![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/04/11/a24.jpg?itok=ISB_7l9i)
என் கணவர் பாராட்டுகளை எளிதில் பெற்றுக் கொள்ளவிரும்பாதவர். ஆனால் இத்தனை ஆண்டுகளாக எனது பலமாகவும் துணையாகவும் மட்டுமே அவர் இருந்திருக்கிறார். அதற்காக நானும், என் மொத்த குடும்பமும், இந்த நாடும் மிகப் பெரிய அளவுக்கு அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்!”
பிரிட்டிஷ் மகாராணியார் தன் எழுபதாம் திருமண ஆண்டு விழாவை கொண்டாடிய போது தன் கணவரான பிலிப் கோமகனை இவ்வாறு பாராடிப்பேசினார். மகாராணியார் பொதுவாகவே யாரையும், பொதுவில் பாராட்டுவதில்லை. தன் கணவரையும் தான். ஆனால் இப் பாராட்டு மிகவும் உண்மையானது. அவர் அப்படித்தான் தன் திருமண வாழ்க்கையை கழித்தார்.
நேற்று முன்தினம் தான் வசித்த வின்சர் மாளிகையில் தன் 99ம் வயதில் மூப்பின் காரணமாக பிலிப் கோமகனார் மரணமடைந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எம்மை ஒரு காலத்தில் ஆட்சி செய்ததால் அந்த ராஜகுடும்பம் நமக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமாக இருந்து வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் வீடுகளில் மகாராணியார் அமர்ந்திருக்க கம்பீரமான தோற்றத்துடன் பிலிப் கோமகன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் பிரேம்பண்ணி சுவர்களில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பெருந்தோட்ட குடியிருப்புகளில் இப் படத்தை அதிகமாகப் பார்க்க முடிந்ததால்தான், 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை நடத்திய றோஹண விஜேவீர, தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கைக்கு விசுவாசமில்லாதவர்கள் என்றும் அவர்கள் வீடுகளில் காந்தி, நேரு மற்றும் மகாராணியார் படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.
இளவரர் பிலிப் கிரேக்கத்தைச் சேர்ந்தவர். உலகில் சில உயர் அரச குடும்பங்களே உள்ளன. ரஷ்யாவின் ஸார் அரச குடும்பம் (அழிந்துவிட்டது) பிரட்டிஷ் அரச குடும்பம், ஜெர்மனிய, மொனோக்கோ, ஸ்பானிய என சில அரச குடும்பங்களே எஞ்சியுள்ளன. கிரேக்க, ஜெர்மனிய, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய அரச குடும்பத்தினர் மத்தியில் பெண் எடுப்பது கொடுப்பது வழக்கில் இருந்து வந்திருக்கிறது. இளவசரின் அரச குடும்பம் ஜெர்மனிய பரம்பரை சார்ந்தது. அதை பெட்டன்பேர்க் என அழைப்பார்கள். ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தில் வாழ்ந்த பெட்டன்பேர்க் குடும்பம் அப்பெயரை விடுத்து, மவுண்ட்பேட்டன் என்ற ஆங்கிலப் பெயரை வரிந்து கொண்டது.
இளவரசர் தன் இளமையை பிரான்சில் கழித்தார். அதனால் அவருக்கு பிரெஞ்சு மொழியில் நன்கு பேசவரும். இரண்டாம் உலகப்போர் காலத்தில் ரோயல் கடற்படையில் சேர்ந்தார். கடற்படை பயிற்சிக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது இரு இளவரசிமார் அக் கல்லூரியை பார்வையிட வந்தனர். அவர்களை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு பிலிப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. வருகை தந்த இளவரசிகளில் ஒருவர் பெயர் எலிசபெத். மற்றவர் மார்கிறட். அப்போது எலிஸபெத்துக்கு 13வயது, தன்னுடன் வந்த வசீகரமான இளைஞனை அவருக்குப் பிடித்துப் போனது. அக்டோபர் 1942இல் கடற்படையின் இளம் லெப்டினன்ட்மார்களில் ஒருவராக பிலிப் விளங்கினார். இதற்கிடையில் இருவருக்கும் இடையிலான நட்பு, காதலாக மாறியது. கடிதத் தொடர்புகள் தொடர்ந்தன. இளவரசியின் அழைப்பில் அரச குடும்ப விருந்துகளில் அவர் கலந்து கொண்டார்.
அரசல்புரசலாக இருந்த காதல் விவகாரம் வெளியே தெரியவந்தபோது எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு அரச குடும்பத்தவர், ‘பிலிப் ஒரு முரடன், மரியாதை தெரியாதவன்’ எனக் குறிப்பிட்டிருந்தாராம். ஆனால் இளவரசி பிடிவாதமாக அவரைக் காதலித்து வந்தார். முதலில் மறுத்த ஜோர்ஜ்மன்னர் இறுதியில் எலிஸபெத்தின் விருப்பத்துக்கு இணங்கினார்.
