தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் மற்றும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது மற்றொரு பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் அவரது கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் அமைந்திருக்கும் பெரும் பங்களாவில் சில திருடர்கள் நுழைந்து சில பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர். அதன் பின்னர் நடக்கும் விசாரணையில், பணம் கொள்ளைபோகவில்லை எனவும் சில இறுவட்டுகள், பென் டிரைவ்கள், சில ஆவணங்கள் என்பனதான் திருடப்பட்டதாகவும் பொலிஸ் கூறியது. திருடர்கள் பிடிபட்டு பிணையில் வெளிவருகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழக்கிறார். கேரளாவில் இன்னொரு விபத்து நடக்கிறது. சந்தேக நபர், அவர் மனைவி, பிள்ளை ஆகியோர் விபத்தில் சிக்கியதில் சந்தேக நபர் காயங்களுடன் தப்பிவிட, மற்ற இரண்டு பேரும் மரணித்து விடுகின்றனர். பின்னர் கொடநாடு பங்களாவில் சிசிடிவி கெமரா இயக்குபவராக பணியாற்றிவரும் ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொள்கிறார். இக் கொள்ளையையடுத்து நிகழும் இச் சம்பவங்களில் ஐவர் மரணித்து விடுகின்றனர்.
இந்த மரணங்கள் அனைத்தும் தற்செயலானவை அல்ல என்ற கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்தாலும் ஆதாரங்கள் இல்லாததால் அமுங்கி விடுகின்றன. எனினும் சில விமர்சகர்களும் தி.மு.க பிரமுகர்களும், நடைபெற்ற மரணங்களை எடுத்துக் கொண்டு பரிசீலிக்கும் போது அக் கொள்ளையானது பொலிஸார் சொல்வது போல சாதாரண கொள்ளையாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் பணத்துக்கு அப்பால் தமக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் எனவே இக் கொள்ளை சில ‘பெரிய’ மனிதர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
சில அற்ப விஷயங்களின் பின்னால் பெரிய மனிதர்களும், பெரிய விஷயங்களும் இருந்திருப்பது இதற்கு முன்னரும் நடைபெற்றிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தலைமையகமான வோட்டர் கேட் கட்டடத்தில் இருவர் அத்துமீறி நுழைந்திருந்தனர். அரவம் கேட்டு ஓடி விட்டனர். யாரோ சில்லறைத் திருடர்களாக இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். உண்மை மெதுவாக வெளிவரத் தொடங்கியதும் தான், அது எவ்வளவு பாரதூரமான விஷயம் என்பது தெரியவந்தது. அடுத்த வரவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சியினர் எவ்வாறான வியூகங்களை வகுக்கவுள்ளனர் என்பதை இரகசியமாக அறிந்து கொள்வதற்காக ஒலிவாங்கிகளை மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் குடியரசு கட்சியால் ஏவப்பட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. வோட்டர் கேட் அலுவலகத்தை சோதித்து பார்த்தபோது சக்திவாய்ந்த சிறிய ஒலி வாங்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சினை பூதாகரமானது. அப்போது ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார். அவர் வெற்றிபெற்றிருப்பது மோசடியானது எனக் கிளர்ந்தெழுந்த ஜனநாயகக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்திலும், இவ் விவகாரத்தை மறைப்பதற்காக நிக்சன் அடுத்தடுத்து செய்த தவறுகளும் இறுதியாக அவரை பதவி துறக்க வைக்கிறது. நேர்ந்தது. வியட்நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த, சீனாவுடன் நல்லுறவுகளை ஆரம்பித்த அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவரான ரிச்சர்ட் நிக்சன் இறுதியாக அவமானப்பட்டவராக பதவியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது!
கொட நாடு பங்களா திருட்டிலும் இத்தகைய ஒரு பூதம் பதுங்கி இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி!
