பொருளாதார வள விஸ்தரிப்புக்கு அமைவாக இராணுவத்தை நவீன மயப்படுத்தும் சீனா | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார வள விஸ்தரிப்புக்கு அமைவாக இராணுவத்தை நவீன மயப்படுத்தும் சீனா

குட்டி ஜப்பான் ஒரு காலத்தில் பென்னம் பெரிய சீனாவை கட்டியாண்டு வந்ததோடு அந் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்ந்தது. இலங்கையில் தமிழ் மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள் எப்படி இன்றுவரை இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு சிங்கள சமூகத்தைப் பார்க்க வைக்கிறதோ அவ்வாறே ஜப்பான் என்றால் சீனர்களுக்கு ஒரு ஒவ்வாமை இருக்கவே செய்யும். ஜப்பானுக்கும் பின்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கும் அடிபணிந்து வந்த சீனா, அது கம்யூனிச செஞ்சீனாவாக மாவோ சேதுங் காலத்தில் மாறிய பின்னர் தன்னை வல்லரசு கனவோடு வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது சீனா. ஐம்பது அறுபதுகளில் உள்நாட்டில் பஞ்சம், பட்டினி, கலாசார புரட்சி எனப் பல பிரச்சினைகள் நிகழ்ந்த போதிலும் சீனா தன் இலக்கை விட்டு கொஞ்சமேனும் நகரவில்லை. அதன் முதல் நோக்கம் தன்னை வல்லரசாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. 1962இல் நிகழ்ந்த இந்திய – சீன எல்லை போர், அதன் பிராந்திய வல்லரசு கனவை கூர் தீட்டிப் பார்க்கும் ஒரு முயற்சியாகவும் கொள்ள முடியும். சீனா எமது நட்பு நாடு, சகோதர நாடு என பண்டித் நேருவை நம்பச் செய்தது; நேருவின் அந்த மனப்பான்மையை போற்றுவதற்கு பதிலாக அதை இந்திய ராஜதந்திரத்தின் பலவீனமாக எடைபோட்டது, புதுடில்லி வந்த சீனப் பிரதமர் சூ. என். லாய் திரும்பிச் செல்லும்போது ‘இந்தி – சீனி பாய்பாய்’ எனக் கை காட்டிச் சென்ற சில மாதங்களில் இந்திய எல்லையில் ஆக்கிரப்புச் செய்தது என அடுத்தடுத்து நிகழ்ந்தவற்றை கணக்கிட்டுப் பார்க்கும்போது இந்த எல்லைப் போர் திட்டமிட்ட ரீதியாக அதன் பலத்தை உரசிப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே கருத வேண்டியிருக்கிறது.

இருந்தபோதிலும் முழுமையான கம்யூனிச பொருளாதாரக் கட்டமைப்புக்குள் ஒரு நெடிய பொருளாதார பாய்ச்சலை மேற்கொள்வது கடினம் என்ற சூழலில் தான் புதிய உலக பொருளாதார அமைப்பு, சுதந்திர பொருளாதார அமைப்பு என்பன மேற்குலகினால் அந்நாடுகளின் நெடிய பொருளாதார பாய்ச்சல் கருதி உருவாக்கப்பட்டன. அதன் ஆழ அகலம் மற்றும் நீட்சியை துல்லியமாகப் புரிந்து கொண்டு சீனா தன் மூடப்பட்ட பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரமாக மாற்றி அமைத்தது. தனிக்கட்சி ஆட்சி, அடிப்படை கம்யூனிச தத்துவங்கள், பரிபாலனம் என்பன அப்படியே இருக்க பொருளாதாரம் மட்டும் திறந்து விடப்பட்டு போட்டிப் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டதோடு வெளிநாட்டு சந்தைக்கான மிகத்தரமான பொருட்களை உருவாக்கும் தொழில் துறையும் முடடக்கி விடப்பட்டது. 1976இல் செஞ் சீனாவின் தந்தையான மாவோ 1976ம் ஆண்டு மறைந்த பின்னர் 1978ஆம் ஆண்டு சீனத் தலைவராக மிளிர்ந்த டெங்சியோ பெங் மிகத்துணிச்சலாக செயல்பட்டு சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி சீனாவை திருப்பிவிட்டார்.

