சூரியவெவ மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் - அமைச்சர் டலஸ் | தினகரன் வாரமஞ்சரி

சூரியவெவ மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் - அமைச்சர் டலஸ்

சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் 2015ம் ஆண்டுக்குப் பின்பு சிறந்த முறையில் பராமரிக்கப்படவில்லையெனவும் இக்காலத்தில் 13தேசிய போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு சுமார் 95ஆயிரம் ரூபா குறைந்த வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இம்மைதானத்தை எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் சிறந்த மைதானமாக அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இம்மைதானம் சர்வதேச தரத்திலான மைதானம் என்றாலும் கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இம்மைதானத்தை அண்மித்து கரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நட்சத்திர ஹோட்டல்களை அமைக்க முடியாவிட்டாலும், தற்போது இவர்கள் தங்குவதற்காக ஹம்பாந்தோட்டையில் சங்கரில்லா நட்சத்திர ஹோட்டல் அமையப்பெற்றுள்ளதாகவும், சூரியவெவ மைதானத்துக்கு அண்மித்ததாக அவ்வாறான ஒரு ஹோட்டலை அமைப்பதற்கு கடந்த அரசாங்கம் ஆலோசித்திருந்தும் அது நடைபெறவில்லை எனவும் அமைச்சர் இதன் போது கூறியிருந்தார். 

கடந்த காலங்களில் இம்மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறாததையிட்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும: 

“இம்மைதானம் சர்வதேச தரத்திற்கு ஒப்பான மைதானமாகும். இம்மைதானத்தின் தரத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. 2010முதல் இம்மைதானத்தில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா போன்ற சர்வதேச நாடுகள் இங்கு விளையாடியுள்ளது. இம்மைதானத்தில் 2015ம் ஆண்டுக்குப் பிறகே பிரச்சினைகள் தோன்றியது. அதன் பின்பே இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை.

ஆனால் இம்மாதம் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒரு நாள் போட்டியொன்றை இம்மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம். 

கொழும்பைப் போன்ற சகல வசதிகைளயும் கொண்ட ஒரு நகரை அமைப்பதங்கு அன்றைய ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதிவேகப் பாதை, துறைமுகம், விமான நிலையம், சர்வதேச மைதானம்,ஐந்து நட்சத்திர ஹோட்டல் என கொழும்புக்கு சமமான வணிக நகரமொன்றை அவர் உருவாக்கினார். எனவே இம்மைதானத்தையும் இலங்கையிலுள்ள ஏனைய மைதானங்களைப் போல் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். எதிர்காலத்தில் இங்கு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

போட்டிகள் நடைபெறாத காலங்களில் திருமண வைபவங்களுக்காக இம்மைதானத்திலுள்ள அரங்குகளை பவிப்பதற்காகத் தீர்மானித்துள்ளதாக பரவியுள்ள தகவல்களைப் பற்றி அமைச்சர் கூறும் போது:  

மைதானத்தில் திருமண வைபவங்கள் நடப்பதற்கு ஒரு போதும் தீர்மானிக்கவில்லை. இம்மைதானத்தை பராமரிக்க 13பேர்கொண்ட குழுவொன்றுள்ளது. இம்மைதானத்தைப் பராமரிக்க பெருமளவு தொகை செலவிட வேண்டியுள்ளது. 40ஆயித்துக்கு அதிகமாக நீருக்காக செலவிட வேண்டுயுள்ளது.

எனவே மைதானத்திலுள்ள வேறு மண்டபங்களைத்தான் திருமண வைபவத்துக்காக வழங்கியுள்ளோம். இம்மைதானத்தை கடந்த காலங்களில் உரிய முறையில் பராமரிக்கப்படாமை பெரும்பிரச்சினையாக மாறியிருந்தது. எனவே எதிர்காலத்தில் உலகப் புகழ்பெற்ற மைதானமாக மாற்ற தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.   

Comments