![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/04/26/27028646-8207245-Food_bank_staff_wore_masks_and_gloves_as_they_distributed_boxes_-a-30_1586521255250.png?itok=4gM_cY6m)
உலகில் செல்வந்த நாடு அமெரிக்காதான். உலக செல்வத்தில் 30 சத வீதத்தை அது தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் அமெரிக்கா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருவது ஒரு பக்கம். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற போராட்டங்கள் மறுபுறம். அதிகரித்து வரும் உணவுத் தேவை இன்னொரு புறம். இந்நிலையில் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் தமது வேலைகளை இழந்துள்ளனர்.
அமெரிக்க மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு முன் கேள்விப்படாத ஒரு விடயம் இது.
பென்சில்வேனியா மாநிலத்தில் சுப்பர் மார்க்கெட் ஒன்றின் உணவு வங்கிக்கு முன்னால் உணவுப் பொருட்கள் வாங்க ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்கள் கடந்த வாரம் வரிசை கட்டி நின்ற காட்சி இது. இரவு முழுக்க அவை அங்கு வரிசையில் இருந்துள்ளன.
உணவு வங்கிகளுக்கு முன் நிற்கும் கார்கள் வரிசை
இந்த உணவு வங்கிகளில் தமக்கு கிடைக்கும் சிறிய உணவு பங்குக்காக அங்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. உணவுக்கான தேவை அங்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரிய இராணுவ வல்லரசாக இருந்து என்ன பயன். ஒரு மாதத்தில் தெருவுக்கு வந்துவிட்டோம் என்று அமெரிக்கர்கள் விரக்தியில் அங்கலாய்க்கின்றனர்.
பறிபோகும் ஊடக சுதந்திரம்
கொரோனா வைரஸ் உலகெங்கும் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல நாடுகள் பத்திரிகை சுதந்திரத்தை பறித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயற்படும் Reporters Without Borders என்ற பத்திரிகையாளர் அமைப்பு பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியலை தரவரிசைப்படுத்தியுள்ளது. அதன் புதிய பட்டியலில் கொரோனா வைரஸின் தாக்கம் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. சீனா, ஈரான் ஆகியவை பத்திரிகையாளர்கள உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏற்கனவே சீனாவில் பல தகவல் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அவை வெகுவாக அதிகரித்துள்ளன.
Reporters Without Borders வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் சீனா 177ஆவது இடத்திலும் ஈரான் 173 ஆவது இடத்திலும் உள்ளன. மொத்தம் 180 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் 180 ஆவது இறுதி நாடாக வட கொரியா உள்ளது. துர்க்மெனிஸ்தான் 179ஆவது இடத்திலும் எரித்ரியா 178 ஆவது இடத்திலும் உள்ளன. சூடான் 16 இடங்கள் முன்னேறி 159 ஆவது இடத்தில் உள்ளது. துருக்கி 154 ஆவது இடத்தில் உள்ளது. ரஷ்யா 149 ஆவது இடத்தில் உள்ளது. துர்கமெனிஸ்தானில் ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய இணைய வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் நோர்வே, பின்லாந்து போன்ற நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிய வருகிறது. நோர்வே தொடர்ந்து நான்காவது வருடமாக முதல் இடத்தில் உள்ளது. பின்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆசியாவில் பொருளாதார பெருமந்தம்
ஆசிய நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
1930களில் உலகில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்துக்குப் (Great Depression) பின் ஆசிய பொருளாதாரத்தில் ஏற்படும் மிகப் பெரிய சரிவு இது என்ற எச்சரிக்கையுடன் அந்த அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளன. இதனால் விமானப் போக்குவரத்து, வர்த்தகம், மற்றும் சேவைத்துறை ஆகியவை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. 2008/2009 இல் ஏற்பட்ட சர்வ தேச பொருளாதார நெருக்கடி (4.7 வளர்ச்சி) யின்போது இருந்த வளர்ச்சி விகிதத்தை விட இப்போது வளர்ச்சி விகிதம் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சத வீதமாக குறைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவு கூறுகிறது. கடந்த 3 தசாப்தங்களில் சீனாவின் மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இந்த பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொள்ளும் திறனுடன் உள்ளன. ஆனால் பல நாடுகள் அதிக மக்கள் தொகை, குறைவான வளங்கள் ஸ்திரமற்ற அரசியல் நிலை ஆகியவற்றால் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.
இரு நாடுகளை இணைத்த கொரோனா வைரஸ்
பத்து லட்சம் ஹைட்ரோக்சி குளோராகுயின் மாத்திரைகளை அனுப்புமாறு மலேசியா இந்தியாவிடம் கேட்டுள்ளது.
