ஈரான் -அமெரிக்க உறவு பிராந்திய அரசியலில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் அதிக நெருக்கடியை உருவாக்குமென்ற எண்ணம் வளர்ந்துவருகிறது. ஈரான் ஆரம்பத்தில் இருந்த நிலையை சற்று மாற்றிக் கொண்டிருப்பதுடன், உலகளாவிய தளத்தில் இரு பக்கங்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது அதன் எதிர்கால இருப்புக்கானதாகவே தென்படுகிறது. கடந்த வாரம், இதே பகுதியில் ஈரானின் பலவீனங்களை அவதானித்தோம். தற்போது அதன் போக்கில் மாற்றம் நிகழ ஆரம்பித்துள்ளது என்பதை நோக்குவது பொருத்தமானதாக அமையும். வெளிப்படையாக கூறுவதானால் ஈரான் ஒரு போரைத் தவிர்க்க தயாராகிவிட்டது. அது தற்போதைய நிலையில் ஈரானின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பானது. இக்கட்டுரை ஈரானின் பிந்திய உபாயங்களை விளங்கிக் கொள்வதாக அமையவுள்ளது.
ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஈரான் தயார் என அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போதே இது குறித்து அவர் குறிப்பிடும் போது நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளோம் அமெரிக்கர்கள் பொருளாதார தடையை நீக்கி திணிக்கப்பட்ட பொருளாதார அழுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து ஒப்பந்தத்திற்கு திரும்பினால் இப்போதே எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இது ஈரானின் பிந்திய முடிவாகவுள்ளது. ஈரானைப் பொறுத்தவரை தனது இலக்கை வெளிப்படுத்திக் கொள்வதில் கரிசனை கொண்டு விளங்குகிறது. தன்மீதான பொருளாதாரத் தடையை இல்லாது செய்வதிலும் அத்தகைய கோரிக்கையை கைவிடாதும் அதே நேரம் முழுமையாக அமெரிக்காவுடன் பேச்சுக்களை எதிர் கொள்ளவும் தயராக உள்ளது என்பது அதன் தந்திரோபாய நகர்வாகவே தென்படுகிறது. குறிப்பாக ஈரானின் அரசியலில், தற்போது எழுந்துள்ள பிரச்சினை அணுவாயுதம் என்பதை விட பொருளாதார நெருக்கடியாகும் அதனை வெற்றி கொள்வதற்கு சில உபாயங்களை வகுத்துள்ளது. பேச்சுவார்த்தை பற்றிய முடிவிலும் அமெரிககாவுடன் பேசுவதென்ற முடிவிலும் ஈரான் தெளிவான கொள்கை வகுப்பினைக் கொண்டுள்ளது. அதாவது தற்போது தான் ஈரான் சரியான திசையில் அமெரிக்காவையும் மேற்குலகத்தையும் கையாளத் தொடங்கியுள்ளது. சர்வதேச அரசியலில் கையாளுகை என்பது அதி சக்திவாய்ந்த விடயமாகும். ஒரு நாட்டுடன் மோதுவதும் வெற்றி கொள்வதுவும் தனித்து ஆயுதபலத்தினால் அமைந்து விடுவதில்லை மாறாக உத்திகளாலும் உபாயங்களாலும் வகுக்கப்படும் அணியினராலுமே வெற்றி சாத்தியமாவதுண்டு.
இவ்வாறான அரசியல் நடத்தையை பல தலைமைகள் கடந்த நூற்றாண்டில் நிகழ்த்திக் காட்டியுள்ளன. தந்திரமான நகர்வுகளையும் மேற்கு வகுத்துள்ள சட்டவரைபுகளுக்குள்ளும் நிறுவன அமைப்புக்களுக்குள்ளும் நின்று செயல்படுவதே தற்போதைய அரசுகளின் வெற்றி வாய்ப்பாகும். அதற்கான தயாரிப்பினை கொண்டு இயங்க வேண்டிய கடப்பாடு தலைமைகளுக்கே அதிகமுண்டு. அந்த வகையில் ஈரானின் நகர்வுகள் கொள்கையையும் கோரிக்கையும் விட்டுக் கொடுக்காது அதே நேரத்தில் தந்திரத்தின் மிக உச்சமான பேச்சுவார்த்தை என்பதை முன்னிறுத்தி செயல்படுவதென்பது மிக சிறந்த அரசியல் நகர்வாக தென்படுகிறது.
