உலக வங்கி மீதான நெருக்கடியும் நிதி நிறுவனங்களது ஆதிக்கமும் | தினகரன் வாரமஞ்சரி

உலக வங்கி மீதான நெருக்கடியும் நிதி நிறுவனங்களது ஆதிக்கமும்

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

உலகத்தை ஆளும் வல்லமை பொருந்திய அரசாங்கங்களை கட்டுப்படுத்தும் பலம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உரியதான உலக ஒழுங்கொன்றினை காணமுடிகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான காலத்தில் ஐரோப்பாவை கட்டி வளர்க்க உருவாக்கப்பட்ட மார்சல் திட்டம் நிதி ஆளுகையின் பலத்தை நிர்ணயித்தது. அதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவை படிப்படியாக கைப்பற்றியதுடன் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க கண்டங்களையும் தனது நிதி மூலங்களால் ஆளுகை செய்வதில் வெற்றி கண்டது. உலக வங்கியின் தலைவர் பதவியை அதன் தலைவர் ஜிம் யோங் கிம் இராஜினாமா செய்ததன் பின்னாலுள்ள நிதி நிறுவனங்களின் அரசியலை புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.  

உலக வங்கியின் தலைவர் ஜிம் ஜோங் கிம் தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கு முன்னரே பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஜனவரி 31 ஆம் திகதி பதவியிலிருந்து அவர் விலகுவார். இதற்கான அடிப்படைக் காரணம் அமெரிக்காவுக்கும் உலக வங்கிக்குமான மோதல் போக்கே என கூறுகின்ற நிலை எழுந்துள்ளது. ஏறக்குறைய உலக வங்கியின் முழுமையான கொள்கையையும், திட்டமிடல்களையும் வளர்ப்பதில் அமெரிக்காவுக்கே அதிக பங்கிருந்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்திற்கும் உலக வங்கி பிரதான இடம் வகித்திருந்தது. அமெரிக்காவின் பொருளாதார வாய்ப்புக்கு அமைவாக உலக நாடுகளை கட்டிப் போடும் திறன் உலக வங்கிக்கே இருந்தது. உலக வங்கியினை முன்னிறுத்திக் கொண்டு வர்த்தக, நேரடி முதலீட்டு வாய்ப்புக்களையும், சந்தைகளையும் அமெரிக்கா ஆளுகை செய்து வந்தது. உலகப் பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை எழுச்சி பெறவும் சில நாடுகளை முற்றாக அழிக்கவும் வல்லமை உடைய நிதி நிறுவனமாக உலக வங்கி காணப்பட்டது.  

அமெரிக்காவுக்கு விரோதமான கொள்கை உடைய நாடுகளை பலவீனப்படுத்தும் விதத்தில் பொருளாதார தடைகளையும் நிதி உதவி நிறுத்தங்களையும் மேற்கொண்டு உலக வங்கி அடிமைப்படுத்தியுள்ளது. நிதி உதவிகளையும் பொருளாதார கொள்கைகளையும் திட்டமிடல்களையும் அந்த நாடுகள் மீது திணித்து பொருளாதார இலாபங்களையும் ஈட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது உலக வங்கி என்பது குறிப்பிட்டதக்கதாகும். இவ்வாறு அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கும் பிந்திய தாரண்மைவாத பொருளாதார உத்திகளுக்கும் உதவிய உலக வங்கி தற்போதைய அமெரிக்காவுடன் மோத ஆரம்பித்துள்ளது. அதிலும் சீனா மற்றும் பல ஆசிய நாடுகள் உலக வங்கி மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டி வந்தன. இச்சந்தர்ப்பத்திலேயே அதன் தலைவர் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  

நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் உலகம் முழுவதும் கடன் வழங்குவதற்கான மிகப் பெரிய நிறுவனம் உலக வங்கியாகும். இது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் தலைமையகத்தை கொண்டு இயங்குகிறது. இதன் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தினை தகர்க்க முடியாதுள்ளது. உலக வங்கிக்கு புதிய தலைவர் ஒருவரை அமர்த்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறே ஆசிய ஆபிரிக்க நாடுகளில் குறைந்த வட்டிக்கு நிதியளிப்பதென்பது இந்த நாடுகளின் பொருளாதார திட்டமிடலை தமது கைகளில் வைத்துக் கொள்ளவே என்ற விமர்சனமும் உண்டு.  

