![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/01/colvm-boris-johnson-105643961_7327447_31082019_EPW.jpg?itok=DGfBcIPO)
பிரித்தானியப் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வு சர்வதேச மட்டத்தில் மீண்டுமொரு நெருக்கடியை அந்த நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது. பிறிக்சிட் விவகாரம் பிரித்தானியாவை எல்லையில்லாத அரசியல் குழப்பத்திற்குள் தள்ளிவருகிறது. அது மூன்று பிரதமர்களை ஒரே ஆட்சிக் காலத்தில் ஆட்சியில் அமர்த்த காரணமாகியுள்ளது. இதனால் உலகத்திற்கே பாராளுமன்ற அரசியலையும் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் முன்மொழிந்த நாடு அவை எல்லாவற்றையும் இழக்கும் நிலைக்கும் உறுதியில்லாத ஆட்சியை எதிர்கொள்வதற்கும் காரணமாக மாறிவருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ஜவகர்லால் நேரு ஐரோப்பா பற்றிய தனது பதிவில் ‘அது ஒரு குடியேற்றவாசிகளது தேசம்’ என்பது போல் மீள அந்த தேசத்தில் நிகழ்வதனை காணமுடிகிறது. எனவே, தற்போது எழுந்துள்ள பிரிட்டனின் அரசியல் போக்கில் ஏற்பட்டுவரும் சமகால நிகழ்வுகளையும் அதன் தாக்கத்தையும் நோக்குவது பொருத்தமான பதிவாக அமையும்.
பிரிட்டன் பாராளுமன்றத்தை செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான ஐந்து வார காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதற்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் முன்வைத்த முடிவிற்கு இராணி ஒப்புதல் அளித்துள்ளார்.
இக்காலப் பகுதியில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் காலப்பகுதியாக அமைந்துள்ளது.
குறிப்பாக அடுத்த 65 நாட்களில் அவ்வமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் காலமாகவுள்ளமை கவனிக்க வேண்டிய விடயமாகும். அக்டோபர் 31 முன்னான காலப்பகுதியாக பாராளுமன்ற இடைநிறுத்தம் அமைந்துள்ளது.
காரணம் இவ்விடயம் பாராளுமன்றத்தில் மூன்று தடவை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது தோல்வியை அடைந்திருந்தது. முன்னாள் பிரதமர் திரேசா மே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் போது ஓர் உடன்பாட்டின் கீழ் விலகலாமென்ற முடிவினை முன்வைத்து அவ்வுடன்பாட்டின் அம்சங்களை முன்வைத்து வாக்கொடுப்பினை நிகழ்த்தியிருந்தார். அதில் எவற்றிலும் வெற்றி பெறவில்லை என்பது தெரிந்த தகவலாகும். எனவே தற்போதைய பிரதமர் ஜோன்சன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி விட்டு ஐரோப்பிய யூனியன் விடயத்தை கையாளலாம் என்ற நோக்குடன் செயல்படுவதாக எதிர்த் தரப்பான தொழில் கட்சி வாதிடுகின்றது.
அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தி-ருப்பதுடன் ஒரு மில்லியன் கையெழுத்தினை திரட்டவும் அக்கட்சி- தீர்மானித்துள்ளது. அத்துடன் இராணியின் ஒப்புதலை அடுத்து அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டுள்ள எதிர்க்கட்சியினர் அவருக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்க திட்டமிட்டு வருகின்றமையும் அவதானிக்கத்தக்க விடயமாகவுள்ளது.
இதே நேரம் பாராளுமன்றம் இடைநிறுத்தியது தொடர்பில் பிரித்தானிய எதிர்க்கட்சியினரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் வெளிப்படுத்திய கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
தொழிற் கட்சியில் அதிகாரம் பொருந்தியவரும் இரண்டாம் நிலைத் தலைவருமான ஜோன் மைடொனாட் இது ஒன்றும் தவறு கிடையாது, ஆட்சியின் சதி எனக்குறிப்பிட்டுள்ளார்.
