பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீதான மரண தண்டனை தென்னாசிய அரசியலில் மட்டுமல்ல, உலகளாவிய அரசியலிலும் அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெறுமனே ஒரு ஜனாதிபதியாக மட்டுமல்லாது ஓர் இராணுவத் தளபதியாகவும் விளங்கிய போதே 1999 இல் இராணுவச் சதிப் புரட்சி மூலம் அன்றைய பிரதமராக இருந்த நவாப் ெஷரீப்பிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்தார். 2001 ஆம் ஆண்டு யூன் மாதம் ஜனாதிபதியான முஷாரப் 2008 வரை பதவியிலிருந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது 2007 ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அவசர காலத்தைப் பிரகடனப்படுத்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நகர்வுகளை மேற்கொண்டபோது அவர் பதவி விலகினார். அதன் பின்வந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. முஷாரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவாகி விசேட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முஷாராப்புக்கு எதிரான நடவடிக்கையையும் அதற்கான அடிப்படைக் காரணத்தையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாகிஸ்தானின் அரசியலில் முஷாரப் மீதான தீர்ப்பு பெரும் பரபரப்பானதாக அமைந்துள்ளது. அவர் நாட்டில் இல்லாத போதும் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நீடித்த போதும் நவம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பை ஒத்திவைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட போதும் அத்தகைய பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் 17.12.2019 அன்று முஷாரப்புக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முஷாரப் 2016 முதல் துபாயிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மரணதண்டனை அறிவிக்கப்பட்டதனால் அவரை பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
1943 இல் தில்லியில் பிறந்த முஷாரப் 1961 இல் பாகிஸ்தான் இராணுவக் கல்லூரியில் இணைத்து கொண்டார். அதன் பின்பு படிப்படியாக அதிகாரியாக உயர்ந்த முஷாரப் ெஜனரலாக பதவியுயர்வு பெற்று பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் போதே இராணுவ சதியை மேற்கொண்டு ஆட்சியைப் பிடிகிறார். அவரது பதவிக் காலத்தில் இந்தியாவுடன் நிகழ்த்தி தோற்றுப்போன ஆக்ரா உச்சிமகாநாடு அவரது தேசப்பற்றினை அப்போது முதன்மைப்படுத்தியிருந்தது.
அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடனான வெளியுறவுக் கொள்கை முதன்மை பெற்றிருந்தது. ஆக்ரா மகாநாடும் அமெரிக்க சார்பு வெளியுறவும் அவரது ஆட்சிக் காலத்தில் மிக முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.
1973ஆம் ஆண்டு உருவாக்கிய பாகிஸ்தானின் அரசியலமைப்பின் பிரகாரம் தேசத் துரோகம் இழைக்கப்பட்டதாக சிறப்பு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரம் அரசியலமைப்பின் 6வது பிரிவு மிகத் தெளிவாக அரசியலமைப்பினை மீறுவதற்கான அடிப்படைகளை ஆதாரப்படுத்துகிறது. அதன் பிரகாரம் தொடரப்பட்ட வழக்கானது அரசியலமைப்புக்கு புறம்பாக படைப்பலத்தை பிரயோகித்து அதன் இயங்கு திறனையும் அதன் அடிப்படைகளையும் தகர்த்துள்ளதாகவே அமைகிறது. சட்டத்தின் நியமங்களுக்கு புறம்பாக முஷாரப் செயல்பட்டார் என்ற வாதம் மேலோங்கியுள்ளது.
பாகிஸ்தானின் அரசியலில் இத்தகைய அம்சங்கள் சாதாரணமாகவே நிகழ்வதனைக் காணமுடிகிறது. குறிப்பாக அண்மையில முஷாரப் விடயம் போன்று தேர்தல் மூலம் தெரிவான பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான பனாமா ஊழல் நடவடிக்கை பதிவானது போல் பாகிஸ்தானின் வரலாற்றில் இராணுவத்தின் ஆட்சியும், இராணுவ அரசியல் சதியும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய நெருக்கடி ஏன் பாகிஸ்தானுக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
பாகிஸ்தான் ஒரு தென்னாசிய நாடாகிய போதும் இந்தியாவிலிருந்து பிரிந்த போதும் ஜனநாயக மரபுகள் எதனையும் அது கடைப்பிடிக்க முனையாத போக்கு நிலவுகிறது. பாகிஸ்தானின் ஜனநாயக மீட்பர்கள் தூக்கிலப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள் அல்லது ஊழல் பேர்வழிகளாகின்றனர்.
அவ்வாறே இராணுவ ஆட்சியாளர்கள் ஊழல் மட்டுமன்றி தேசத் துரோகம் புரிவதுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாக காணப்படுகின்றனர். இதற்கான காரணங்களே முஷாராப்பின் நடவடிக்கைக்கும் காரணமாகிறது.
ஒன்று இந்தியாவின் அயல் நாடு என்ற வகையில் அதிக இராணுவ துடிப்புடன் பாகிஸ்தான் இயங்க வேண்டியுள்ளது. பல யுத்தங்கள், தாக்குதல்கள், அடிக்கடி எல்லைச் சண்டைகள் என இரு நாடுகளும் அதிக இராணுவ சமநிலைக்கான இழப்பீடுகளை சந்தித்துள்ளன. எப்போதும் இந்தியா தன்னை விழுங்கிவிடும் என்ற அச்சத்தால் பாகிஸ்தான் இராணுவத்தில் அதிக கரிசனை கொண்டு இயங்க முனைகிறது. அது தவிர்க்க முடியாது ஜனநாக வெளியை மூடிவிட காரணமாகிறது.
