நடவடிக்கைகள் ஆச்சரியமானவையாகும்.

குறப்பாக ஈரானின் அணுவுலையை அழித்தமை மற்றும் ஈரான் – சிரியா – லிபியா போன்ற நாடுகளின் ஆயுதக்கிடங்கை இலக்கு வைப்பது, அழித்தொழிப்பது, ஆயுதங்களை அழிப்பது முக்கியமான தளபதிகளை இலக்கு வைப்பது, தாக்குதல் அணிகளை அழிப்பது என ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவே இஸ்ரேலின் போர் உத்தியில் பிரதானமானது. குறிப்பாக அண்மைக்காலத்தில் ரஷ்யாவின் ஆயுங்களை அதிகம் வாங்கி குவித்துள்ள சிரியா மீது எடுக்கப்படும் தாக்குதலானது ரஷ்யாவின் ஆயுதங்களை இலக்கு வைத்ததாகவே உள்ளது.

ஏறக்குறைய இஸ்ரேல் தனது எல்லைக்குள் ரஷ்யாவின் ஆயுதங்களை அழிப்பதென்பது அதனுடன் ​போர் புரிவதற்கு ஒப்பானதே.

எதிர்காலத்தில் சிரியா மீதான யுத்தம் ஒன்றினை இஸ்ரேல் எந்த அறிவிப்பின்றியும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

போர் பிரகடனமின்றி போர் ஒன்றினை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். இதற்கான ஏற்பாட்டைத் தான் அமெரிக்கா தனது வெளியேற்றத்தின் மூலம் மேற்கொண்டதா என்ற சந்தேகம் உண்டு. இஸ்ரேலின் இருப்பு யுத்தத்தினால் மட்டுமே சாத்தியமானது. அதனால ஒரு யுத்தத்தை முழுஅளவில் பிரயோகிக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிட்டதா என்பது கவனிக்கப்பட வேண்டியது. அமெரிக்காவில் இஸ்ரேல் தங்கியிருக்கும் நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அரசியல் ஆலோசகர் ஹென்றிகீசிங்கர் 1990 களில் தெரியப்படுத்தியிருந்தார். இன்றைய நிலையும் அவ்வகையானதே அமெரிக்கா இஸ்ரேலின் கொள்கைக்கு கட்டப்பட்டு செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் எத்தகைய ஆயுங்கள் உண்டு என்பது அமெரிக்காவிற்கே தெரியாது என ஒரு தடவை கிசிங்கர் தெரிவித்திருந்தார்.

தற்போது இஸ்ரேலுக்குரிய பிரச்சினை ரஷ்யாவின் ஆயுதங்களும் இப்பிராந்தியத்தில் அமைந்துள்ள அணுவாயுதமுமேயாகும். ஈரானின் அணுவாயுதத்தை அழிப்பது சிரியா ரஷ்யாவிடம் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை இல்லாது அழிப்பது.

இதனுாடாக தனது இருப்பினை பாதுகாத்துக் கொள்ளமுடியுமென கருதுகிறது இஸ்ரேல். அதிலும் சிரியா அதன் எல்லையில் அமைந்துள்ள நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் மிக நிதானமான யுத்த உபாயங்களை வகுத்து வருகிறது. ரஷ்யா இஸ்ரேலுக்கு எதிரான ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளும் திறனை மேற்காசியப் பரப்பில் உருவாக்கி வருகிறது. அதனை தரை, கடல், ஆகாயப்பரப்பில் தயார்ப்படுத்திவிட்டது.

பெருமளவான கடல் படைப்பலத்தை சிரியத் துறைமுகத்தில் குவித்துள்ளது. அதனைவிட பசுபிக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்ட கப்பல்களையும் நகர்த்திவருகிறது. எனவே இரண்டு தரப்பும் முழு நீள போர்க்களத்தை உருவாக்கிவருகின்றன. இதில் அமெரிக்கா இஸ்ரேலுடன் செயல்பட அதனோடு சவுதிஅரோபியாவையும் இணைத்துக் கொள்ள முயலுகின்றது.

எனவே, இஸ்ரேலின் சிரியா மீதான தாக்குதலானது எதிர்கால போருக்குரிய ஒத்திகையாகவே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சில யுத்தங்களையும் நகர்வுகளையும் இஸ்ரேல் செய்ய முயலும். அதற்கு பதில் சிறிய தாக்குதல்களை விடுத்து பாரிய யுத்தத்தை ரஷ்யா தேர்ந்தெடுக்க வேண்டிய நிரப்பந்தத்துக்குள் தள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

Comments