உலகப் பொருளாதார சிதைவுக்காகவா ஈரானுடனான போரை சவூதி கைவிட்டது? | தினகரன் வாரமஞ்சரி

உலகப் பொருளாதார சிதைவுக்காகவா ஈரானுடனான போரை சவூதி கைவிட்டது?

மேற்காசிய அரசியல் களம் தினம் தினம் சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது. அடிக்கடி திருப்பங்களும் அதிரடிகளும் உடையதாக அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வளம் மீது ஹவூதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடாத்திய பின்பு ஈரான் மீதான குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமாகின. அமெரிக்கா அப்பிராந்தியம் நோக்கி தனது படைகளை அனுப்பியது. சவூதி அரேபியாவும் ஒரு தாக்குதல் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டது. தாக்குதலை நிகழ்த்தும் பிரசாரத்தையும் பிரகடனங்களையும் வெளியிட்டு வந்தது. சவூதி = -ஈரான் போர் தயார் என்ற செய்தி வெளிவரும் எனக் காத்திருந்த தரப்புக்களுக்கு சவூதி மன்னனின் முகமது பின் சல்மன்னின் செய்தி ஆச்சரியத்தை தந்தது. இக்கட்டுரையும் சவூதி அரேபிய ஆட்சியாளர் கூறும் உலகப் பொருளாதார சிதைவு தான் ஈரானுடனான யுத்தத்தை கைவிட வேண்டிய நிலையை ஏற்படுத்தியதா? என்பதை விளங்குவதற்கு முயல்கிறது.  

முதலாவதும் மிக முக்கியமானதுமான விடயமாக மிக அண்மையில் ஹவூதி கிளர்ச்சிப் படைகள் சவூதி அரேபிய இராணுவம் மீது நிகழ்த்திய தாக்குதலைக் குறிப்பிடலாம். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சவூதிப் படைகள் ஹவூதிக் கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான ஆயுத தளபாடங்களும் யுத்த தாங்கிகளும் அப்படைகளால் கைப்பற்றப்பட்டமை கவனிக்கத்தக்க விடயமாகும். ஹவுத்தி கிளர்ச்சிப் படைகள் வெளியிட்ட காணொளியானது சவூதிப் படைகள் சரணடையும் நிலையையும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஆயுதங்களை களையும் முறைகளையும் பார்க்கும் போது சவூதியின் படைப்பலத்தையும் அதன் தாக்குதல் திறனையும் அளவீடு செய்யக் கூடியதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் குறிப்பிட்ட பிரிவினரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். அனேக யுத்த தாங்கிகளை குண்டு வைத்து தகர்த்துமுள்ளனர்.  

இரண்டாவது, அமெரிக்காவின் அணுகுமுறையில் காணப்பட்ட குழப்பகரமான நிலையாகும். அதாவது சவூதி மீதான தாக்குதலை ஈரான் தான் மேற்கொண்டது எனக் குறிப்பிட்ட  அமெரிக்க ஜனாதிபதி 200 படையினரையே உடனடியாக அனுப்பியிருந்தார். இதனை சவூதி எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். காரணம் ஈராக்குக்கு எதிரான யுத்தம் போன்றல்லாது விட்டாலும் போர் புரிவதற்கான தாக்குதல் பிரிவை எதிர்பார்த்திருந்தது. சவூதி  படைப்பிரிவின் வலிமை மிகப் பலவீனமானது என்பது முன்கூட்டியே தெரிந்த விடயம். அதற்கு பின்பு சவூதி தனித்து தாக்குதல் நிகழ்த்த பலமில்லாத நிலையில் அமெரிக்காவும் கைவிடும் போது போர் சாத்தியமற்றது என்பது சவூதியின் முடிவாக அமைந்தது.  

