அமெரிக்காவின் உலகளாவிய பலம் மீளமைக்கப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் உலகளாவிய பலம் மீளமைக்கப்படுமா?

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுடனான முரண்பாட்டில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளதெனலாம். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட நிலையோடு ஒப்பிடும் போது சற்று தீவிரம் கொண்டதாகவே தெரிகிறது. காரணம் ட்ரம்ப் எப்போதும் ரஷ்யா நட்புடையவராகவும் சீனாவை அதிகம் அரசியலுக்காக மட்டுமே தீண்டுபவராகவுமே காணப்பட்டார். ஆனால் ஜோ பைடனைப் பொறுத்தவரை அமெரிக்க சிந்தனைக் குழாமும் புலனாய்வுக் கட்டமைப்புகளும் இராணுவ மையமும் வழங்கும் ஆலோசனைக்குள் இயங்கக் கூடிய ஜனாதிபதியாவார். அது மட்டுமன்றி மீண்டும் பராக் ஒபாமா நிர்வாகம் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில் நோக்கினால் உலகம் அமைதியாக இருந்தாலும் உள்ளார்ந்த முரண்பாடுகள் அதிகம் கொண்டுள்ள சூழல் ஒன்றுக்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் ஜோ பைடன் ஜனாதிபதியாகிய பின்பு உலகளாவிய தளத்தில் ஏற்பட்டுவரும் சூழலை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது தென் சீனக்கடற் பரப்பில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தென்சீனக்கடல் சீனாவுக்குரியது எனவும் அப்பகுதியில் 2015 முதல் அமெரிக்கா சொந்தம் கொண்டாட முயல்வதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது போர்க்கப்பல்களை தென் சீனக்கடலை அண்டிய பகுதிகளில் நிறுத்தியுள்ளதுடன் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டாவது ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாகவும் அரசுக்கு எதிராக மக்களை போராடத் தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூன்றாவது சீனாவின் விமானப்படை தைவான் வான்பரப்பில் ஊடுவியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 12 போர் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தைவான் வான்பரப்பில் பறந்துள்ளதாகவும் தைவானுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

நான்காவது சீன-−இந்திய முரண்பாட்டினை தீர்க்கும் விதத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் சுமூகமான தீர்வுகளை நோக்கி செயல்பட வேண்டும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதே நேரம் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பென்டகனுடனான உரையாடலில் இந்தோ-பசுபிக் விடயம் தொடர்பிலும் பாகிஸ்தான் எல்லையில் சீனா அமைத்துள்ள படைத்துறை முகாம் தொடர்பிலும் லடாக் பகுதியில் நிலவிவரும் நெருக்கடி தொடர்பாகவும் உரையாடியுள்ளது. இதே நேரம் பிரான்ஸிடமிருந்து 11 ரபேல் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

எனவே உலகளாவிய ரீதியில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிற்பாடு அமெரிக்கா மீளவும் உலக விவகாரங்களில் அதிக ஈடுபாட்டினைக் காட்ட ஆரம்பித்துள்ளது. தென் சீனக்கடல் அதன் பிரதான இலக்காக அமைந்திருப்பதுடன் இந்தோ-, பசுபிக் தந்திரேபாயத்தின் முக்கிய பகுதியாக தென் சீனக்கடல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவும் அமெரிக்காவும் இந்தோ, -பசுபிக் பிராந்தியத்தை நோக்கிய அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இரு தரப்புமே இப்பிராந்தியத்தை நோக்கிய உத்திகளை வகுத்து வருகின்றமை கவனிக்கத் தக்க விடயமாகும். 2020 இன் இறுதிப்பகுதியில் சீனா ஆசியான் நாடுகளுடன் இணைந்து வலுவான பிராந்திய பொருளாதார கட்டமைப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதில் அமெரிக்க  நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பான் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து என்பன இடம்பெற்றிருந்தமை அமெரிக்க அணிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிக்கும் விதத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் அப்பிராந்தியத்தில் இல்லாத போதும் அதனை மீள ஆரம்பிக்க திட்டமி-ட்டு வருவதனைக் காணமுடிகிறது. அது தொடர்பிலான உரையாடல் இந்தியா தரப்புடன் அமெரிக்கா ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பனிப் போருக்கு பின் பின்னான காலப்பகுதியில் அமெரிக்காவின் பிரதான எதிர் நாடுகளாக சீனாவும் ரஷ்யாவும் காணப்பட்ட போதும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் காலத்தில் அதற்கான அணுகுமுறைகள் எதனையும் சரியான முறையில் வழங்க அமெரிக்க முனையவில்லை என்றே கூறலாம். தற்போது புதிய அமெரிக்க நிர்வாகம் அதற்கான நகர்வுகளை தொடர முனைகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் புவிசார் அரசியலில் கொண்டுள்ள உறவினை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ள அமெரிக்கா உலகிலுள்ள தீவு நாடுகளுடனும் புதிய கொள்கையினை  வகுக்க திட்டமிட்டுள்ளது. ஆனாலும் ஆசியாவின் பிரான இரு பிராந்தியங்களான தென்கிழக்காசியாவும் மேற்காசியாவும் முறையே சீனாவிடமும்  ரஷ்யாவிடமும் உள்ளதென்பது கவனத்திற்குரியதாகும். தென்னாசியாவிலும் இந்தியா தவிர்ந்த நாடுகள் சீனாவின் நெருக்கமான உறவுக்குள் அகப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவும் சீனாவின் புதிய பட்டுப்பாதைக்குள்ளும் ரஷ்யாவின் எண்ணெய் குழாய் அரசியலுக்குள்ளும் அகப்பட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்க விடயமாகும்.

ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மேற்கொண்டுவரும் மாற்றங்கள் அப்பிராந்தியத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக முறிந்து போன அமெரிக்க -ஈரானிய உறவை மீளமைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுவருகிறது. அதாவது ஈரான் விரும்பும் பட்சத்தில் அமெரிக்கா அணுவாயுத உடன்பாட்டை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இது ஈரானுக்கு நெருக்கடியானதாக அமைந்துள்ளது மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அதன் நட்பு சக்திகளுக்கும் புதிய நெருக்கடியாகவே தெரிகிறது. பொருளாதாரத்தை மீளக்கட்டுவதா அல்லது அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்வதா என்ற குழப்பத்திற்குள் ஈரான் அகப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் நிர்வாகத்தினால் ஈரான் அதிக இழப்பீடுகளை சந்தித்துள்ளது. அதே நேரம் அணுவாயுதம் என்பது எட்ட முடியாத இலக்காக அமைய வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை சரிசெய்யத் தவறும் பட்சத்தில் உள்நாட்டில் ஏற்படும் குழப்பங்களை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

சிரியாவைப் பொறுத்து அமெரிக்காவின் தற்போதைய நிலை மிகப்பலவீனமாகவே அமைந்துள்ளது. ஈராக், துருக்கி, சிரியா போன்ற நாடுகளது அரசியல் இருப்பு ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நெருக்கமாக அமைந்திருப்பதனால் அமெரிக்கா அதிக மாற்றங்களை இப்பிராந்திய நாடுகள்மீது ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. ஐஎஸ் மற்றும் குர்த்திஸ் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் குறித்து பின்பற்ற வேண்டிய கொள்கைகளில் அமெரிக்கா கடைப்பிடித்துவரும் அணுகுமுறையில் அதிக தலையீடு செய்ய வேண்டிய நி​ைலமை எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து அதிக உரையாடலையும் புதிய கொள்கை வகுப்பினையும் பென்டகன் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதில் ஓரம்சமே ஈரான் விடயமாகும். இஸ்ரேலியரின் அணுகுமுறையில் ஜோ பைடன் நிர்வாகம் அதிக விட்டுக் கொடுப்புகளை செய்யும் நிலையில் இல்லை என்பதுவும் இப்பிராந்தியத்தை ஒன்றிணைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாவே தெரிகிறது. ஈரானுக்கு அமெரிக்க புதிய நிர்வாகம் கொடுத்துள்ள முக்கியத்துவம் இஸ்ரேலிய உறவில் எத்தகைய போக்கு நிலவப் போகிறது என்பதை காட்டுகிறது. ஆனாலும் அமெரிக்க துணை ஜனாதிபதி இஸ்ரேலிய வழி உறவுடையவர் என்பதனாலும் இஸ்ரேலிய அமெரிக்க உறவு உலகளாவிய ரீதியில் முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமானது.

கடந்த நான்கு ஆண்டுகள் உள்நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் அதிகமானவற்றை இழந்துள்ளது அமெரிக்கா என்ற மதிப்பீடு அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கு  உண்டு. ஜோ பைடன் நிர்வாகம் இழந்தவற்றை மீட்கத் தவறுமாயின் அமெரிக்காவின் உலகளாவிய பலம் முடிவை நோக்கியதாகவே அமையும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக நெருக்கடி கொரனோ நெருக்கடி என்பவற்றைக் கடந்து உலகளாவிய ரீதியில் தலைமை தாங்கும் வலுவை அமெரிக்கா கடந்த நான்கு ஆண்டுகளில் இழந்துள்ளதைக் காணமுடிகிறது. அதனைப் பற்றிய உரையாடலை அமெரிக்க நிர்வாகம்;பென்டகன், புலனாய்வுத் துறை என்பன ஆரம்பித்துள்ளன. காரணம் அமெரிக்கா என்பது உலகளாவிய பலத்திலேயே கட்டியெழுப்பப்பட்ட தேசம் என்பது கவனத்திற்குரியதாகும். அதன் அரசியலமைப்பு முழுவதும் அத்தகைய உலகளாவிய அதிகாரத்தை தேடுவதாகவே அமைந்துள்ளது.

எனவே அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மீளவும் உலகத்தினை தனது விருப்பத்திற்கு அமைவாக வடிவமைக்க ஆரம்பித்துள்ளது. உலக விவகாரங்களிலும் நாடுகளது உள்ளூர் அரசியலிலும் தலையீடு செய்ய நிர்ப்பந்திக்க விளைகிறது. காரணம் நாடுகளது அரசியலில் குழப்பத்தினை ஏற்படுத்தும் போது அந்த நாடுகளது அரசியல் எல்லைகள் மட்டுப்படுத்தப்படவும் பிற நாடுகளது விடயங்களில் தலையிடாது செயல்படவும் வழிவகுப்பதாகவே அமையும். அதனை ஊக்குவிக்கும் விதத்திலேயே அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுகின்றன. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் எச்சரிக்கையோடு செயல்படுகின்ற அடிப்படையில் உலகம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அதிகம் அமைதியாகவும் அதே நேரம் ஆபத்தானதாகவும் அமைய வாய்ப்புள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments