தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயம் ஆகிவிட்டதாக நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.ரஜினியுடன் 'அண்ணாத்த', விஜய் சேதுபதியுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக 'நெற்றிக்கண்' படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரபடுத்துதல் தொடர்பான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா பேசியுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதம்பரியாக 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள். அண்மையில் மோதிரம் அணிந்த கையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இதயத்தில் கை வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ் சிவன் 'விரலோடு உயிர் கூட கோர்த்து' என கேப்ஷனும் போட்டிருந்தார்.
இப்படத்துக்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 15-ம் ஆம் திகதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் கையில் நயன்தாரா அணிந்துள்ள மோதிரம் குறித்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி கேள்வி கேட்கிறார்.
அதற்கு இந்த மோதிரம் தனது நிச்சயம் மோதிரம் என பதிலளித்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவனிடம் பிடித்தது என்ன என கேட்கும் போது, அனைத்தும் என சொல்லும் நயன்தாரா, பிடிக்காத விஷயங்களும் உண்டு என தெரிவித்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.