மலேரியா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைதான் தற்போது கோவிட் 19 க்கு எதிரான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த மாத்திரைகள் கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்கும் என்று எந்தவொரு அறிவியல் ஆய்வும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடான இந்தியா அதனை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் அதனை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் தற்போது அனுமதி அளித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவும் இந்த மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் முதற் கட்டமாக 89,100 ஹைட்ரோக்சி குளோராகுயின் மாத்திரைகளை அனுப்புமாறும் மேலும் இருப்பு இருக்கும் பட்சத்தில் பத்து லட்சம் மாத்திரைகளை அனுப்புமாறும் மலேசியா இந்தியாவிடம் கேட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே கடந்த சில காலமாக மனக்கசப்பு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி மாத்திரை விவகாரம் அமையுமென கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஏன் மனக்கசப்பு ஏற்பட்டது என்று பார்ப்போம்.
காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் முகம்மது தெரிவித்த கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியா படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்ததாக மஹதீர் கூறியிருந்தார். ஐக்கிய நாடுகள் பேரவையில் மட்டுமன்றி வேறு இடங்களிலும் அவர் அதனை கூறியிருந்தார். அத்துடன் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மகாதீர் மேலும் கூறியிருந்தார் மகாதீர் முகம்மது
இதனையடுத்து மலேசியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலேசியாவில் இருந்து பாம் எண்ணெய் இறக்குமதியை இந்தியா கட்டுப்படுத்தியது. இதனால் மலேசியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் மலேசியாவில் திடீரென ஆட்சி மாறியது. பங்காளி கட்சிகளிடையே பிரச்சினை ஏற்பட்டதால் மஹதீர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். முஹதீரின் கட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த மொஹிதீன் யாசின் பிரதமரானார். இந் நிலையில் மலேசியாவுக்கு உதவிக் கரம் நீட்டி ஹைட்ரோக்சி குளோராகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பியுள்ளது.
தென் கிழக்காசிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
சீன மருத்துவர் மாயம்
கொரோனா நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதே வைரஸ் பரவலுக்கு காரணம் என்று சீன அரசாங்கத்தை விமர்சித்த அந்நாட்டு மருத்துவர் காணாமற்போயுள்ளார்.
சீனாவில் கொரோனா நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதே வைரஸ் பரவலுக்கு காரணம் என்று கூறிய Ai Fen என்ற சீன பெண் மருத்துவர் காணாமற்போயுள்ளதாக Reporters Without Borders என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. Ai Fen என்ற சீன பெண் மருத்துவர் வஹான் அரச வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பணிப்பாளராக இருந்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பற்றி முதல் முறையாக உலகுக்கு உறுதிப்படுத்தியது இவர்தான்.
கடந்த மார்ச் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் விடியோ ெகான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்ட Ai Fen கொரோனா வைரஸை தங்கள் நாடு எதிர்கொண்ட விதம் பற்றி 60 நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அத்துடன் Renvu என்ற சீன பத்திரிகைக்கும் பேட்டியளித்திருக்கிறார்.
இது நடந்து இரண்டு வாரங்களின் பின்னர் இவர் காணாமற் போயுள்ளதாக Reporters Without Borders என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பு கூறுகிறது. அதே நேரம்் இணையப் பக்கத்தில் இருந்த மருத்துவரின் பேட்டி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சீனாவை சேர்ந்த 3 ஊடகவியலாளர்கள் மற்றும் 3 அரசியல் விமர்சகர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தவர்கள் என்று Reporters Without Borders என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பு கூறுகிறது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
கொரோனா உள்ளதா? 15 நிமிடங்களில் அறியலாம்
கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவியுள்ளதா என்பதை 15 நிமிடங்களில் கண்டறியும் சோதனை முறையை பிரேசிலில் உள்ள ‘ஹை டெக்னொலஜீஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
நோயாளியிடம் இருந்து சில துளிகள் ரத்த மாதிரியை எடுத்து கையடக்கமான கருவியில் வைத்துவிட்டால் போதும். அந்த கருவியில் உள்ள வேதிப் பொருட்கள் ரத்தத்தை அலசி முடிவுகளை அதனுடன் இணைத்துள்ள இணையத்துக்கு அனுப்பிவிடும். நோயாளிக்கு கொரோனா தொற்றியுள்ளதா என்பதை 15 நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும்.
கொரோனா தொற்றாளர்
சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சில வாரங்களில் சீன அரசு கைத்தொலைபேசி ‘அப்’ ஒன்றை வெளியிட்டது. அரச மருத்துவத்துறை, தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.
பொது இடங்களில் நடமாடுவோர் அல்லது வாகனங்களில் பயணிப்போர் இந்த ‘அப்’பை தமது கைத்தொலைபேசிகளில் தர விறக்கம் செய்து கொள்ளலாம்;.
இந்த ‘அப்’பை பயன்படுத்தி தனது அருகில் இருப்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளானவரா என்பதை தெரிந்து கொள்ள முடியுமாம். இதனால் அவர்களிடம் இருந்து தள்ளி இருக்க முடிகிறது. இந்தியாவைப் போல சீனாவிலும் அனைவரினதும் கைத்தொலைபேசி எண்களும் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இது சாத்தியமாகிறது.