சீனாவைக் காட்டி இந்தியாவை கபளீகரம் செய்கிறதா அமெரிக்கா? | தினகரன் வாரமஞ்சரி

சீனாவைக் காட்டி இந்தியாவை கபளீகரம் செய்கிறதா அமெரிக்கா?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட்ட போதும் தற்போதைய ஜனாதிபதி வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறுவது கடினமானதாகவே தெரிகிறது. அதிலும் ட்ரம்ப் இன் வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோவின் அண்மைய கருத்து அதிக குழப்பத்தை இராஜதந்திரிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஜோ பைடன் செயல்பட ஆரம்பித்துள்ளார். தனது அரசதிகாரத்திற்கான குழுக்களையும் அமைச்சு செயலாளர்களையும் அடையாளம் காண்பதில் அதிக அக்கறை எடுக்க ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக அவர் தனது துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ்ஸை தேர்ந்தெடுத்தது போல் ஏனைய நடவடிக்கையிலும் அதிகமான அக்கறையுடன் செயல்படுகிறார்.ஆனால் அவரது அதிகார நியமனங்கள் அனைத்திலும் இந்தியர்கள் அதிகம் இடம்பிடித்திருப்பதைக் காணலாம். அதற்கான பின்புலத்தையும் அரசியலையும் விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

முதலாவது ஜோ பைடனின் துணை ஜனாதிபதி தெரிவானது கமலா ஹரிஸ்ஸை நோக்கியதாக அமைந்தமைக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டு பின்பு பின்வாங்கியிருந்ததாக இருந்திருக்கலாம் என்ற பார்வை ஊடகப் பரப்பில் உண்டு. அதனையும் கடந்து அவரது ஆசியப் பாரம்பரியம் இந்திய மரபு யூதத் திருமண உறவு போன்ற பலவிடயங்கள் முதன்மையானதாக அமைந்திருந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.  

இரண்டாவது ஜோ பைடனின் அதிகார மாற்ற ஆய்வுக் குழுவில் 20 இந்திய வம்சாவளியினர் தெரிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியிடம் அதிகாரத்தை கைமாற்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிகார மற்றும் ஆய்வுக்குழுவில் இந்தியர் கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

இதில் சீரான ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளவும் கூட்டாட்சி அமைப்புக்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் அமைக்கப்பட்டது.

அக்குழுவல் மூவர் தலைவர்களாக தெரிவாகியுள்ளனர். அதாவது அருள் மஜீந்தர் ராகுல் குப்தா மற்றும் கிரன் ஆஹாஜா ஆகியோர் முறையே எரிசக்தி மருந்துக் கட்டுப்பாடு மற்றும் பணியாள் மேலாண்மை எனும் குழுக்களுக்கு தலைவர்களாக தெரிவாகியுள்ளனர்.

இவற்றை விட தேசிய பாதுகாப்பு கல்வி வேலைவாய்ப்பு வங்கி நிர்வாகம் உட்பட 17 துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வெருவரும் நிபுணத்துவத்தைப் பொறுத்து ஒவ்வொரு குழுவிலும் உறுப்பினராக தெரிவாகியுள்ளனர்.  

மூன்றாவது துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் ஆலோசகராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண்ணான ரோஹினி தெரிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறே ஜோ பைடன் அமைத்துள்ள கொரனோ தடுப்பு ஆய்வுக் குழுவில் இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இவை யாவற்றையும் அவதானிக்கும் போது அமெரிக்காவின் புதிய நிர்வாகம் ஏன் ஆசியாவிலும் தென்னாசிய நாடுகளின் நிபுணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது முக்கிய கேள்வியாகத் தெரிகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இந்தியர்கள் தற்போதைய அறிவியல் யுகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகும்.

ஆனால் இவர்கள் எல்லாம் இந்தியர்களாகவோ தமிழர்களாகவோ இயங்குவார்கள் என்று கருதும் எண்ணப்பாங்கு சற்று அதீதமான கற்பனையாகும். குறிப்பாக கமலா ஹரிஸ் இந்தியராகவும் யூதத் திருமண உறவைக் கொண்டவர் என்பதுவும் அமெரிக்கர்களது தேர்வில் இடம்பிடிக்க முக்கிய காரணியாகும். அது மட்டுமன்றி அமெரிக்க நிர்வாகத்தின் கீழும் அரசியலமைப்பின் கீழும் இயங்கப்போகின்ற ஒருவராகவே கமலா ஹரிஸ் பதவி அமையவுள்ளது. அப்படியான கட்டமைப்புக்குக் கீழ் இயங்கும் ஒருவர் தனிப்பட்ட இன, மத, சமூக வடிவங்களை விட அமெரிக்கத் தேசத்தின் நலனே முதன்மையானது என்று கருத வேண்டும்.

அதனை கடந்த காலத்தில் ஆரோக்கியமாக மேற்கொண்டதன் பிரதிபலிப்பே அவரது துணை ஜனாதிபதி பதவிக்கான தெரிவாகும். அது மட்டுமன்றி அத்தகைய தமிழ் பற்றுதலோ இனப்பற்றுதலையோ இதுவரை வெளிப்படுத்தாதது மட்டுமன்றி இதுவரை தாயகத்திலுள்ள தமிழ் தலைமைகள் எவரும் தெரிவான துணை ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய உணர்வின் தளத்தில் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அமெரிக்க நிர்வாகத்தைப் பொறுத்தவரை புதிய பழைய ஜனாதிபதி என்ற வேறுபாடுகளைக் கடந்து இந்திய தேசத்தை கையாளுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அது தனித்து அரசியலாக மட்டுமல்ல.