மூன்று, ஈரானின் படைப் பலத்துடன் கிளர்ச்சிப் படைகளும் ஈரானின் புரட்சிப் படைகளும் கொண்ட வலிமையான இராணுவம், தாக்குதல் திறனுடன் ஈரானிடம் உண்டு என்பது சவூதி அரேபியாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. இந்த யுத்தத்தில் வெற்றி பெறமுடியாது என்பதே சவூதியின் நிலைப்பாடாக அமைந்திருந்தது. புவிசார் அரசியல் ரீதியிலும் சவூதியை விட ஈரான் பலமான நிலையில் காணப்படுகிறது.  

நான்கு, சவூதியுடன் ஈரானுக்கு எதிராக இணைந்துள்ள சக்திகளாக அமெரிக்காவும் இஸ்ரேலுமே பிரதான நாடுகளாகும். அவை தவிர்ந்த ஐரோப்பிய யூனியன் பெருமளவுக்கு போரில் நேரடியாக ஈடுபடும் சக்திகளாக இல்லை என்பதே பொது முடிவாகும். அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உள்நாட்டு அரசியல், குழப்பத்திற்குள் அகப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்ரேல் தேர்தல் எந்த கட்சியையும் ஆட்சியில் அமர்த்த முடியாத நிலைக்குள் தள்ளியுள்ளது. அதனால் கட்டளை பிறப்பிக்கவும் போரை வழிநடத்தவும் ஆட்சியாளர்கள் இல்லாத நாடாக விளங்குகிறது. அவ்வாறே அமெரிக்காவும் குழப்பத்தில் உள்ள தேசமாக விளங்குகிறது. குறிப்பாக உக்ரைன் ஜனாதிபதிக்கும் ட்ரம்ப்க்குமான தொலைபேசி உரையாடல் அதிகார துஷ்பிரயோகமாக மாறியுள்ளது. அது ஜனாதிபதியின் இருப்பையே ஆட்டங்காண வைக்குமளவுக்கு வளர்ந்துள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வேட்பாளராக நிறுத்தப்படுவது சந்தேகமாக மாறியுள்ளது. ஏறக்குறைய இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்நாட்டரசியலில் குழப்பகரமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இது சவூதி அரேபியாவின் நகர்வுக்கு நெருக்கடியை தந்துள்ளது.  

ஐந்து ஈரானின் நட்பு நாடான துருக்கி ரஷ்யத் தயாரிப்பு எஸ்.4000 ஏவுகணையை கொள்வனவு செய்துள்ளது. அது  துருக்கிய மண்ணில் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஈரானுக்கு பலமான ஓரம்சமாகவே பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி ஈரானின் மசகு எண்ணயை கொள்வனவு செய்யும் பட்டியலில் துருக்கி முதலிடத்திலுள்ளது. இந்தியா, சிரியா என்பனவும் வெளிப்படையாக அத்தகைய கொள்வனவில் ஈடுபட்டுள்ளன. சீனா அமெரிக்காவின் கொள்கைக்கு எதிராக ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துவிட்டது. எனவே ஈரானின் புவிசார் அரசியல் நட்பு சக்திகள் மிகப்பலமான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.  

ஆறு ஈரானின் ஜனாதிபதி அவசரமாக ரஷ்யா பயணமாகியமை அதிக குழப்பத்தை சவூதி தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய விஜயம் இருநாட்டுக்குமான இராணுவ உடன்பாடுகளையும் அரசியல் ஆதரவுக்கான தளத்தையும் விஸ்தரிப்பதாகவும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிரியாவின் அரசியல் இராணுவப் பரப்பினை நிரப்பியுள்ள ரஷ்யாவுக்கு இத்தகைய நகர்வு அதிக வாய்ப்பினை கொடுத்திருப்பதுடன் ஈரானுக்கான பாதுகாப்பினை உறுதி செய்துள்ளது. ஏறக்குறைய மேற்காசியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்பது இன்னோர் செய்தியாகும். அதே நேரம் ஈரானும் அத்தகைய பலத்தை நோக்கி நகர்வதாக மேற்குலக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.  

நிறைவாக ஈரானின் ஆட்சியாளரது உரைகளையும் இராணுவம் வெளியிடும் தகவல்களையும் அவதானித்தால் அதன் இராணுவ பலம் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. அதிலும் ஈரானிய புரட்சிப்படைத் தளபதி இஸ்ரேல் துடைத்தழிக்க தயார் என தெரிவித்தது.  அதிக சந்தேகத்தை ஏற்படத்தியுள்ளது. காரணம் இஸ்ரேல் மீது கைவைப்பது என்பது சாதாரண ஆயுதங்களாலோ அல்லது அடிப்படை போர்முறைமையினாலோ முடியாது. அப்படியாயின் ஈரானிடம் அணுவாயும் இருத்தல் வேண்டும்.

அப்படியான சூழல் நிலவினால் மட்டுமே இஸ்ரேல் மீது கைவைக்க முடியும். இதனைப் பார்க்கும் போது ஈரான் ஏற்கனவே யுரேனியம் செறிவூட்டும் வல்லமையை கொண்டுள்ளதனால் அது இராணுவ ஆயுதத்தை தயார் செய்து விட்டதாகவே தென்படுகிறது.

அதனாலேயே சவூதி தரப்பு போரைப் பற்றி சிந்திக்காது சமாதானத்திற்கான தகவலை ஈரான் ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவ்வாறு ஈரான் ஜனாதிபதிக்கு சவூதி அனுப்பிய கடிதம் முக்கிய நாட்டின் தலைமைக்கூடாக அனுப்பப்பட்டதாகவும் அதில் என்ன உள்ளடக்கப்ட்டிருப்பது ஏதும் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டாலும் சவூதி மன்னனின் முகமது பின் சல்மான் அமெரிக்க ஊடகத்திற்கு வழங்கிய செய்தி வெளியிடும் தகவல் அதனை ஊகிக்க கூடியதாக அமைந்துள்ளது. அதனை முழுமையாகப்பார்ப்போம்.  

ஈரான் மீது உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுவது தவிர்க்க முடியாது. எண்ணெய் வயல்களில் பிரச்சினை ஏற்படும். இதனால் எமது வாழ்க்கையில் இதுவரை நாம் கண்டிராத நினைத்துப் பார்க்க முடியாத அளவில் எண்ணெய் விலை அதிகரிக்ககூடும். மேற்காசியாதான் உலகின் சக்தி வளத் தேவைகளில் 30 வீதத்தை பூர்த்தி செய்கிறது.

உலகில் 20 வீத வர்த்தகம் இங்கே நடைபெறுகிறது. எனவே இதில் சிக்கல் ஏற்பட்டால் உலகப் பொருளாதாரமே சிதைந்துவிடும். இது சவூதி அரேபியா அல்லது மேற்காசியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல எனத் தெரிவித்தார். அவரது அறிக்கை ஒரு பொருளாதார வாதியின் அறிக்கை போன்று அமைந்துள்ளது.  

எனவே, பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தி ஈரானுடனான போரை சவூதி தவிர்ப்பதாக கூறினாலும் அடிப்படையில் வேறு பல காரணங்கள் உண்டு என்பது பொதுவான அவதானிப்பாகும். இதில் இரண்டு விடயங்கள் மேலோங்கியுள்ளது.

ஒன்று பொருளாதார சுமை நாடுகளை போருக்குள் நகர விடாது தடுத்து வருகிறது.

இரண்டாவது அமெரிக்காவின் போர்பலம் நெருக்கடிக்கு உள்ளாகியதுடன், அதன் கூட்டுக்களின் பலத்திலேயே போரை எதிர்கொள்ள எடுக்கும் முயற்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. இது மட்டுமன்றி கடந்த வடகொரியப் போர் பதட்டமும் வெனிசூலா நெருக்கடியும் அமெரிக்காவின் தோல்வியையே வெளிக்காட்டுகிறது.

அமெரிக்க அதிகாரத்தின் போக்கில் உலக நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ நகர வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டன.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments