பூங்காவனம் ஒன்றில் ஆற்றங்கரையோரமாக ஒரு ஆமை வசித்து வந்தது. ஒருநாள் ஆமை இளைப்பாறிக் கொண்டிருந்தபோது நீர் அருந்துவதற்காக யானை ஒன்று அங்கு வந்தது. தன்னைவிட மிகச் சிறிய ஆமையைக் கண்ட யானைக்கு சிரிப்பு வந்தது.
"ஆமையாரே, என்ன நீர் குள்ளமாக இருக்கின்றீர்? நடக்கவும் முடியாமல் மெல்ல மெல்ல நடக்கிறீர். என்னைப் பார் நான் எப்படி கம்பீரமாக நடக்கிறேன். என்னை விட பெரிய மிருகம் எதுவுமே இல்லை" என பெருமையாக கூறியது.
இதைக் கேட்ட ஆமைக்கு பெருங்கவலை ஏற்பட்டாலும் அதனை வெளிக்காட்டாமல் "யானையாரே எனக்கு எவ்வளவு உறுதியான ஓடுகள் இருக்கின்றன. இதுதான் என் பாதுகாப்பு. உங்களிடம் இவ்வாறு இல்லையே" என பதிலடி கொடுத்தது.
அதைக்கேட்ட யானை, "இவ்வளவு உறுதியான ஓடு இருந்தும் என்ன பயன். நான் ஒரு மிதி மிதித்தால் தூள்கூட மிஞ்சாது" என்று கூறி அட்டகாசமாய் சிரித்தது. ஆமைக்கு தாங்கமுடியாத கவலை. அமைதியாக இருந்தது. சற்று யோசனை செய்த பின் "இவ்வளவு வலிமையான உடல் இருந்தும் என்ன பயன்? உன் சுளகு போன்ற காதினுள் சிறிய பூச்சிகூட போய்விடுமோ என்ற அச்சத்தில் பெரிய மிருகமாகிய நீங்களே நிம்மதியில்லாமல் எந்நேரமும் காதை அசைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று யானையிடம் கூறியது. அதைக் கேட்ட யானை தலைகுனிந்து நின்றது.
"உங்களுக்கு மட்டுமல்ல, யானையாரே, எல்லா படைப்புகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. எனவே இதன் பிறகாவது பெருமையை விட்டு விலகி ஏனையோரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று சத்தமாக கூறியபடி ஆமை அங்கிருந்து நகர்ந்து சென்றது.
யானையும் தன் பிழையை உணர்ந்து திருந்திவாழ வேண்டுமென உறுதியெடுத்தது.
எம்.என். நூரா நிஸாம்,
தரம் 11, க/தெல்தோட்டை மு.ம.கல்லூரி,
தெல்தோட்டை.