பெர்ளின் சுவரை நினைவுபடுத்தும் அமெரிக்க - மெக்சிக்கோ எல்லைச்சுவர் | தினகரன் வாரமஞ்சரி

பெர்ளின் சுவரை நினைவுபடுத்தும் அமெரிக்க - மெக்சிக்கோ எல்லைச்சுவர்

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

உலகமயமாக்கல் எனும் கொள்கை கிழக்கிந்திய கம்பனி ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் தனித்துவம் பரவலடையத் தொடங்கியது. பின்பு படிப்படியாக வளர்ச்சி பெற்ற அக் கொள்கை உலகத்தை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ளவும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்தது. இதில் மேற்குலகம் அதிக இலாபங்களை அனுபவித்ததுடன் எல்லையில்லாத தலையீட்டையும் பண்பாட்டு அசைவையும் மரபுரீதியான அடிப்படைகளை அழித்தொழித்து தனது ஆதிக்கத்தை மேலெழ செய்தது. இதுவே உலகத்தை தனது காலடியில் வைத்துக் கொள்ளும் பண்பை வளர்த்ததுடன் அதற்குள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் சந்தையையும் வர்த்தகத்தையும் ஒன்றுசேர்த்து செயல்பட வழிவகுத்தது. உலகத்தை கிராமமென்றும் வலைப்பின்னல் கொண்டு இணைக்க முடியும் என்பதையும் அழகான வார்த்தை ஜாலங்களால் திட்டமிட்டு ஒழுங்கமைத்துக் கொண்டது. இதனை முதன்மைப்படுத்திய உலக நாடுகள் உலகமயமாக்கமானது அதிக நன்மை கொண்ட கொள்கைப்பரபென பிரசாரம் செய்தன. இறைமை தகர்ந்து போன அரசுகளையும் எல்லையில்லாத அரசுகளையும் கிழக்கு உலகத்தில் காணமுடிந்தது. அதற்கு அப்பால் மேற்கு தனது வரைபுகளாலும் உடன்படிக்கைகளாலும் அத்தகைய எல்லைகளை திட்டமிட்டு மீறுவது போல் வெளிப்படுத்திக் கொண்டன. இதன் போக்கு கீழ் திசை நாடுகளின் எழுச்சியுடன் படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. இதன் பாய்ச்சல் மேற்குலகத்திற்கும் அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆச்சரியமானதாக அமைந்தது. தமது உலகமயவாக்கல் கொள்கையை கிழக்கு அமுல்படுத்த ஆரம்பித்தபோது தாமே கைவிட வேண்டிய நிலைக்குள் தள்ள்பபட்டன. அதன் ஒரு அங்கமே அமெரிக்க- மெக்சிக்கோ விவகாரமாகும். இக்கட்டுரையும் அதனை புரிவதற்கான தயாரிப்பாகவே அமைந்துள்ளது.

மெக்சிக்கோ அமெரிக்க உறவு அதிக பேசுபொருளாக மாறிவருகிறது. அதிலும் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்ற பின்பு அதிகமான தாக்கத்தை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக போதைப் பொருளின் பாவனையை கட்டுப்படுத்தவும் குடியேற்ற வாசிகளின் ஆக்கிரமிப்பை தடுக்கவும் அத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கான முதல் ஏற்பாடாக எல்லைப்பகுதியை காவல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். இராணுவத்தை குவித்ததுடன் பெரும் எடுப்பில் இராணுவ ரோந்து நடவடிக்கையை முடிக்கிவிட்டார். இதன் அடுத்த கட்டமாக குடியேற்றவாசிகள் திருட்டுத்தனமாக நுழைவதை தடுக்கும் விதத்தில் முகாம்களை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அடுத்ததாக எல்லையில் சுவரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளார். அதற்கான நிதி நடவடிக்கையை மெக்சிக்கோ அரசிடம் கோரியபோதும் சாத்தியப்படாத நிலையில் செனற்றின் அனுமதியை பெற்று சுவரெழுப்பும் பணியை ஆரம்பித்துள்ளார்.