இத்துணிச்சலான தீர்மானமே சீனாவை பிராந்திய வல்லரசாகவும் இப்போது அமெரிக்காவுடன் பொருளாதார ரீதியாக மோதும் நாடாகவும் மாற்றி அமைத்தது. பிராந்திய வல்லரசாக மாறுவதற்கான தன் பாதையை நெடிய பார்வையுடன் அது உருவாக்கி வருகிறது. கடல் பட்டுப்பாதை அல்லது ஒரே பாதை ஒரே சுற்று என்ற அதன் திட்டம் பல ஆசிய நாடுகளை ஒன்றிணைக்கிறது. இந் நாடுகளில் சீனா பெருமளவில் வர்த்தக ரீதியாக முதலீடுகளைச் செய்துவருகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம் என்பன இலங்கையில் அந்நாடு மேற்கொண்ட பிரதானமான முதலீடுகளாகும்.

பிராந்திய வல்லரசாகவும் மேலும் உலக வல்லரசாகவும் வரவேண்டும் என்ற சீனத்தாகம் எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்தப்படக் கூடிய ஒன்றல்ல. சீன நகர்வுகளை மிகச் சரியாக கணக்கிட்டு எதிர் வினையாற்றும் தந்திரோபாயங்களில் பக்கத்து நாடான இந்தியா பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. உதாரணத்துக்கு தடுப்பூசி சந்தை வாய்ப்பைச் சொல்லலாம்.

உலகிலேயே இன்று சுடச்சுட விற்று பெரும் இலாபம் ஈட்டக்கூடிய துறை ஒன்று உண்டென்றால் அது கொரோனா தடுப்பூசி வர்த்தகம் தான். முதல் முதலாக தடுப்பூசியைக் கண்டு பிடித்தது அதை உலகெங்கும் விற்பதன் மூலம் எண்ணிலடங்கா செல்வத்தை ஈட்டலாம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே அந்நாடு கொரோனா வைரசை உருவாக்கி உலவவிட்டது என்ற மேற்கத்திய சிந்தனை ஒன்றுண்டு. கொவிட் – 19 வைரஸ் உலகெங்கும் வியாபித்தபோது செல்வந்த நாடுகள் கொழுத்த இலாபம் தேடக்கூடிய வர்த்தகம் உருவாகி இருப்பதாகவே இதைக் கருதின. அதனால்தான் தடுப்பு மருந்தை அல்லது குணமாக்கும் மருந்தைக் கண்டு பிடிப்பதில் வளர்ந்த நாடுகள் போட்டியிடத் தொடங்கின. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முதலில் மருந்தைக் கண்டு பிடிப்பவர் எந் நாடோ அந் நாட்டுக்கே ஆசிய பிராந்திய தடுப்பூசி வர்த்தகம் வசமாகும் என்பதால் போட்டி போடத் தொடங்கின. ஆனால் வெற்றி பெற்ற முதல் நாடு அமெரிக்காவாகவே இருந்தது. அமெரிக்காவும் பிரிட்டனும் இன்று உலக கொவிட் தடுப்பூசி களஞ்சியங்களாகத் நிகழ்கின்றன.

ஆசியாவில் தடுப்பூசியை முதலில் தயாரித்த நாடு என்ற பெருமை இந்தியாவைச் சார்ந்தது. அவற்றை பக்கத்து நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி பெருமை தேடிக்கொண்டதோடு ஆசிய தடுப்பூசி சந்தையை கையில் எடுக்கவும் முனைந்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்கும் சீனாவின் சினோபார்முக்கும் அனுமதி வழங்கப்படாததால் இந்தியாவுக்கே ஆசிய வாய்ப்பு காத்திருந்தது.

ஆனால் இலங்கையைப் போலவே வர்த்தகத்தோடு ஐயம், கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை கலந்து குழப்பிக் கொள்ளும் மனப்பான்மை இந்தியாவிலும் காணப்படுவதால் கொவிட் கட்டுப்படுத்தப்படாத நிலையிலும் கும்பமேளாவில் மக்கள் கலந்து கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியது. கொவிட் கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கி, இந்தியா பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை வாசகர்கள் அறிவார்கள். இதனால் தடுப்பூசிக்கான தேவை உள்நாட்டில் அதிகரித்துக் காணப்படுவதால் அதை சமாளிக்க முடியாமல் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் ஆசிய தடுப்பூசி களஞ்சிய கனவு இன்று பொய்த்துப்போக, சீனா அச் சந்தையை கைப்பற்றி வருவதாகவே தெரிகிறது.

சீனாவுக்கு என்றுமே தனது இலக்குகளை நிர்ணயம் செய்வதிலும் அவற்றை நோக்கி பயணிப்பதிலும் தளர்ச்சி அடைவதே இல்லை. அது சீனப்பட்டுப்பாதையாக இருக்கலாம், இலங்கையில் அதன் முதலீடுகளாக இருக்கலாம் அல்லது கொவிட் ஆசிய தடுப்பூசி சந்தையாக இருக்கலாம், இலக்குகளும் அதற்கான பயணமும் சரியாகவே இருக்கின்றன.

