ஈரான் மீதான ஆயுதத் தடை நீக்கம்; அமெரிக்க-இஸ்ரேல் அணிக்கு நெருக்கடியை உருவாக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

ஈரான் மீதான ஆயுதத் தடை நீக்கம்; அமெரிக்க-இஸ்ரேல் அணிக்கு நெருக்கடியை உருவாக்குமா?

அமெரிக்க வல்லரசுக்கான ஆதிக்கம் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி நகர்வதனை கடந்த ஆண்டுகளில் அவதானிக்க முடிந்ததது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு குடியரசுக் ( Republic Party) கட்சியின் கடந்த கால ஜனாதிபதிகள் கடைப்பிடித்த கொள்கைகளை கூட பின்பற்றாது செயல்பட்ட போக்கானது அமெரிக்காவின் செல்வாக்கினை பலவீனப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் ஏறக்குறைய தென் பூகோள (Global South) நாட்டின் தலைவர்களைப் போல் அமைந்திருகிறது என்ற விமர்சனம் உண்டு. அமெரிக்காவின் அரசியல் கலாசாரத்தையே தலைகீழாக்கியுள்ள வரலாற்றை ட்ரம்ப் செய்து முடித்துள்ளார். அந்த வரிசையில் ஈரான் மீதான ஆயுதத் தடையை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையில் முடிபுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது. 

18.10.2020 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பொன்றில் ஈரான் மீதான ஆயுதத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகமட் யவாட் சரீப் (Mohammad Javad Zarif) மேலும் தெரிவிக்கும்போது ஈரானின் பாதுகாப்புக் கோட்பாடு அதன் மக்கள் மற்றும் சுதேச திறன்களை வலுவாக நம்பியிருப்பதை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 2007 முதல் அமுலாகியிருந்த ஆயுதத் தடையை ஐ.நா.சபை விலக்கியுள்ளமை ஈரானின் அரசியலில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகவே தெரிகிறது. ஈரான் மீதான ஆயுதத் தடையை காலவரையறையின்றி நீடிக்க வேண்டும் என அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு தீர்மானத்தை ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் முன்வைத்தது. அது தொடர்பிலான வாக்கெடுப்பிலேயே ஆதரவாக எட்டு வாக்குகளும் எதிராக அமெரிக்கா உட்பட டொமினிக்கன் குடியரசு வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும். நிரந்தர பாதுகாப்புச் சபை நாடுகளும் தற்காலிக பாதுகாப்புச் சபை நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இருப்பினும் ஈரான் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத் தடை 2023 வரை நீடிக்கும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத்தடை நீடிக்கும் என்பதும் ஐ.நா. சபை சில விதிவிலக்குகளை அளிக்குமாறும் ஈரான் விண்ணப்பித்த போதும் அதுவும் சாத்தியமற்றதாகவே அமைந்துள்ளது. ஆனால் தற்போதுள்ள மாற்றமானது படிப்படியாக ஒரு புதிய சூழலை ஏற்படுத்துமென எதிர்பார்க்க ஈரான் முயலுகிறது. காரணம் ஐ.நா.வின் தற்காலிக பாதுகாப்புச் சபையின் உறுப்புரிமையில் உள்ள நாடுகள் சீன  ரஷ்ய சார்பு நாடுகளாக இருப்பது கவனத்திற்கிரியதாகும். இது ஒரு முக்கியமான திருப்பு முனை என ஈரான் அறிவித்துள்ளது. 
ஐ.நா.சபையின் ஏழாம் அத்தியாயத்தின் பிரகாரம் சர்வதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பினை மீட்டெடுக்க பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்க முடியுமெனக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி 1966 முதல் அத்தகைய நடவடிக்கையினை ஐ.நா.சபை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புச் சபையானது பொருளாதரத் தடை வர்த்தக  மற்றும் பயணத்தடை என்பவற்றை முதன்மைப்படுத்தியுள்ளதுடன் ஆயுதத் தடையையும் ஓரம்சமாக கையாண்டு வருகிறது. இவற்றுடன் நிதி தொடர்பான தடைகளும் சொத்து தொடர்பான தடைகளும் காணப்படுகின்றன. அண்மையில் ஈரான் மீது பொருளாதாரத் தடையின் அங்கமாக அமெரிக்கா அக்டோபர் முதல் 18 ஈரானிய வங்கிகளை தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது. அதில் மனிதாபிமான வர்த்தக பரிவர்த்தனைகளை செயலற்றதாக்குவது முதல் ஈரானிய நிதித் துறையினை உலக வர்த்தகத்திலிருந்து தனியாக பிரிப்பதில் வெற்றி கண்டுள்ளது.  