இந்த பங்களா திருட்டு தொடர்பாக கடந்த வாரம் டெஹல்கா என்ற இணைய ஊடகம் ஒரு 15 நிமிட காணொளியை வெளியிட்டது. அதில், அத் திருட்டில் சம்பந்தப்பட்டவரான சியான் என்பவர் டெஹல்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
இத் திருட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி ஜெயலலிதா அம்மையார் அபல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த சமயமே, அந்த ஆஸ்பத்திரியில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டதாக அவர் சொல்கிறார். இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடித் தொடர்புடையவர் என அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதனால், தேர்தல் அண்மித்து வரும் இப்பொழுதில் இக்காணொளி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவ் விவகாரத்தை தமிழக பொலிஸ் விசாரிக்கக் கூடாது என்றும் சி.பி.ஐக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். வேறு ஒரு தரப்போ, தமிழக பொலிஸ் முதல்வருக்குக் கீழ் வருவதால் தமிழக பொலிஸார் இதை விசாரிக்கக் கூடாது என்ற கூற்று எப்படி உண்மையானதோ அதேபோல சி.பி.ஐ. தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு இருப்பதாலும், அதன் தலைவர் ஆலோக் வர்மாவை பதவி நீக்கியதும். அது செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்து மீள்நியமனம் செய்ததும் அதிரடியாக அவரை இடமாற்றம் செய்தது என பிரதமர் மோடி வெஞ்சினத்துடன் ஆலோக் வர்மா விஷயத்தில் நடந்து கொண்டது என்பன சி.பி.ஐயின் நன்மதிப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதால் அரசியல் பின்னணி கொண்ட இவ்விவகாரம் சி.பி.ஐயிடம் வழங்கப்படக் கூடாது என்று சுட்டிக் காட்டுகிறது.
இந்த பங்களா திருட்டில் பல மர்மங்கள் இருப்பதாலும் செல்வாக்கு படைத்தவர்கள் சம்பந்தப்படுவதாலும் நீதிமன்றமே இதை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டு வெளிமாநிலங்களைச் சேர்ந்த உயர் புலனாய்வு பொலிஸாரை நியமித்து பாரபட்சமற்ற விசாரணையை நடந்த வேண்டும் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை தமிழ் நாட்டில் விசாரித்தால் அது நேர்மையாக நடப்பதில் பிரச்சினைகள் எழலாம் என உணரப்பட்டதால்தான் அவ் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது என்பதை இவர்கள் உதாரணமாக குறிப்பிடுகின்றனர்.
டெஹல்கா இணையப்பத்திரிகை, இதற்கு முன்னர் பல முக்கியமான உயர் மட்ட விஷயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. பெரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்து காட்டியிருக்கிறது. ஒரு முறை இந்திய ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்தபோது ஜே. அப்துல்கலாம் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வாங்கிக் காட்டியிருந்தது. எனவே டெஹல்காவின் இந்த காணொளியை அபத்தம் என அலட்சியம் செய்துவிட முடியாது. ஏனெனில் பொறுப்பற்ற வகையிலான ஒரு தகவலை வெளியிட்டு அதுவும் தமிழக முதல்வர் என்ற உயர் பதவியில் உள்ளவரை பகைத்துக் கொண்டு அதன் பின்விளைவுகளை அனாவசியமாக சந்திக்க விழையமாட்டார்கள்.
ஜெயலலிதா – சசிகலாவின் கொட நாடு தோட்டமும் பங்களாவும் பிரமாண்டமானவை. அங்கே கார் சாரதியாக நாகராஜ் என்பவரை நியமிக்கிறார்கள். அவர் எடப்பாடியாரின் உறவினர். எடப்பாடி ஜெயலலிதாவுக்கு மிக விசுவாசமானவர். அம்மாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். எனவே எடப்பாடியின் சிபாரிசின் பேரில் அவரது உறவினரான நாகராஜாவை கொட நாட்டு பங்களா சாரதியாக நியமனம் செய்கிறார்கள்.