இன்றைய உலக பொருளாதா ஒழுங்கில் இரண்டு பிரதான மோதல் வலுவானதாக உள்ளது. ஒன்று அமெரிக்க சீன முரண்பாடு, இது பெருமளவுக்கு உலக வங்கிக்கு பதிலீடான வங்கிக் கட்டமைப்பை உருவாக்குவதென்பதை மட்டும் கொண்டிராது உலக வங்கியையே நெருக்கடிக்குள்ளாக்குவதாக உள்ளது. குறிப்பாக ஆசிய வங்கிக் கட்டமைப்பு வங்கியினதும் BRIC வங்கியினதும் உருவாக்கம் உலக வங்கியினை ஆட்டங்கான செய்யப் போகின்றது என்ற குழப்பத்தினை மேற்குலகத்திற்கு ஏற்படுத்தியது.  BRIC வங்கியின்  ஸ்தாபிதத்தை குழப்புவதற்கு இந்தியாவுடனான நெருக்கத்தினை அதிகரித்த மேற்கு அதன் வளர்ச்சியை இந்தியாவை வைத்தே கையாளத் திட்டமிட்டுள்ளது. இதனாலேயே சீனாவும் ஏனைய  BRIC நாடுகளும் உலக வங்கி மீதான அதிருப்தி போக்கினை வெளிப்படுத்த ஆரம்பித்தன. ஆனாலும் உலக வங்கியை அமெரிக்க வங்கியாக அல்லது மேற்குலக வங்கியாக மாற்றுவது பற்றிய எண்ணப்பாங்குடன் அமெரிக்காவின் செயல்பாடு வளர்ந்து வருகிறது. உலக வங்கியின் தலைமையை அமெரிக்கரோ அல்லது அமெரிக்காவின் எடுபிடிகளோ வகித்தால் அமெரிக்க நலன்கள் பாதிக்காது எனக் கருதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலை உருவாகுவதற்கு சீன சார்பில் எழுந்துள்ள வர்த்தக, வரி மற்றும் பொருளாதார முதலீடுகளுக்கான ஒத்துழைப்புமே காரணமாகும். உலகம் முழுவதும் சீனாவின் கடன்பொறி அதிகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதாவது உலக வங்கியும் அமெரிக்காவும் மேற்கும் கடைபிடித்த பொருளாதார கொள்கைக்கான ஏக போகத்தினை சீனா தனதாக்கிவிடும் என்ற எச்சரிக்கை சார்ந்த நிலையினாலேயே கடன்பொறி பற்றிய பிரச்சாரத்தினை அமெரிக்கா முன்வைத்தது. இது பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தியிருப்பதுடன் உலக வங்கியின் திட்டமிட்ட நலன்களை அடைய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.  

இரண்டாவது, உலக அரசாங்கங்கள் மீதான நிதி நிறுவனங்களதும் வங்கி அமைப்புக்களதும் ஆதிக்கம் வளர்ந்திருப்பது பிரதான மோதலாக உள்ளது. இது உலகளாவிய ரீதியில் அரங்கேறியுள்ள பிந்திய முதலாளித்துவத்தின் சிந்தனையாக உள்ளது. இதனை நட்பு முதலாளித்துவம் என பொருளியல் கோட்பாடுவாதிகள் குறிப்பிடுகின்றனர். இது ஒர் அரசியல் பொருளாதார களத்துக்கான பாதையாகவே அமைந்துள்ளது. உலகளாவிய வங்கிக் கட்டமைப்புக்குள் சரிவை அடுத்து ஏற்பட்டுள்ள புதிய உபாயமாக உள்ளது. இதில் தனியார் வங்கிச் சேவைகளது பங்கும் அரச வங்கிச் சேவைகளது பங்கும் காணப்படுகின்றது.  

எல்லா நாடுகளது பொருளாதார கொள்கைகளும் நிதியளவினை மையப்படுத்தியே வகுக்கப்படுகின்றது. அதிலும் பின்தங்கிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கையை வரைவதில் நிதிக்கு அதிகமான பங்குள்ளது. நிதி நிறுவனங்களும் அவற்றின் கொள்கைகளும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கங்களை கையாளுவதுடன் அவற்றை மாற்றி அமைக்கும் வல்லமையும் காணப்படுகின்றது. ஆட்சி கவிழ்ப்புகளும் மக்கள் கிளர்ச்சிகளால் ஏற்படும் மாற்றங்களும் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வுகளுக்குள்ளால் அரசாங்கங்களை இடம் மாற்றும் வல்லமை உடையவையாக உள்ளன. நிதி நிறுவனங்களாலேயே நாடுகளின் உற்பத்திகளும், நுகர்வுகளும் தீர்மானிக்கப்படுகின்ற அளவுக்கு வல்லமை பொருந்தியவையாக மாறிவிட்டன. இத்தகைய நிதி நிறுவனங்கள் உலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனை பெற்றுள்ளன. அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள், மக்கள் அனைத்துமே நிதி நிறுவனங்களது விருப்புக்கு உட்பட்டே காணப்படுகின்றன.  

பொருளாதார சுபீட்சமும் நாடுகளது அபிவிருத்தியும் நிதி நிறுவனங்களது விருப்புக்களால் வடிவமைக்கப்படுகின்றன. உலகளாவிய நிதிக் கொள்கைகளால் உலகம் ஆளுகை செய்யப்படும் வடிவம் ஒன்று எழுச்சியை காண முடிகின்றது. இது அரசாங்கங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்குமான மோதலாக மாறிவருகிறது. இத்தகைய மோதலை சரி செய்யவும் உத்திகளையும் அவ்வகை நிதி நிறுவனங்கள் தமதாக்கியுள்ளன. 2008 செப்டெம்பர் நிதி நெருக்கடிக்கு பின்பு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அரசாங்கங்களை நேரடியாக கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டன. ஐப்பானிய வங்கிகள் மைனஸ் (–)  இலாப கடன்திட்டங்களை தமது நாட்டின் அறிமுகப்படுத்தியுள்ளன.  இதன் மூலம் அரசாங்களை நிலைத்து நிற்கும் நிறுவனமாக மாற்றமுடியுமென்ற வாதங்களும் கடனில் மூழ்காத சூழலை தருவிக்க முடியுமெனவும் கூறப்படுகின்றது.  

எனவே உலக வங்கியின் தலைமை இராஜினாமா செய்த விவகாரம் பெரும் மோதல் போக்கின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இத்தகைய மோதல் போக்கில் அமெரிக்க வங்கியாக உலக வங்கியை மாற்ற முயல்வதென்பது அதன் போக்கினையும் திட்டமிடல்களையும் பாதிப்பதாகவே அமையும். அத்தகைய நிலைப்பாடு சீன சார்பு அணிக்கு இலாபகரமானமாக அமைய வாய்ப்பு உண்டு.    

Comments