![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/11/21/a26.jpg?itok=EpHDM737)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பெனால்டியில் 3-1என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட சீசெல்ஸ் அணி தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வென்றுள்ளது. அத்துடன் பரிசுத் தொகையாக 30ஆயிரம் அமெரிக்க டொலரையும் பரிசாக பெற்றது. இலங்கை ரூபா மதிப்பில் 65இலட்சம் பரிசு தொகை ஆகும்.
போட்டியின் 75நிமிடங்கள் வரை 1-3என பின்னிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேரம் முடிவடையும்போது போட்டியை 3-3என சமப்படுத்தி, ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றமை இலங்கைக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. நடந்து முடிந்த இந்த தொடரின் லீக் சுற்றின் நிறைவில் எந்தவித தோல்விகளும் இன்றி ஒரு வெற்றி மற்றும் இரண்டு சமநிலையான முடிவுகளுடன் சீசெல்ஸ் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் அணிகள் தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தன.
வெள்ளிக்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் பிரதம அதிதியாக பிஃபாவின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ பங்கேற்றிருந்தார்.
போட்டியின் முதல் 5நிமிடங்களுக்குள் மத்திய களத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மார்வின் ஹமில்டன் பெற்றார். அவர் உயரத்தை குறைத்து கோல் நோக்கி உதைந்த பந்து சீசெல்ஸ் தடுப்பு வீரரின் உடம்பில் பட்டு கோலுக்குள் செல்ல, ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அணி முன்னிலை பெற்றது.
போட்டியின் 30நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கையின் இளம் பின்கள வீரர்கள் அப்துல் பாசித் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, அனுபவ வீரர் ரொஷான் அப்புஹாமி மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்தார். முதல் பாதியில் சீசெல்ஸ் வீரர்கள் கோலுக்கு எடுத்த அனைத்து முயற்சிகளையும் இலங்கை பின்கள வீரர்கள் இலகுவாகத் தடுத்தனர். எனினும், முதல் பதியின் உபாதையீடு நேரத்தில் சீசெல்ஸ் வீரர் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை இம்மானுவெல் ஜோன் கோலுக்கு முன்னே இருந்து ஹெடர் செய்ய, பந்து வலது பக்க கம்பத்திற்கு அருகாமையினால் கோலுக்குள் சென்றது.
முதல் பாதி நிறைவடையும்போது ஆட்டம் தலா ஒரு கோல்களுடன் சமநிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5நிமிடங்களில் சீசெல்ஸ் வீரர்கள் மைதானத்தின் மத்தியில் இருந்து சிறந்த முறையில் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோலுக்கு எடுத்த முயற்சியை சுஜான் பெரேரா சிறப்பாகத் தடுத்தார். 55நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை அணிக்கு கிடைத்த த்ரோ இன் வாய்ப்பை ஹர்ஷ உள்நோக்கி எறிய, பின்கள வீரர்களை விட்டு தனித்திருந்த ஆகிப் பந்தை கோலுக்குள் செலுத்தி, போட்டியில் இலங்கையை முன்னிலைப்படுத்தினார்.
மீண்டும் 70ஆவது நமிடத்தில் இலங்கை அணியின் திசையில் இருந்து உயர்த்தி செலுத்திய பந்தை முன்னோக்கிச் சென்று பெற்ற வசீம், எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டி கோலுக்கு எடுத்த முயற்சியின்போது பந்து வெளியே சென்றது.
அடுத்த இரண்டு நிமிடங்களில் சீசெல்ஸ் கோல் எல்லையில் வைத்து வசீம் ராசீக் எதிரணி தடுப்பு வீரரால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட இலங்கைக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை வசீம் கோலாக்கி, இலங்கை அணியை 2கோல்களால் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த தொடரில் தனது ஏழாவது கோலையும் பதிவு செய்தார். 85ஆவது நிமிடத்தில் பெர்ரி இலங்கை தடுப்பு வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்தை பென்வோ மெரி கோல் நோக்கி உதைய, இலங்கை வீரரின் உடம்பில் பட்டு பந்து கோலுக்குள் சென்றது.
மீண்டும் 90ஆவது நிமிடத்தில் சீசெல்ஸ் பின்கள வீரர் உயர்த்தி இலங்கை அணியின் திசைக்கு செலுத்திய பந்தை ஒரு வீரர் ஹெடர் செய்ய, தம்பூ பந்தைப் பெற்று சுஜானைத் தாண்டி எடுத்து கோலுக்குள் தட்டிவிட, ஆட்டம் மீண்டும் 3-3என சமநிலையடைந்தது. முழு நேர நிறைவில் போட்டி சமநிலையாகியமையினால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி சூட் அவுட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதன்போது இலங்கை அணிக்காக கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மட்டுமே கோலை அடித்தார். அவர் சீசெல்ஸ் அணியின் முதல் பெனால்டி உதையையும் தடுத்தார். மறுமுனையில் சீசெல்ஸ் வீரர்கள் முதல் உதை தவிர்ந்த அடுத்த மூன்று உதைகளையும் தொடர்ந்து கோலாக்கியமையினால் 3-1என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, தொடரின் வெற்றியாளர்களாக மகுடம் சூடிக்கொண்டனர்.
போட்டியைக் காண பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வருகை தந்திருந்ததுடன், பிபாவின் தலைவர் கிஹானி இன்பான்டினோ உள்ளிட்டோர் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக, அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ரொனி இப்ராஹிம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், சிரேஷ்ட உப தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ, செயலாளர் உபாலி ஹேவகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.