மோதல் எட்டாவது (18.05.2021) நாளையும் கடந்து நிகழ்ந்து கொண்டிருகிறது. உலகத் தலைவர்கள் எச்சரிக்கையும் போர் நிறுத்தம் தொடர்பில் கோரிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் தொலைபேசி உரையாடல்களுமே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பதிலுக்கு 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் 1304 பேருக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டும் உள்ளனர். இதன் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் யூதர்கள் 12 போர் கொல்லப்பட்டும் பலர் காயப்பட்பட்டுமுள்ளனர். ஆனால் அதிக மக்கள் நெருக்கடியுள்ள நகரமான காஸா மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை பொழிந்து கொண்டிருக்கின்றன. ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணையால் அதிரவைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவரையில்லாத அளவுக்கு ஏவுகணைகளும் விமானத் தாக்குதல்களும் நிகழ்த்தப்படுவதாக தெரியவருகிறது. பரஸ்பரம் தாக்குதலின் வேகம் அதிகரித்தாலும் பலஸ்தீனர்களே அதிக பாதிப்பினை எதிர் கொண்டுள்ளனர். இக்கட்டுரை அமெரிக்கா − இஸ்ரேல் - பாலஸ்தீன போரை எப்படி கையாளுகிறது என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
முதலில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அறிவிப்பினை நோக்குவோம். அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காஸா மீதான தாக்குதல் தொடரும் எனவும் ஹமாஸ் அமைப்புப் போன்று தாம் பொதுமக்களைத் தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய இஸ்ரேலிய விமானங்களும் ஹமாஸின் ஏவுகணைகளும் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கியே மேற்கொள்ளப்படுகிறது. பாலஸ்தீன மக்கள் செறிவாக வாழும் பகுதியாகிய காஸா மீது ஒரே தடவையில் 40-, 50கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் தாக்குவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறே இஸ்ரேலிய ஏவுகணைகளும் காஸா நோக்கி ஏவப்படுகின்றன. விமானத்திலிருந்தும் ஏவுகணைகளால் தாக்குதல் நிகழ்த்துவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே இவை அனைத்தும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது. அதுமட்டுமன்றி எல்லையோரத்தில் இஸ்ரேலிய தரைப்படையினரும் பொலிஸாரும் பாலஸ்தீனர் மீது தாக்குதல் நிகழ்ந்துவதாகவும் யூதர்கள் பாலஸ்தீனியரைத் தாக்குவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய தாக்குதலை தடுத்து நிறுத்தும் பலமுடைய ஒரே நாடாக அமெரிக்கா மட்டுமே விளங்குகிறது. காரணம்' இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாக அமெரிக்காவே விளங்குகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பாவித்து தடுக்க முயலுகிறது. அமைதியை ஏற்படுத்த எகிப்தும் மற்றும் அமெரிக்காவும் இஸ்ரேலுடன் உரையாடிய போதும் சாத்தியமான எந்த வழிமுறையும் ஏற்படுத்தப்படவில்லை. ஏற்கனவே ரஷ்யா - சீனா என்பன எடுத்த நடவடிக்கையை அமெரிக்கா தடுத்து நிறுத்த திட்டமிட்டிருந்ததது கவனிக்கத் தக்கதாகும். அது மட்டுமன்றி அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலிய பிரதமரோடு தொலைபேசியில் உரையாடியதுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வர வேண்டும் எனக் கோரினார். அத்துடன் இத்தாக்குதலால் பொது மக்கள் கொல்லப்படுவதற்கு கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஹமாஸ் அமைப்பினரை ஏவுகணைத் தாக்குதலை நிறுத்துமாறும் கோரியுள்ளார். எனினும் ஜோபைடன் ஹமாசிடம் கோரியது போல் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்கா வல்லரசு என்ற வகையில் இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு கொண்டுவர முடியுமாக இருந்தும் அமெரிக்கா மௌனம் காப்பது ஏன் என்பதுவே முக்கியமானது. ஜோபைடன் ஒரு ஜனநாயகவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டார், பதவியைப் பிடிக்கும் வரை. மனித உரிமையாளரும் ஜனநாயகவாதியுமாகவும் விளங்கினார். குறைந்த பட்சம் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேல் தொடர்பில் பின்பற்றிய கொள்கையைக் கூட பின்பற்றாது அசல் வெள்ளைக்கார ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்கிறார். ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறது ஜோபைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்?
முதலாவது, ஜோபைடன் தலைமையில் கீழ் அமெரிக்காவை மீளவும் ஒரு வல்லரசாக மேற்காசியாவில் நிறுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஈரான், சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகளில் அதிக நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் காலத்தில் அதிகமான இழப்பினை மேற்காசியாவில் அடைந்தது. ஏறக்குறைய இஸ்ரேலை விட ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வெளியேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ஏமிரோட் என்பனவற்றுடன் ஓரளவு உறவிருந்தாலும் அந்நாடுகளும் அதிருப்தியில் உள்ளன. எனவே இவை அனைத்துக்கும் ஒரு மிரட்டலை கொடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. அதனையே இஸ்ரேல் பின்னால் நின்று கொண்டு அமெரிக்கா நகர்த்துகிறது. ஐ.நா சபையில் இஸ்ரேலைப் பாதுகாப்பது போல் இஸ்ரேலுக்கு ஆயுத வினியோகத்தையும் அமெரிக்கா மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த காலப்பகுதியில் எந்த வெளிநாட்டு விமானங்களும் இஸ்ரேலில் தரையிறங்காத நிலை ஏற்பட்டிருந்தது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை கருத்தில் கொண்டு அனைத்து பயணிகள் விமானங்களையும் இஸ்ரேல் ரத்து செய்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் ஜேர்மனிய இராணுவத் தளத்திலிருந்து இரு தடவை பென்கூரியன் விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து தரையிறங்கியுள்ளன. அமெரிக்க பாராளுமன்றம் 735 பில்லியன் அ.டொ. ஆயுத தளபாட விற்பனைக்கு ஏற்கனவே இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருந்திருந்தது. அதுமட்டுமன்றி கடல் வழியாகவும் அத்தகைய ஆயுதங்கள் இஸ்ரேலுக்குள் வருகைதந்திருக்கலாம் எனவும் தகவல்கள் உண்டு. எனவே அமெரிக்காகவே பின் நின்று இந்தப் போரை நிகழ்த்துகின்றது என்பது தெளிவாகிறது.
