![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/22/colclassic-wednesday-mgr-one-among-thousands124722186_7876510_21122019_VKK_CMY.jpg?itok=kSgJI1cd)
தமிழக அரசியலில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா. 1967ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட சிந்தனை வழிவந்த தி.மு.க. ஆட்சியை நிறுவினார்.
தி.மு.க. இல்லையேல் அ.தி.மு.க. ஆட்சிதான் இன்றுவரை தமிழகத்தில் நிலவி வருகிறது. அண்ணாதுரை மேலும் 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் அவர்தான் தொடர்ந்தும் தமிழக முதல்வராக இருந்திருப்பார்.
அப்படிப்பட்ட ஆளுமை அவருடையது. அவருக்குப் பின்னர் நட்சத்திர ஆளுமையுடன் பதவிக்கு வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அவர் மேலும் 10 வருடங்கள் உயிரோடிருந்திருந்தாலும் அவர்தான் முதலமைச்சர்! அப்படி ஓர் அசைக்க முடியாத ஆளுமை.
எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அவரைப் பின்பற்றிப் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். வந்த வேகத்திலேயே அவர்கள் காணாமற் போனார்கள். எம்.ஜி.ஆர். தனது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை 1972ம் ஆண்டு அக்டோபர் 18ம் திகதி ஆரம்பித்தார். 1977ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி தனது அறுபதாம் வயதில் அதாவது கட்சி ஆரம்பித்த ஐந்தாம் வருடத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் எம்.ஜி.ஆர். ஆனால் அவரது குருவான அண்ணாதுரை தி.மு.க.வை 1949ம் ஆண்டு ஆரம்பித்து 1967ம் ஆண்டுதான், அதாவது 18 ஆண்டு உழைப்பின் பின்னரே, முதலமைச்சர் பதவியை அவரால் பிடிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நிகழ்த்திய பல சாதனைகளில் இதுவும் ஒன்று. தற்போது புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முனைந்திருக்கும் கமலஹாசன் மற்றும் கட்சி ஆரம்பிக்கவிருக்கும் ரஜினி ஆகியோர் இப்படி ஒரு சாதனையை நிலை நிறுத்துவது மிகவும் கஷ்டம்.
அடுத்த தமிழகத் தேர்தலில்தான் இவர்களது உண்மையான பலம் தெரியவரும். எனினும் இனிமேல் இன்னொரு எம்.ஜி.ஆர். அரசியலிலும் சரி சினமாவிலும் சரி உருவாவவது சாத்தியம் அல்ல.
எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். எனினும் அவரது தந்தை மேனன் மறைந்ததும் அவரது தாயார் சத்யபாமா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டார். எம்.ஜி.ஆர். கைக்குழந்தையாக இருந்தபோது அவர் குடும்பம் இலங்கையை விட்டு அகன்றுவிட்டது.
எம்.ஜி.ஆர். தனிப்பட்ட வாழ்விலும் நடிக்கச் செய்தார் என்பதுதான் உண்மையானாலும், அள்ளிக் கொடுக்கும் இரக்கக் குணமும் மனிதாபிமானமும் அவருள் இயல்பிலேயே குடிகொண்டிருந்தன. அண்ணாதுரையிடம் பாசத் தம்பியாக இருந்தபோதே அவருக்கு அரசியலில் பற்று இருந்தது.
தனது மக்கள் செல்வாக்கை தி.மு.க. உபயோகித்துக் கொள்ளும் போது தான் ஏன் தனக்காகத் தன் செல்வாக்கை உபயோகிக்கக் கூடாது என்று அவர் எண்ணினார்.
ஐம்பதுகளில் இருந்து 1970 வரை வெளியான அவரது படங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஏற்கனவே வகுக்கப்பட்ட ஒரு திட்டம் பிரயோகத்தில் இருந்து வருவதை அவதானிக்கலாம். திரைப்படங்களில் அவர் புகைக்கமாட்டார். மது அருந்தமாட்டார்.