இது பிரதமரின் உபாயம்.
திட்மிட்ட ஜனநாய நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மீறலாகவே கருதப்படுகிறது. பாராளுமன்றத்தை முடக்கி அரசியல் நிகழ்த்தும் துயரம் பிரித்தானிய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது அநாகரீகமான அரசியலாகவே தென்படுகிறது.
இதனை சரிசெய்யவே அதிகார ரீதியில் ஏற்றுக் கொள்ளவோ முடியாது என பிரிட்டன் உயர் சபை குறிப்பிட்டுள்ளது. இது மிக மோசமான சட்டரீதியான உத்தரவு எனவும்’ அச்சபை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி தனது டுவிட்டரில் தெரிவிக்கும் போது பிரதமருக்கு எதிரான தொழில் கட்சித் தலைவரது நம்பிக்கையிலாத தீர்மானம் மிகக் கடினமானது. உண்மையில் தற்போது கவனிக்க வேண்டிய விடயம் என்றால் பிரதமர் ஜோன்சன் பிரிட்டன் முதல்தர தேசம் என்பதை நிறுவுவதற்கு தயாராக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பிரிட்டன் மிக நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் தொடர்பில் அதிக சிக்கலைக் கொண்டு இயங்குகின்ற தேசமாக மாறிவருகிறது.
மீண்டும் ஒரு பொது வாக்கொடுப்புக்கு போவது பற்றிய உரையாடலும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் பிரித்தானிய ராணி அடுத்த 14ஆம் திகதி இது தொடர்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றினை ஆற்றப் போவதாக பிரதமரும், அவரது கட்சியினரும் முன்வைத்து வருகின்றனர். அத்தகைய உரை பிரிட்டனின் ஐரோப்பிய உறவின் நிறைவு உரையாக அமையும் என்ற எதிர்பார்க்கை எல்லாத் தரப்பிடமும் காணப்படுகிறது.
ஆனால் கன்சவேட்டிவ் கட்சியானது தமது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ள பிரதான அரசியல் குழப்பத்தினை சரி-செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுமாயின் அதன் எதி-ர்காலம் கேள்விக்குரியதாகும் என்ற விமர்சனமும் அதன் மீது எழுந்துள்ளது.
அதற்காக இது தற்போது கடைப்பிடித்துவரும் நடைமுறையானது, வெளிப்படையாகவே ஜனநாயக மீறல் என்றே தெரிகிறது. அதனை சரி செய்யமுடியாத நிலை ஏற்படும் போது தற்போதைய நிலையை விட மோசமான சூழலை கன்சவேட்டிவ் கட்சி எதி-ர்நோக்க நேரிடும்.
ஜனநாயக ஆட்சியை உலகத்திற்கு தந்த தேசத்தில் ஜனநாயகம் வெளிப்படையாக மீறப்படுவது அதன் அரசியல் பண்பாட்டு பலவீனத்தை காட்டுகிறது. ஜோன்சன் ஆட்சிக்கு வரும் போது அமெரிக்க அதிபருடன் ஒப்பிடப்பட்டார்.
இருவரும் ஒரே மனநிலையுடைவர்களாக, ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால் அதனை நிறுவுவதாக பிரதமரது தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.
எனவே, ஐரோப்பிய யூனியன் பிரிட்டனின் அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அதன் ஐக்கிய இராஜ்ஜியம் என்கின்ற வரைபிலும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய விடயமாக அமையவுள்ளது. அதிகமான நெருக்கடியை எதிர் கொள்ளும் போது ஐரிஸ் மற்றும் ஐரிஸ் குடியரசுகளது அரசியல் இருப்பு ஐரோப்பிய யூனியனுடன் மட்டும் தொடர்புபட்டதாக அமையாது மாறாக அதனைக் கடந்து தனித் தேசமாகும் அரசியல் கொள்கைக்கு வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்