![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/09/26/a15.jpg?itok=_0d0h98i)
நியூயோர்க்கில் கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 76வது அமர்வில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உலக அரசியலில் தமது அரசியல் செல்நெறி வகிபாகம் தொடர்பான உரைகளை நிகழ்த்தினார்கள். இந்நிலையில் வழமை போல் அமெரிக்க ஜனாதிபதியின் உரை பல வாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொள்ளும் முதலாவது ஐ.நா அமர்வாக இது அமைந்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதியின் உரை வெளிப்படுத்தும் அரசியல் பின்புலத்தை தேடுவதாகவே உள்ளது.
கடந்த செப்டெம்பர்-21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 76வது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. முதல்நாள் அமர்விலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உரையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் ஆக்கஸ் ஒப்பந்தத்தால் ஐரோப்பிய நாடுளுடனான உறவில் நெருக்கடி மற்றும் அதிகரிக்கும் அமெரிக்க-சீன போட்டி எனும் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் அவரது உரை அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. பைடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தனது முதல் உரையைப் பயன்படுத்தி அமெரிக்க குடிமைத்தலைமை இராணுவ சக்திக்கு மாறான விடயங்கள் கொரோனா வைரஸ் காலநிலை மாற்றம் மற்றும் இணையப் போர் போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளை தீர்க்க உந்து சக்தியாக செயல்படும் ஒரு உலகத்தை விவரித்திருந்தார்.
பைடனின் ஐ.நா பொதுச்சபை கன்னி உரை சர்வதேச அரசியல் பரப்பில் எழுந்த கேள்விகளுக்கு உறுதியான பதிலளித்துள்ளதா? என்பதை அவரது உரையின் உள்ளடக்கங்களை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுவதன் மூலமே அறிந்து கொள்ளலாம்.
முதலாவது அமெரிக்கா அதன் நீண்ட போரை முடித்த பிறகு அரச சுதந்திரத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கப்போவதாக பைடன் தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இடைவிடாத போரின் காலகட்டத்தை நாங்கள் மூடிவிட்டோம் இடைவிடாத இராஜதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறோம். உலகம் முழுவதும் மக்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளில் முதலீடு செய்ய எங்கள் வளர்ச்சி உதவியின் சக்தியைப் பயன்படுத்துகிறோம். எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தானது அமெரிக்காவின் இராஜதந்திரம் வன்அதிகாரத்திலிருந்து சீனா மாதிரியிலான மென் அதிகாரத்துக்கான மாற்றத்தை நோக்கி போகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மென் அதிகாரம் பற்றிய கருத்தாடல் அமெரிக்க புலமையாளர்கள் மட்டத்திலிருந்து 1990களில் உருவாக்கம் பெற்ற போதிலும் அமெரிக்காவின் முன்னைய ஆட்சியாளர்கள் அது தொடர்பான சரியான மதிப்பீட்டை செய்ய தவறியுள்ளார்கள். இன்று சீனாவின் அபரிமித வளர்ச்சியை தடுக்க இயலாத சூழலில் சீனாவின் வளர்ச்சிக்கு காரணமான மென் அதிகார அணுகுமுறையை அமெரிக்கா செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளின் வெளியேற்றமும் மென் அதிகார அணுகுமுறையின் ஒரு பகுதியேயாகும்;.
இரண்டாவது ஆயுதங்களை விட அறிவியலை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை பைடன் முன்னிலைப்படுத்துகின்றார். “அமெரிக்க இராணுவ சக்தி நமது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். நமது முதல் முயற்சியாக இருக்கக்கூடாது. மற்றும் உலகெங்கிலும் நாம் காணும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆயுதங்களால் தீர்வை பெற முடியாது. உண்மையில் இன்று எங்களின் மிகப் பெரிய கவலையான கொவிட்-19 அல்லது அதன் எதிர்கால மாறுபாடுகள் ஆயுத பலத்தின் மூலம் தீர்க்கப்படவோ பாதுகாக்கவோ முடியாது.” என ஆயுத போட்டி தேவையற்றது என்ற சாரப்பட கருத்துரைத்துள்ளார். எனினும் செப்டெம்பர்- 21 அன்று இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ள பைடனே செப்டெம்பர்-15அன்று பிரிட்டனுடன் கூட்டு சேர்ந்து அவுஸ்ரேலியாவுடன் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் வடிவமைப்பு மற்றும் அணுவாயுதத்தை தாங்கி செல்லக்கூடிய க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளடங்கிய ஆக்கஸ் எனும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2021ஆம் ஆண்டு ஸ்வீடன் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா தனது உலகளாவிய ஆயுத ஏற்றுமதியின் பங்கை 37வீதத்தால் ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துக்கொண்டே ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பாக அமெரிக்க உலகிற்கு வழிகாட்டுவது அமெரிக்காவின் போலிகளின் சாட்சியமாகவே அமைகிறது.