சீனாவின் உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்திட்டங்கள் சரிவர இயக்கப்பட வேண்டுமானால் அதன் இராணுவமும் சக்திமிக்கதாகவும் நவீனமயப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனை அது என்றைக்குமே கைவிட்டதில்லை. சீனாவில் எத்தனை பிரச்சினைகளானாலும் அவை அந் நாட்டின் அடிப்படை நோக்கங்களை மடைமாற்றம் செய்ததில்லை. இப் பிராந்தியத்தின் பொருளாதார வல்லரசாக மட்டுமன்றி இராணுவ வல்லரசாகவும் திகழ்ந்தால்தான் பொருளாதார இலக்குகளை அடையவும் அவற்றை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என அந்நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவின் இராணுவ பட்ஜெட் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய பட்ஜெட், 2019ம் ஆண்டுக்கான சீன இராணுவ செலவீனம் 240 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் இராணுவ செலவீனத்தைவிட முன்றரைப் பங்கு அதிகமாகும். மொத்த சீன உள் நாட்டு உற்பத்தி வருமானத்தின் 1.7வீதமாக இது அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய காலாட் படையை கொண்ட சீன இராணுவம் தன்னை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் தரத்துக்கு நவீனப் படுத்திக்கொள்வதிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நவீனப்படுத்துவதிலும் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டிவருகின்றது.

சீனா தன் வரவு செலவுகளை ஏனைய நாடுகளைப் போல வெளிப்படைத்தன்மையுடன் பேணுவதில்லை. அதன் இராணுவ செலவீனங்களும் அப்படித்தான். ஆனால் பெருமளவில் அது இராணுவத்துக்கு செலவு செய்கிறது. என்பது உலக நாடுகள் அறிந்த விஷயம். சீனா தன் இராணுவத்துக்காக வருடமொன்றுக்கு இத்தனை மில்லியன் டொலர்களை செலவு செய்வதாக சொல்லப்படும் மேற்கத்திய மதிப்பீடுகளை விட மிக அதிகமாகவே அந்நாட்டின் உண்மையான இராணுவச் செலவு இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஸ்டொக்ேஹம் சமதான ஆய்வு நிலையம் சீனாவின் இராணுவ செலவுகளை ஏறக்குறைய சரியாக மதிப்பிடக் கூடிய நிலையமாக விளங்குகிறது. அதன் மதிப்பீடுகளுக்கு மேற்குலக மதிப்பீட்டாளர் மத்தியில் ஒரு கௌரவம் உள்ளது. சீனா தன் இராணுவத்தில் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் எத்தகைய நவீனத்துவங்களை புகுத்தி வந்திருக்கிறது. தன் ரொக்கட் மற்றும் ஏவுகணை பிரிவில் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளது. கடற்படை மற்றும் விமானப்படையில் என்னென்ன நவீனத்துவங்களை சேர்க்கப்பட்டுள்ளன என்பனவற்றை கணக்கிட்டு இந்த சீன இராணுவ செலவீனங்கள் மதிப்பிடப்படுகின்றன.

2010 – 2017 காலப்பகுதிக்கான சீனா வெளியிட்ட (2019) பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் இராணுவ தளபாடங்களுக்கான மொத்த செலவீனம் 32.2 சதவீதத்தில் இருந்து 41.1 சதவீதமாக உயர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சீனாவின் இராணுவ விண்வெளித் திட்டம், இராணுவத்துக்கு சொந்தமான வர்த்தக முயற்சிகளில் இருந்து பெறப்படும் வருமானம், இராணுவ தயார் நிலைப்படுத்தலுக்கான நிதி இராணுவத்தின் சில பிரிவுகளின் காணி விற்பனை, உபரி உணவு உற்பத்தி விற்பனை மூலம் கிடைத்த வருமானம், மாகாண மட்ட இராணுவ தளங்களை நடத்தும் செலவு என்பன இந்த அறிக்கையில் தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வாண்டுக்கான சீன பாதுகாப்பு செலவீனம் 209 பில்லியன் டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீத அதிகரிப்பாக அமையும் எனினும் 2020க்கான செலவீன அதிகரிப்பை விட இவ்வாண்டுக்கான செலவீன அதிகரிப்பு கொஞ்சம் மட்டுப்பட்டதாக இருக்கும் என இங்கிலாந்து நிலையம் மதிப்பீடு செய்துள்ளது.

Comments