அவரது பாடல்கள் அறிவுரை சொல்வதாக புனையப்பட்டிருக்கும். வசனங்களும் தாய்ப்பாசம் மற்றும் ஏழைகள் மீது கருணை கொண்டவையாக அமைக்கப்பட்டிருக்கும். எல்லாப் படங்களிலும் அநீதியை அழித்தொழிக்கும் நாயகனாகவே அவர் தோன்றியிருப்பார்.
இதைத்தான் எம்.ஜி.ஆர் ஃபோர்முலா என்பார்கள. சாதாரண மனிதர்களை தன் பக்கம் ஈர்ப்பது எப்படி என்பது தான் எம்.ஜி.ஆர். போர்முலா. அவருக்குப் பின் பலரும் இதைக் கையில் எடுத்து பார்த்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்.கையில் அது சரியாக விளையாடியதைப் போல வேறொருவர் கையிலும் அது விளையாடவில்லை.
எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணம் அடைந்தார். 1977ம் ஆண்டு பதவியேற்ற அவர் ஒரு சிறிய காலப்பகுதியில் மட்டுமே ஆட்சி கலைக்கப்பட்டு பதவி இழந்திருந்தார். கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தியுடன் கூட்டு சேர்ந்த பின்னர் 1980ம் ஆண்டு பெப்ரவரி 17ம் திகதி எம்.ஜி.ஆர். அரசு மத்திய அரசினால் கலைக்கப்பட்டது.
எனினும் அடுத்து வந்த மாநிலத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 09ம் திகதி இரண்டாவது தடவையாகவும் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரானார். எனவே நான்கு மாதங்கள் தான் அவர் பதவி இழந்திருந்தார்.
1984ம் ஆண்டு அக்டோபர் 06ம் திகதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அபல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எனினும் 1985ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் நேரிடையாகத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.
சுகவீனமடைந்த நிலையில் அமெரிக்க ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆண்டிபட்டித் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களையும் கூட்டணிக் கட்சியான இந்திரா காங்கிரஸ் 62 இடங்களையும் பெற்று மொத்தமாக 192 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வுக்கு 22 ஆசனங்களே கிடைத்திருந்தன.
இவை அனைத்தும் எம்.ஜி.ஆர் என்ற அதிசய மனிதரால் மட்டும் நிகழ்த்தக்கூடிய சாதனைகள். சரியாக பேச முடியாத நிலையிலும் அவர் மூன்றாவது தடவையாகவும் தமிழக முதல்வராக 1985ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி பதவியேற்றார்.
எம்.ஜி.ஆர் நிகழ்த்திய சமூக நலத்திட்டங்களில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டமாகும். இது ஏற்கனவே காமராஜினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட திட்டமானாலும் எம்.ஜி.ஆரே இதைத் தொடர்ந்து நடைபெறும் ஒரு திட்டமாக, உறுதியான அடிப்படையில் அமுல் செய்தார். பின்னர் வந்த அரசுகளினால் இந்தத் திட்டத்தை நிறுத்தமுடியவில்லை.
எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகளாகின்றன. நத்தார் தினத்தன்று அவரது பூதவுடன் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சென்னை பொலிசார் கணக்கிட்டிருந்தனர். இன்றைக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் எம்.ஜி.ஆர். சமாதிக்குச் சென்று வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் பழைய திரைப்படங்கள் இன்றும் நன்றாகவே ஓடுகின்றன. அவரது பாடல்கள் புதிய உற்சாகத்துடன் இன்றும் செவிமடுக்கப்படுகின்றன. இன்றும் அவர் பெயரைச் சொல்லித்தான் வாக்கு கேட்கிறார்கள். அரசியல் நடத்துகிறார்கள்.
மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்றால் அவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. ஏழைகள் மத்தியில் அவர் பெயர் ‘மவராசன்’ எம்.ஜி.ஆர். டிசம்பர் 24ம் திகதி மறைந்தார். அதுபோலவே முதறிஞர் ராஜாஜியும் டிசம்பர் 24ம் திகதியே மறைந்தார்.
பகுத்தறிவு பகவலனாகக் கொண்டாடப்படும் தந்தை பெரியாரும் இதே டிசம்பர் 24ம் திகதியே மறைந்தார்.
சத்யா