இவ்வாறு ஈரானிய எழுச்சியை தடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்தாலும் ஈரான் தொடர்ச்சியாக பேராடி வருகிறது. நம்பிக்கையூட்டும் விதத்தில் சீனா மற்றும் ரஷ்யாவின் அனுசரணையுடன் செயல்படும் ஈரான் பொருளாதார  ரீதியில் அதிக நெருக்கடியை எதிர்நோக்குகிறது. ஆனாலும் தனது நாட்டு உற்பத்தியான எண்ணெயை சந்தைப்படுத்துவதற்கு அமைவான கோரிக்கையை ஐ.நா சபையிடம் கோருவதுடன் அதன் தொடர்ச்சியான செயல்பாடாக வெளியுறவு உட்பட அனைத்து அமைச்சுக்களும் இராஜதந்திர அமைப்புக்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய நகர்வாகவே ஈரானின் ஆயுதத் தடை நீக்கப்பட்டது. இவற்றுக்கூடாக ஈரான் மிகத் தெளிவான இராஜதந்திர அணியையும் நகர்வையும் மேற்கொள்ள தயாராகிவருகிறது என்பதைக் காட்டுகிறது. ஆயுதத்தடை நீக்கம் என்பது வளர்ந்த நாடுகளின் ஆயுத விற்பனைக்கான சந்தையாக ஈரானை மாற்றுவதற்கான உத்தியாகவே தெரிகிறது. ஆனால் மேற்காசியாவின் அரசியல் பரப்பில் காணப்படும் மாற்றங்களில் ஈரான் மிதமான ஆயுதத் தடை அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாக அமையவுள்ளது. பெருமளவுக்கு ஈரானின் அணுவாயுதம் தொடர்பிலான சர்ச்சைகளை ஈரான் கையாள இத்தகைய ஆயுத தடை நீக்கம் பெருமளவு உதவுவதாக இருக்கும். ஏற்கனவே ஈரானின் மண்ணில் அணுவாயுதத்தை தேடி அழிக்கும் வேலையில் ஈடுபட்ட இஸ்ரேல்-அமெரிக்க  கூட்டு உளவுபடை பிரிவு உரிய இலக்கினை எட்டமுடியாது முயற்சியைக் கைவிட்டது.  ஏவுகணை தாக்குதலாலும் இலக்கினை எட்டமுடியாத நிலையில் காணப்படும் போது தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பானது இராணுவ ரீதியில் ஈரானுக்கு பலமானதாகவே அமையும். ஈரானின் அணுவாயுதத்தை அழிக்கும் முயற்சி பயனளிக்காத நிலையிலேயே இஸ்ரேல் சவுதியரேபியா கட்டார்  யெமன் போன்ற இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. ஆனாலும் ஈரானின் ஆயுதத் தடை நீக்கமானது அதன் இராணுவ வலிமையை அதிகரிக்கவும் பிராந்திய ரீதியில் சவால் மிக்க இஸ்ரேலை கையாளவும் ஒரு சந்தர்ப்பமாக அமையும். பிராந்திய ரீதியில் அமைதியின்மையை காரணம் காட்டியே அமெரிக்கா ஈரான் மீதான அனைத்து தடைகளையும்  கொண்டு வந்தது. அதனையே ஈரான்,  சீனா ரஷ்யாவின் உதவியுடன் தகர்த்துள்ளது. எனவே இது ஒரு நெருக்கடிக்கான ஆரம்பமாசகவே தெரிகிறது. மேற்காசியா அல்லது வளைகுடாப் பிராந்தியம் அதிக ஆயுத தளபாட உற்பத்திக்கும் ஆயுதக் குவிப்புக்கும் காரணமாக அயைவுள்ளமை குறிப்பிடத்தாகும்.  

இதில் அமெரிக்காவின் நகர்வுகள் அதிக தோல்வியை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. ஏனைய நாடுகளைப் போன்றும் ஏனைய பிராந்தியங்கள் போன்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் அணுகு முறை தோல்வியடைந்து வருகிறது. அதிலும் ஈரான் முதன்மையானதாக அமைந்துள்ளது. அதற்கு பின்னால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன் அணுகுமுறையில் காணப்படும் குறைபாடே பிரதான அம்சமாகும். அணுவாயுத உடன்பாட்டில் தன்னிச்சையாக வெளியேறியது முதல் ஈரான் மீதான ஆயுதம் மற்றும் பொருளாதாரத் தடை என்பனவற்றில் தன்னிச்சையான முடிவுகளே அமெரிக்காவின் தோல்விக்கான காரணமாகும். அது மட்டுமன்றி இஸ்ரேல் தொடர்பி-ல் அமெரிக்காவின் அணுகுமுறையைக் காட்டிலும் ட்ரம்ப் இன் அணுகுமுறை தனித்துவமானதாகும். அதனால் இஸ்ரேலின் விருப்புகளுக்கு நகரும் ட்ரம்ப் மேற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளையும் விட இஸ்ரேல் மட்டுமே ஒரு நாடு என்ற அடிப்படையில் செயல்பட்டதன் விளைவாகவும் ஈரான் விடயத்தில் அமெரிக்கா நெருக்கடியை சந்திக்க காரணமாகியது.  

எனவே அமெரிக்காவின் உலகளாவிய அணுகுமுறைகளால் தோல்விகளை சந்திப்பது போல் ஈரான் விடயத்திலும் அதிக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க வல்லரசு அந்தஸ்தை இழக்கும் துயரம் ஏற்பட்டிருப்பதுடன் புதிய ஒரு உலகத்திற்குள் அமெரிக்காவை ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்படைத்துவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளார்.

கே.ரீ. கணேசலிங்கம்   

Comments