அரச பாரம்பரியங்களுக்கு அமைய பிலிப் தன் குடும்பப் பெயரைத் துறந்தார். பிரிட்டிஷ் குடிமகனாக மாறினார். தாயாரின் குடும்பப் பெயரான மவுண்ட்பேட்டனை தன் பெயருடன் இணைத்துக் கொண்டனர். திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் 1947 நவம்பர் 29ம் திகதி நடைபெற்றது. அன்று காலை எலிஸபெத் இளவரசரின் அப்பாவான ஆறாம் ஜோர்ஜ் மன்னர் மாட்சிமை பொருந்திய இரு பட்டங்களை அவருக்கு அளித்தார். முதல் பட்டம் எடின்பரோ கோமகன் என்பது. இரண்டாவது மேரியோ நெத் பிரபு என்பதாகும். அதாவது இளவரசரின் திருமணம் செய்து ஜோர்ஜ் மன்னரின் குடும்ப உறுப்பினராவதற்கான தகுதி வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் கடற்படையில் சேவையாற்றிவந்த எடின்பரோ, இளவரசர், ஜோர்ஜ் மன்னரின் உடல் நிலை மோசமானபோது எலிஸபெத்துக்கு உதவும் வகையில் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார். மன்னர் மறைந்ததும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாக முடிசூடப்பட்டார்.
மகாராணியின் கணவர் என்ற அந்தஸ்து கிடைத்த பின்னர் முடியாட்சியை சீர் செய்வது, நவீன மயப்படுத்தல் என்பனவற்றை அவர் மேற்கொள்ள எண்ணிய போதும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர் அவற்றை கைவிட வேண்டியதாயிற்று.
தனது பிள்ளைகளின் பெயருடன் மவுண்ட்பேட்டன் என்ற பெயர் தொடரும் என கோமகன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் மகாராணி அதற்கு சம்மதிக்கவில்லை. மவுண்ட்பேட்டன் என்பதற்கு பதிலாக வின்ட்ஸர் என்ற பெயரே இருக்கும் என்ற முடிவு அவருக்கு மனக்கசப்பை அளித்தது. ஒரு முறை தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘என் பிள்ளைகளுக்கு எனது பெயரை வைக்கும் உரிமைகூட இல்லாதவனாக நான் வாழ்கிறேன் என்றும் நான் எதுவும் இல்லை. ஆனால் ஒரு அமீபா’ என்றும் மனங்கசந்து கூறினாராம் பிலிப் கோமகன்.
கோமகனின் பேரனான ஹெரியும் மேகனும் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தின் மீது என்னென்ன குற்றச் சாட்டுகளை சுமத்தினார்களோ அவற்றையே பிலிப் கோமகனும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சுமத்தியிருக்கிறார்.
ஆனால் அவர் அமைதி காத்தார். வெளிப்படையாக குற்றச் சாட்டுகளை சுமத்தவில்லை. அது மனைவியான மகாராணியை சிறுமைப்படுத்தும் என எண்ணி அவமானங்களை பொறுத்துக் கொண்டார். பல சமூக சேவைகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். தனக்கும் தன் மூத்த மகன் சார்ள்சுக்கும் இடையில் காணப்பட்ட முறுகல் நிலையைப் பற்றியும் வாய்திறக்கவில்லை. காட்டுயிர்கள் பாதுகாப்புக்காக அவர் பெருமளவில் பணியாற்றியிருக்கிறார். மேலும் தன் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படகு சவாரி, கிரிக்கெட், போலோ, சாரட் வண்டி யோட்டம் என்பன அவர் விரும்பிய விளையாட்டுகள்.
‘நான் செய்ய வேண்டிய விஷயங்களை ஒட்டு மொத்தமாக திடீரென என்னால் மாற்றிவிட முடியாது. நான் சில விஷயங்களில் எதிர்வினையாற்றுவது போல எனது விரும்பங்களையோ வழிகளையோ என்னால் மாற்ற முடியாது. அதுதான் எனது பாணி’ என அவர் ஒரு முறை கூறியிருந்தார். அவரது வாழ்க்கை அப்படித்தான் ஆதங்கம் மிக்கதாக இருந்தது. கோமகன் 1952ம் ஆண்டு முதல் 22, 219 பொது நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. 2017 ஓகஸ்ட் மாதம் அவர் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரபலமான ஆண்களின் மனைவியாக இருப்பது எவ்வளவு சிரமமானதோ அவ்வாறே பிரபலமான ஒரு மகாராணி மனைவிக்கு கணவராக இருப்பதும் சிரமமான பணிதான் என்பதற்கு எடின்பரோ கோமகன் ஒரு நல்ல உதாரணம்.
ஆனாரூனா