இது சுதந்திர பாகிஸ்தானாகும் போதே ஆரம்பமானது. தற்போது வரை நீடிக்கிறது. முதலாவது ஆட்சியாளரான முகமது ஜின்னாவின் இருப்புக் கூட இராணுவ வழியாகவே அமைந்திருந்தது. 1973 வரை ஒரு அரசியலமைப்பற்ற நாடாகவே பாகிஸ்தான் காணப்பட்டது. அதனால் ஜின்னாவுக்கு பின்வந்த ஆட்சியாளர்கள் இராணுவத் தளபதிகளாகவே காணப்பட்டனர். ஏறக்குறைய 1955 முதல் 1971 வரை இராணுவ ஆட்சியாளர்களே மாறிமாறி ஆட்சி செலுத்தினர். 1971 முதல் 1973 வரை பூட்டோவின் ஆட்சி ஜனநாயக சூழலை ஏற்படுத்த முயன்றது. ஆனால் அவர் தூக்கிலப்பட்டதனால் அதற்கான வாய்ப்பு முற்றாக தகர்ந்தது. அவரைத் தொடர்ந்து நீண்ட காலம் இராணுவ ஆட்சிக்குள் பாகிஸ்தான் அகப்பட்டது. இவ்வாறு மாறிமாறி இராணுவம் அந்த நாட்டை ஆழ்வதும் அதனை மக்கள் பெரும் முரணான அரசியல் பண்பாகக் கொள்ளாத போக்கும் நிலவுகிறது.
இரண்டு, சமீர் அமீன் என்ற மார்க்சிய ஆய்வாளர் குறிப்பிடுவது போல், இந்தியாவுக்குள் ஒரு முஸ்லிம் மாநிலமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத பாகிஸ்தான் இஸ்லாம் என்ற அடையாளத்தை மட்டுமே கடைப்பிடித்து தொடர்ந்து இயங்கிவருகிறது. அதனால் பாகிஸ்தானின் தோற்றமே தேவையற்றதொன்றாக தெரிகிறது என்கிறார். அது வரைந்த அரசியலமைப்பு முழுமையாக இஸ்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் அதிக நெருக்கடியை அது சந்தித்து வருகிறது.
மூன்று, ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி மேற்காசியாவின் இஸ்லாமிய தீவிரவாதத்தின் செல்வாக்கும் நடவடிக்கையும் பாகிஸ்தானின் அரசியலை பாதித்துக் கொண்டே விளங்குகிறது. ஒரு வகையில் தீவிரவாதத்தின் பயிற்சிக் களமாகவும் தாக்குதலுக்கு தயாராகும் பிரதேசமாகவும் பாகிஸ்தான் விளங்குகிறது. அதற்கு அதன் புவிசார் அரசியல் அமைவிடமே பிரதான காரணமாக உள்ளது.
நான்கு, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியும் வறுமையும் பிரதான காரணமாக அமைகிறது. மக்கள் அரசியலைவிட பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளளனர். அது அவர்களது அரசியல் நகர்வுகளை பாதிகின்றது. அது ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் இலாபகரமான அரசியலாக உள்ளது.
ஐந்து, ஆரம்ப காலம் முதல் அரசியல் கட்சிகளோ மிதவாத அமைப்புக்களோ இயங்காத நிலையும் அதனை வளர்க்காத ஆட்சியாளர்களினதும் போக்கும் பாகிஸ்தானின் ஆட்சியாளரது தான்தோன்றித் தனமான நகர்வுகளுக்கு காரணமாக அமைந்தது. அதனுடன் சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் சுதந்திரமான ஊடகத்தின் இன்மைகள் அனைத்தும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பை வளரவிடாது தடுத்துள்ளது.
ஆறாவது, சர்வதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அணுகுமுறைகள் முக்கியமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்காவின் தயவில் இயங்கிய பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்தவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் அமெரிக்க நெருக்கத்தினை கொண்டிருந்தது. அது தற்போது சீனா பக்கம் திரும்பியுள்ளது.
இந்திய எதிர்ப்புவாதம் பாகிஸ்தானை உலக வல்லரசுகளுடன் நெருக்கமான உறவை பேணுவதில் அதிக கரிசனை கொண்டிருந்தது.
எனவே, முஷாரப்பின் மீதான மரண தண்டனை என்பது பாகிஸ்தான் நீதித்துறையின் சாதனையாகக் கொள்வதனைவிட அந்த நாட்டின் இயல்பான போக்கின் ஒரு சறுக்கலாகவே கொள்ள முடியும்.
தற்போதைய ஆட்சியாளரது இருப்புடன் தொடர்புபட்டதாகவே இத்தீர்ப்பு அமைந்துள்ளது. நவாப் ஷெரீப்புக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்த பிரதமர் முஷாரப்புக்கு மரணதண்டனை என்ற முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார். இது பாகிஸ்தானின் அரசியல் துயரமாகவே தெரிகிறது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்