இரண்டாவதாகப் பார்ப்போமானால் ரஷ்யா மேற்காசியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியை முழுமையாக கட்டுப்படுத்தும் வலுவுடையதாக உள்ளது.குறிப்பாக தனது மத்திய ஆசியப்பரப்பினூடாக ஆப்கானிஸ்தான் ஈரான் சிரியா வழி தளங்களையும் துறைமுகங்களையும் வைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்கா இஸ்ரேலை மையப்படுத்தியே நகர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா அதிக செல்வாக்கு செலுத்தி வருகிறது.இரு நாடுகளுமே அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்ற அடிப்படையில் அதிக நெருக்கடிக்குள் அமெரிக்காவை தள்ளிவருகின்றன. அதனால் இந்த போரை அந்நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதுடன் இப்போரில் ஈரான் ஈடுபடுமாயின் போரை வேறு திசைக்கு நகர்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைகின்றன.
மூன்றாவதாக, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் மட்டுமானதல்ல. இஸ்ரேலிய நகரங்களை நோக்கி லெபனான் சிரியா மற்றும் ஈரான் ஆதரவு போராளிக்குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருகிறது. துருக்கியும் தனது ஆயுதக்குழுக்களை தாக்குதலுக்கு தூண்டலாம் என்ற தகவல்கள் உள்ளன. இதனாலேயே சர்வதேச மன்னிப்புச் சபை, இதன் திசை மாறுமாயின் உலகளவிலான ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அதற்கான சூழல் உருவாகு முன்னர் போரை நிறுத்துமாறும் ஐ.நா. சபையை கோரியுள்ளது. போர் தொடர்வதை இஸ்ரேல் விரும்பாது விட்டாலும் அமெரிக்கா விரும்புவது போலத் தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு வெளிவிவகார செயலாளர்களது அறிக்கைகள் வெளிப்படுத்தும் செய்திகள் அவ்வாறான ஒரு போரை மேற்காசியாவில் மேற்கொள்ள தயாராக உள்ளதையே காட்டுகிறது.
நான்காவதாக ரஷ்யாவின் சுனாமி ஆயுதம் மற்றும் சீனாவின் பொருளாதார பாய்ச்சல் ஆகிய இரண்டுமே அமெரிக்க உலகளாவிய ஆதிக்கத்திற்கு தடையானவை. அதனைக் குழப்ப வேண்டிய நிலை உருவாகியிருப்பதுடன் அதற்கான கூட்டுப் பாதுகாப்பு அவசியமானதாக உள்ளது. அதனை நோக்கிய நகர்வை இராணுவத்திலும் ஆயுத தளபாடத்திலும் ஆயுத தொழிநுட்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு உள்ளது. அதனை இஸ்ரேலிய ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய விஞ்ஞானிகளை விட இஸ்ரேலின் நிதி அமெரிக்காவுக்கு தேவையானதாக உள்ளது. அத்தகைய உத்திகளும் ஹமாஸ்- இஸ்ரேலிய போருக்குள் அகப்பட்டுள்ளது. அதனால் இப்போரை இலகுவில் முடிவுக் கொண்டுவருவதென்பது கடினமானதே.
எனவே இஸ்ரேலின் நலன்கள் மட்டுமல்ல அமெரிக்க நலன்களும் குவிந்துள்ள போர் பாரிய விளைவை மேற்காசியப் பரப்பில் ஏற்படுத்த விளையும் என்பது கவனிக்கத்தக்கதாகும். இதில் ரஷ்யா, சீனாவின் பங்கு எத்தகையது என்பதைப் பொறுத்தே மாற்றங்களும் விளைவுகளும் அமைய வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்குரியவை ஐ.நா மற்றும் அதன் பாதுகாப்புச் சபையுடன் நிறுத்திக் கொண்டுள்ளன தமது நகர்வுகளை. ஆனால் ஹமாஸ் பாவிக்கும் ஏவுகணைகளும் ஆயுத தளபாடங்களும் இந்த இரு நாடுகளதும் என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டாகும். தற்போது ஈரான் தயாரிப்பு ஏவுகணைக்களும் இஸ்ரேலைத் தாக்குவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. அதனாலேயே போர் வேறு திசைக்கு நகரலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனா அதிகம் போரில் முனைப்புக்காட்டாத அரசு. எனவே ரஷ்யாவின் நடவடிக்கையிலேயே மேற்காசிய பரப்பில் மாற்றம் சாத்தியமாகும். அது வரை அமெரிக்கா தனது இலக்குகளை இலகுவாக நகர்த்தி செல்லும்.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்