ஏறக்குறைய இந்நடவடிக்கை அனைத்தும் உலக அரசியலில் அதிக பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகளாவிய மட்டத்தில் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் திறந்து விட முயலும் அமெரிக்கா தனது நலன் பாதிக்கப்படும்போது அனைத்து எல்லைகளையும் மூட முயலுகின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கை பற்றியும் தாராள பொருளாதார பொறிமுறை பற்றியும் அதிக முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் அமெரிக்கா அதற்கு எதிரான கொள்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது உலகளாவிய போக்கில் குழப்பத்தை தந்துள்ளது. உலகமயமாக்கத்தை முதன்மைப்படுத்திய மேற்கு தற்போது தலைகீழான கொள்கையை உருவாக்கி வருகிறது. இதனை ஏறக்குறைய ஒத்த தளத்திலேயே ஐரோப்பிய நாடுகளும் குடியேற்றக்காரர் மீதான கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. இதற்கான அடிப்படை கீழைத் தேச நாடுகள் மீது கடைப்பிடித்த கொள்கையின் விளைவென்றே கூறலாம். குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மீதான கொள்கையினால் அவை தமது தனித்துவத்தை இழந்திருப்பதுடன். மேற்குலகம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துபவையாக உள்ளன. இதற்கான விளைவையே மேற்குலகம் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இஸ்லாமியர் மீதான யுத்தமும் அதன் கொடுமைகளும் மீள மேற்கினை தாக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு அங்கமே செப்டம்பர் தாக்குதலாகும். அவர்களது வளர்ச்சியும் பதில் நடவடிக்கையும் மேற்கினை மூடிய நிலைக்கு இட்டு செல்ல ஆரம்பித்துள்ளது. இதனையே மெக்சிக்கோ தளத்தில் அமெரிக்கா எதிர்கொள்ள முயலுகிறது. ஏறக்குறைய எல்லாத்தரப்பிலும் ஓரே அம்சம் தான் மேலோங்கியுள்ளது. அதாவது இஸ்லாமிய நாடுகளில் ஆரம்பித்த அணுகுமுறைமை தற்போதது தனது எல்லையிலும் நிகழ்த்த வேண்டிய நிலைக்கு அமெரிக்காவின் கொள்கை தள்ளப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த உலகத்திலும் உலகமயமாக்கல் சிந்தனை மீளவடிவமைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் மேற்குக்கு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைக்கு இன்னோர் வலுவான காரணமம் உள்ளது. அதாவது சீனாவினதும் இந்தியா மற்றும் பிரேசில் தென் ஆபிரிக்கா மற்றும் ரஷ்யா என்பன ஏற்படுத்திவரும் உலக மயமாக்கல் கொள்கையின் அமுலாக்கமாகும். ஏறக்குறைய மேற்கு கடைப்பிடித்த உலக மயமாக்கல் கொள்கையை தற்போது கிழக்கு நாடுகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. அதில் அதிக வெற்றியும் எட்டியுள்ளன. குறிப்பாக உலக நிதிக்கு எதிராக ஆசிய கட்டமைப்பு வங்கியினை ஆரம்பித்து அதன் மூலமாக கீழைத் தேச பொருளாதாரத்தை கையாள ஆரம்பித்துள்ளது. அவ்வாறே இஸ்லாமிய நிதியம் கடந்த இரு ஆண்டுகளாக அதிக நிதியை தனது எல்லைக்குள் மட்டுப்படுத்தி வருகிறது. மற்றும் ஓரே சுற்று ஒரே பாதை எனும் தந்திரோபாயம் ஏற்படுத்திவரும் மாற்றம் அனைத்தும் மேற்கின் உலகமயமாக்கத்தினை உள்வாங்கிய கட்டமைப்பாகும்.

இத்தகைய நிறுவனம் சார் வளர்ச்சியானது மேற்கின் இருப்பை தகர்க்க தொடங்கியுள்ளது. இவற்றை இதே தளத்தில் வைத்து கையாள ஒபாமா நிர்வாகம் எடுத்த அனைத்து நடவடிக்கையும் தோல்வியை தழுவியதாக ட்ரம்ப் கருதினார். அதனால் அவரது கொள்கைகள் அனைத்தையும் மூடுவதற்க தயாரானார். அதன் விளைவே மெக்சிக்கோ விடயம் அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் மேற்கு வளர்த்து வைத்திருந்த மாயைகள் அனைத்தும் தகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சிறுவர் உரிமை மனித உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முற்றாகவே தகர்க்கும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை அமைந்துள்ளது. கடந்த மூன்றுமாத காலப்பகுதியில் இரண்டு குழந்தைகள் குடியேற்றவாசி பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதால் இறந்துள்ளனர். பெற்றோரை விட்டு குழந்தைகள் தனிமைப்படுத்தும் பெற்றோர் தண்டிக்கப்படுவதுடன் பிள்ளைகளும் தமது உரிமைகளை இழக்கும் துயர நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சர்வதேச சட்டவரைபுகளை மீறுவதாக உள்ளது. நியாயமற்ற போக்குக்குள் அமெரிக்கா செல்வதென்பது அது தானே தயாரித்த சட்டங்களையும் உரிமைப்பட்டயங்களையும் சுதந்திரம் பற்றிய சுலோகங்களையும் தானே மீறுவதாகவுள்ளது.

இங்கு மேற்கு கோட்பாடுகளையும் வரைபுகளையும் தமக்கு சாதகமாக உருவாக்கிய போதும் அவை தனது நலன்களை மீறும்போது அல்லது அவற்றுக்கு முன் தான் தோற்கடிக்கப்படும் போது அதனை மீறுகின்ற நிலை தவிர்க்க முடியாதுள்ளது. இத்தகைய போக்கானது நியாயமற்ற உலகத்தின் விம்பங்களின் வடிவங்களாகவே மேற்குலகம் பயணிக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இதனையே கிழக்கு நாடுகள் எதிர்கொள்ளவுள்ள நிலையில் மூடிய உலகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தேசியவாதமும் சுதேசிய எண்ணங்களும் மேற்கிடம் மீள தோற்றம் பெற்றுள்ளது. அதற்கு ஏற்பவே அவற்றின் செயல்பாடுகளும் உலகளாவிய கொள்கைகளும் அமையவுள்ளன.

எனவே மெக்சிக்கோ அமெரிக்க எல்லைச் சுவரானது மீளவும் ஒரு பெர்ளின் சுவரை நினைவுபடுத்துமா என்பதே கவனிக்கத்தக்கது. அது கம்யூனிஸத்தாலும் முதலாளித்துவத்தாலும் கட்டியெழுப்பப்பட்டது. இது உலகமயப்படுத்தலாலும் அதன் எதிர்ப்பு வாதத்தாலும் கட்டியெழுப்பப்படவுள்ளது. அதுமட்டுமன்றி இது மேற்குக்கும் கிழக்குக்குமானதாக அமையவுள்ளது.

Comments