பல வருடங்களாக அங்கே வேலை செய்யும் நாகராஜ் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாவில் இருந்து விலகிச் செல்கிறார். அவருக்கு அந்த பிரமாண்டமான பங்களா அத்துப்படி. எது எங்கே இருக்கும், அங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நோய், என்னென்ன பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், படிப்படியாக அவரது உடல் நிலை வலுவிழந்து வருகிறது என்பதும் நாகராஜுக்குத் தெரியும். முதல்வர் அபல்லோவில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போது என்ன நடக்கப்போகிறது என்பதை நாகராஜ் அனுமானித்து விடுவதைப்போலவே அவரது மறைவின் பின்னர் தமிழக அரசியலில் ஏற்படக் கூடிய வெற்றிடம், அவர் சேர்த்து வைத்திருக்கும் பெருமளவு பணம், சொத்து என்பனவற்றுக்கு என்ன நடக்கும் என்பதை அ.தி.மு.வின் உயர் மட்டத்தினரும் தீர்மானித்து விடுகின்றனர்.
முதல்வரின் சுகவீனத்தையடுத்து பலரின் கவனமும் ஜெயலிலதா மீது திரும்ப, கொடநாட்டின் மீதான கவனம் குறைவதாக கணிக்கிறார் நாகராஜ். இந்த சந்தர்ப்பத்தில் கொட நாட்டு பங்களாவினுள் நுழைந்தால் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான கணக்கில் வராத பணத்தையும் நகைகளையும் சுருட்டலாம் என்பது நாகராஜின் எண்ணம். எனவே அவர் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சகாக்களைத் திரட்டுகிறார். மொத்தம் ஐந்துபேர். அவர்கள் திருட்டுக்கு நாள் குறிக்கும்போது ஜெயலிலதா இறந்துவிடுகிறார். கழகத்தில் குழப்பம் ஏற்படுகிறது. முக்கிய அரசியல் நிகழ்வுகள் எல்லாம் சென்னையை மையமாகக் கொள்கின்றன. இதுதான் சரியான சந்தர்ப்பம் எனக் கருதும் கொள்ளைக் கோஷ்டி, ஒரு நாள் கொடநாடு பங்களாவுககுள் நுழைகிறது. வாசலில் அவர்கள் இரண்டு காவலாளிகளை எதிர்கொள்கின்றனர். மோதலில் ராவ் பகதூர் என்ற காவலாளி மரணமடைகிறார்.
உள்ளே நுழையும் அவர்கள் பணம் எங்கே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தேடுகின்றனர். எதிர்பார்க்கப்பட்ட மாதிரி பணம் கிடைக்கவில்லை. இறுவட்டுகள், பென்டிரைவ்கள், ஆவணங்கள் என்பனவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றனர்.
இதன் பின்னர் விசாரணை நடக்கிறது. திருடர்கள் பிடிப்படுகிறார்கள். ஒன்றும் பெரிதாக திருட்டு போகவில்லை என பொலிஸ் தெரிவிக்கிறது. பல சந்தேகங்கள் எழுந்தாலும் வழக்கு, சாதாரண திருடர்களின் கைவரிசை மாதிரி மூடி மறைக்கப்படுகிறது.
அச் சமயத்தில் தமிழக முதல்வராக இருப்பவர் பன்னீர்செல்வம். எடப்பாடிக்கு தனக்கு முதல்வர் வாய்ப்பு வரும் என்றே தோன்றாத காலம் அது. தினகரனின் சித்தி வீட்டில்தான் திருட்டு நடைபெற்றாலும் எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் தினகரன், இது பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்.