அதனையும் கடந்து பொருளாதாரமாக இராணுவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுடனான முறுகல் அமெரிக்காவின் சந்தையை பாதித்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கான ஏற்பாடுகளாக இந்திய சந்தை அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.  அதனை நிரப்பீடு செய்ய வேண்டுமாயின் இந்தியாவை சார்ந்து முடிபுகளையும் திருப்திப்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய சந்தை சீனச் சந்தை போன்றதல்ல. இந்திய நுகர்வாளர்கள் தங்கியிருக்கும் அதிக மனோநிலையைக் கொண்டவர்கள்.
சீனர்கள் பிரதி செய்து தமது சொந்த உற்பத்தியாக்கி அமெரிக்க தொழிநுட்பத்தினை கைப்பற்றியது போன்று அல்ல இந்தியர்களுக்கு. அதனால் இந்தியாவில் அமெரிக்காவின் நகர்வுகள் ஆட்சியை திருப்திப்படுத்தினாலேயே போதுமானது. அதனை நோக்கிய நகர்வையே அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது.  

இதனால் ஏற்படும் விளைவு தனித்து பொருளாதார இலாபமாக மட்டுமன்றி இராணுவ ரீதியானதாகவும் அமையவுள்ளது. அதாவது சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதலானது அமெரிக்க இராணுவச் சந்தையையும் பலப்படுத்தும்.

இரு நாட்டுக்குமான போரால் மட்டுமல்ல போர் பற்றிய தற்போதைய பதற்றத்தாலேயே நகர ஆரம்பித்துவிட்டது. சீன- இந்திய போர் மூளாது விட்டாலும் அமெரிக்காவின் இராணுவச் சந்தையாக இந்தியா மாறிவிடும்.

அதனை தக்கவைக்கவும் தற்காத்துக் கொள்ளவுமே இந்தியத் துணைக்கட்டத்தவர் நியமனத்தில் அதிக முக்கியத்துவம் கொடுகிறது அமெரிக்கா.  

இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசியாவினது நூற்றாண்டு என்பதனால் இந்தியாவை முன்னகர்த்திக் கொண்டு சீனாவைக் கையாள்வது மட்டுமன்றி இந்தியாவையும் அமெரிக்காவுக்கு கட்டுப்பட்ட தேசமாக வைத்துக் கொள்ள அமெரிக்கர்கள் திட்டமிடுகின்றனர்.

அதாவது இந்தியாவையும் சீனாவையும் ஒரே நேரத்தில் கையாளும் உபாயத்தையே அமெரிக்கர்கள் கொண்டுள்ளனர்.

புவிசார் அரசியல் ரீதியில் அயல் நாடுகள் இரண்டும் மோதிக் கொள்வதனால் பாதிப்பு எதுவும் அமெரிக்காவுக்கு ஏற்படப் போவதில்லை.

பாதிப்பு இரு நாட்டுக்குமுரியதென்பது முக்கியமானது. காலம் காலமாக அத்தகைய பாதிப்பு புரையோடிய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இந்தோ- பசுபிக் என்பது அமெரிக்கா முதல் இந்தியா வரையான கடலாதிக்கத்தின் உபாயமாகும். இத்தகைய இரு சமுத்திரங்களையும் இணைத்தலாது இரு தேசங்களையும் அதன் நட்பு நாடுகளையும் ஒன்றிணைப்பதுடன் சீனாவுக்கு எதிராக அணிதிரள்வதுமாகும்.

அத்துடன் சீனாவின் உபாயங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே குவிந்துள்ளது. இந்து சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் சீனா தனது கடல் கொள்கையால் ஆதிக்கம் செய்து வருகிறதை தடுக்கும் விதத்திலேயே அமெரிக்காவின் அணுகுமுறை காணப்படுகிறது. இதில் இந்தியர்களை விட அமெரிக்கர்களே அதிகம் கையாளுகையை வெளிப்படுத்துகின்றனர்.

நாடுகளுக்கிடையிலான அரசியல் கையாளுவதிலேயே தங்கியுள்ளது என்கிறார் ஹன்றி சிஞ்சர். அதில் அமெரிக்கர்கள் முதன்மையானவர்களாக உள்ளனர். அதில் இந்தியர்கள் மிகப் பலவீனமானவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் பொருளாதாரம் இராணுவம் மற்றும் தலைமைதாங்கும் அரசியலையும் இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்கர்களே கையாளுகின்றனர். காலப்போக்கில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கர்களே தீர்மானிக்கும் நிலை ஏற்படும்.  
எனவே இந்திய வழ்சாவளியினர் மற்றும் தமிழர் அமெரிக்க நிர்வாகத்தில் நியமிக்கப்படுதல் என்பது அமெரிக்க நலனுக்கானதே அன்றி அந்தந்த இனப்பிரிவுகளுக்கானதல்ல.

உலகில் யூதர்களே அவ்வகை பதவிகளில் அமர்ந்து கொண்டு தமது இனத்துக்கும் தேசத்திற்கும் பெரு உதவிகளைப் புரிந்தவர்கள்.
அவ்வகை மனோ நிலையோ எண்ணமோ இந்தியர்களுக்கோ தமிழர்களுக்கோ கிடையாது. மாறாக அந்த அந்த தேசத்திற்கும் தேசியத்திற்கும் விசுவாசமாக செயல்படும் போக்கினையே கடந்த காலத்தில் பதிவுகளாக அமைந்துள்ளன. சீனாவை காட்டி இந்தியாவை கபளீகரம் செய்கிறது அமெரிக்கா என்பதையே அவதானிக்க முடிகிறது.  

கே.ரீ. கணேசலிங்கம்    

Comments