மூன்றாவது ஆப்கானிஸ்தானில் 20வருட மோதலை நாங்கள் முடித்துவிட்டோம் என்ற கருத்தை ஐ.நாவில் பைடன் பதிவு செய்துள்ளார். அதேவேளை அமெரிக்கா தொடர்ச்சியாக பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்பாக இருக்கும் என்பதையும் பதிவு செய்துள்ளார். இவரது இவ்விரு கருத்துக்களிலும் அதிக முரண்பாட்டை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20வருட மோதலை அமெரிக்கா யாருக்கு எதிராக செய்தது என்பது சிந்திக்க வேண்டிய விடயம். 20வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் ஆட்சியிலிருந்த தலிபான்களே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேறும்போதும் ஆட்சியிலுள்ளார்கள். அத்துடன் அமெரிக்கா பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி 20ஆண்டுகள் அவர்களுக்கு எதிராகவே போரும் புரிந்தார்கள். இந்நிலையில் அமெரிக்கா 20வருட போரினை முடிவு செய்துள்ளதாக என்ற பெருமிதமான அறிவிப்பின் மூலம் அமெரிக்கா தனது இயலாமையை மறைக்கின்றது என்ற செய்தியையே வழங்குகின்றது. அத்துடன் பயங்கரவாதம் அமெரிக்காவிற்கு எதிரானது எனக்கூறும் அமெரிக்கா 20ஆண்டுகள் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட தலிபான்களை ஆட்சியாளர்களாக அங்கீகரித்துள்ளது. இது அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கான வரையறை தொடர்பில் சந்தேகத்தை உருவாக்குகிறது. அமெரிக்காவின் நலனுக்கு எதிராகும் போது பயங்கரவாதமாகவும் அமெரிக்க நலனுக்கு இடையூறு இல்லாத போது அவை பயங்கரவாதமற்றவையாகவும் மாறும் வரையறைதான் பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் வரையறை என்பதையே பைனின் உரையும் செயலும் வெளிப்படுத்துகிறன.
நான்காவது பைடனின் ஐ.நா உரையில் உலகம் ஒன்றுபட வேண்டும் என்ற அறைகூவலை விடுக்கின்றார். “21ஆம் நூற்றாண்டின் அடிப்படை உண்மை நம் ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் ஒரு உலகளாவிய சமூகமாக நமது சொந்த வெற்றி மற்றவர்கள் வெற்றி பெறுவதில் பிணைக்கப்பட்டுள்ளது. எங்கள் சொந்த மக்களுக்கு வெற்றியை வழங்க நாம் உலகின் பிற பகுதிகளிலும் ஆழமாக ஈடுபட வேண்டும் என பைடன் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் செயற்பாடுகளில் உலக நாடுகளுடனான ஒற்றுமை கேள்விக்குரியதாகவே உள்ளது. பனிப்போர் நிறைவடைந்த பின்னரும் இன்றுவரை ரஷ்யாவை சந்தேகத்துடனே அமெரிக்க கையாள்கிறது. சீனாவுடனான வர்த்தகப்போர் தற்போது வல்லரசுப்போராக பரிணமித்துள்ளது. இவற்றை தாண்டி அமெரிக்கா தனது நெருக்கமான கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளுடளே தற்போது பிணக்கை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக அதிகம் பிரிவினையுடன் இயங்கிக்கொண்டே அமெரிக்க ஜனாதிபதி உலகை ஒன்றுபட அழைக்கின்றார். இவ் ஒற்றுமை அழைப்பானது தனது எதிர் நர்டுகளுக்கு எதிராக அமெரிக்காவை கட்டமைக்கும் வியூகமாகவே அவதானிக்கப்படுகிறது.
ஐந்தாவது அமெரிக்கா பனிப்போரை விரும்பவில்லை எனும் கருத்தை பைடன் ஐ.நா உரையில் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனாவிற்கு பின்னரான சர்வதேச அரசியலில் அதிகம் அமெரிக்க- சீன பனிப்போர் அரசியலே முதன்மையான விவாதமாக காணப்படுகிறது. இரு நாடுகளின் நிகழ்வுகளும் அதனை ஊக்குவிப்பதாகவே காணப்படுகிறது. அண்மையில் தென்கிழக்காசியாவிற்கான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பயணம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே பனிப்போருக்கான நகர்வாகவே அவதானிக்கப்பட்டது. அங்கு அவர் நிகழ்த்திய உரையும் அதனையே வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே பைடன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுடன் ஒரு புதிய பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளமை பயனற்ற கருத்தாகவே அவதானிக்கப்படுகிறது. பனிப்போரை விரும்பவில்லை எனும் கூறுமிடத்தேயே அதற்கு பதிலாக அமெரிக்கா அதிகரித்து வரும் எதேச்சதிகாரங்களை எதிர்கொள்ள முற்படும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் கூட்டு எதிர்காலத்திற்கான திறவுகோலாக இருக்கும் எனவும் பனிப்போருக்கான சூழலின் இருப்பையே வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்