இத்தகைய அறிவிப்பு வெளியானதும் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இரு நாட்டுக்குமான பேச்சுக்களை நடாத்தவும் மத்தியஸ்தராக பணிபுரியவும் தாம் தயாராக இருப்பதாகுவம் இரு நாட்டுக்குமான மோதல் உலகளாவிய ரீதியில் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார். காரணம் அமெரிக்காவினதும் பிரித்தானியவினதும் நடவடிக்கையால் ஈரான் யூரேனியத்தினை மீளவும் செறிவூட்ட ஆரம்பித்துள்ளது என்ற செய்தியாகும். இது முழுமையாக ஈரானின் அணு வல்லமையை அதிகரிப்பதாக அமைந்துவிடும் என்ற உணர்வின் பிரதிபலிப்பாகவே உள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்கா ஈரானின் அணுவாயுத தயாரிப்புக்கான முயற்சியை முறியடிக்க திட்டமிட்டுள்ளது என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அத்தகைய போக்கினை கையாளுவதற்கு ஈரான் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாகவும் பாதுகாப்பு நடவடிக்கையை ஏவுகணை மூலமும் மற்றும் ஆகாயப் பரப்பில் தடுப்பினை ஏற்படுத்துமளவுக்கு ஈரான் உசாரடைந்துள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வு தகவல்கள் பென்ரகனுக்கு தெரிவித்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவும் அத்தகைய ஈரானின் முயற்சியை முறியடிக்க பில்லேடனை அழித்த அதே உத்தியை கையாள முனையலாம் என்ற ஊகிப்புகளும் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. எதுவாயினும் பிரான்சைப் பொறுத்தவரை மீள ஒரு போர்ச் சூழலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமன்றி, ஈரானின் அணுவாயுத உற்பத்தியை தடுக்க வேண்டும் என்ற நோக்குடனும் மத்தியஸ்தத்தை திட்டமிட்டுள்ளது. அதில் பிரான்ஸ் மட்டுமல்ல ஜேர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளும் செயல்படுகின்றன. மீண்டும் ஒரு போர் என்பதல்ல ஈரான் அணு வலுவைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் ஐரோப்பா கவனமாக செயல்படுகிறது.
எனவே ஈரானின் தற்போதைய போக்கு அந்நாட்டுக்கு ஆரோக்கியமான அரசியலை தரவல்லதாக மாறியுள்ளது. அமெரிக்காவின் போக்கிலும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுடன் ஐரோப்பாவின் நகர்வுகள் ஈரானின் அரசியல் போக்கினை பாதுகாப்பதற்கான வாய்ப்பினை தந்துள்ளது. மிகவும் வலுவான இன்னோர் கோரிக்கையை ஈரான் அமெரிக்காவிடம் விடுத்துள்ளது. அதாவது அமெரிக்கா தன்னுடன் அணுவாயுதம் பற்றி பேசவேண்டுமாயின் தமது பிராந்தியத்தில் ஏவுகணைகளையோ மற்றும் ஆயுதங்களையோ விற்பனை செய்வதையோ அல்லது விநியோகம் செய்வதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கா போகக்கூடாது என ஈரானிய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனவே தற்போது தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பத்தை ஈரான் அமொக்காவுக்கு கொடுத்துள்ளது. அதில் அமெரிக்காவின் அடுத்த கட்டம் எதுவாக அமையப் போகின்றது என்பதுவும் ஐரோப்பாவின் நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்தே தீர்மானம் சாத்தியமாகும். ஏறக்குறைய ஒரு யுத்தத்திற்கான சூழல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான உபாயத்தினை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரனுக்கு பின்னால் சீனாவும் ரஷ்யாவும் இருக்கும் வரையும் அமொக்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும் என்பதை மறுக்கமுடியாது.