ஆனால், இத் திருட்டுடன் சம்பந்தப்படுபவர்கள் ஒருவர் பின் ஒருவராக ‘தற்செயல்’ மரணத்தைத் தழுவுகின்றனர். கொள்ளையர் தாக்குதலில் ஒரு காவலாளி மரணமடைகிறார். பங்களாவில் 78 சி.சி.டிவி கமராக்கள் உள்ளன. எனவே அவற்றை இயக்குவதற்கு பொறுப்பாக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். திருடர்கள்உள்ளே நுழைந்து வெளியேறுவது வரையிலான காலப்பகுதியில் இக் கண்காணிப்பு கமராக்கள் வேலை செய்யவில்லை. இவர்கள் வரப்போவதை அறிந்து ஏற்கனவே கெமராக்கள் நிறுத்தப்பட்டிருந்தனவா அல்லது நாகராஜ் அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்தாரா என்று தெரியவில்லை. இக் கெமரா இயக்கத்துக்கு பொறுப்பானவர் பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்.
கேரளாவில் ஒரு வீதி விபத்து நடக்கிறது. நாகராஜ் அவ்விபத்தில் பலியாகிறார். இவர்தான் இத்திருட்டின் மூலகர்த்தா. அதன் பின்னர் கர்நாடகாவில் ஒரு வீதி விபத்து நடைபெறுகிறது. அதில், தற்போது டெஹல்காவில் பேட்டியளித்திருக்கும் சயான், அவர் மனைவி மற்றும் பிள்ளை சிக்கிக் கொள்கின்றனர். மனைவியும் பிள்ளையும் மரணமடைய சயான் காயங்களுடன் தப்பிவிடுகிறார். மொத்தம் ஐந்து மரணங்கள்: சிறு சம்பவமாகக் காட்டப்படும் ஒரு கொள்ளையைத் தொடர்ந்து ஐந்து மரணங்களும் நிகழ்கின்றன.
இந்தத் திருட்டு இயல்பானதாக நடைபெறவில்லை. அபல்லோவில் திட்டமிடப்பட்டு எடப்பாடியின் ஏற்பாட்டில் இத்திருட்டை அவரது உறவினரான நாகராஜ் மேற்கொள்கிறார் என்கிறார் சயான்.
அச் சமயத்தில் எடப்பாடியார் ஒரு முன்னணி அ.தி.மு.க பிரமுகர் மட்டுமே. ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தாலும் அவரைப் பார்க்க சசிகலா எடப்பாடிக்கு அனுமதி வழங்கவில்லை. முதல்வராகும் வாய்ப்பு வரும் என அவர் அப்போது கனவிலும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, எடப்பாடியார் தனது உறவினரான நாகராஜை பயன்படுத்தி திருட்டுக்கு அப்பால் வேறு ஏதோ காரணங்களுக்காக இத் ‘திருட்டை’ நடத்தியிருந்ததாக வைத்துக் கொண்டாலும், கொடநாடு பங்களாவுக்குள் நுழைத்து தமக்கு சாதகமான ‘ஏதோவொன்றை’ செய்யும்படி எடப்பாடிக்கு உத்தரவிட்டவர் யார்? என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
தோட்டத்துக்கு அண்மையில் மேலும் இரண்டாயிரம் ஏக்கர் காணி வாங்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. இது போலவே, வெளியே தெரியவராத பலசொத்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவற்றுக்கான பத்திரங்கள் கொடநாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
எனினும், அந்த பங்களாவுக்குள் எப்போது வேண்டுமானாலும் சென்று வரக்கூடியவர்களான சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் இத்திருட்டை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறானால், அந்த அவசியம் யாருக்கு இருந்திருக்கிறது? திருட்டுக்கு உத்தரவிட்டவர்கள் யார்? திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தடுத்து மர்மமானமுறையில் இறந்ததைப் பார்க்கும் போது, இது சாதாரண திருட்டாகத் தெரியவில்லை.
இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வெளிமாநில புலனாய்வாளர்களினால் மேற்கொண்டால்தான் உண்மை வெளிவரும் என்ற யோசனையில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.
அருள் சத்தியநாதன்...