ஐரோப்பிய அரசுகளின் இராஜதந்திர நகர்வும் உக்ரைன்-ரஷ்ய போர் பதற்றக் குறைப்பும் | தினகரன் வாரமஞ்சரி

ஐரோப்பிய அரசுகளின் இராஜதந்திர நகர்வும் உக்ரைன்-ரஷ்ய போர் பதற்றக் குறைப்பும்

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  யாழ். பல்கலைக்கழகம்

யதார்த்தவாதக் கோட்பாடு போரற்ற உலகத்தை நோக்கிய நகர்வுக்கு வித்திடுவதாக யதார்த்தவாதிகள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம்

உலகப் போருக்கு பின்பான பனிப்போர் அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளின் இராணுவ வலுவை அதிகரித்ததன் மூலம் உலகப் போர் ஒன்று ஏற்படாது தவிர்த்ததாகவும் அதற்கு அரசுகளின் இராணுவ மற்றும் ஆயுத தளபாடங்களின் பலமே காரணமெனவும் யதார்த்தவாதிகள் விவாதிக்கின்றனர். அத்தகைய யதார்த்தவாதத்திற்குள்ளேயே ரஷ்ய மேற்குலக அரசியல் நகர்கிறது. உக்ரைனை மையப்படுத்தி ரஷ்யா ஆரம்பித்த போர்ச் சூழல் படிப்படியாக அமைதியை நோக்கிய இராஜீக நடவடிக்கைகளுக்கு உள்ளாகிறது. உக்ரைனுக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் போர் புரியப் போவதாக கூறப்பட்ட போதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் போரின் விளைவுகள் தம்மையே பாதிக்கும் என்பதனால் போரை தவிர்க்க முயலுகின்றன. அதற்கான இராஜீக நகர்வுகளை முதன்மைப்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையும் அத்தகைய இராஜதந்திர நடவடிக்கைகளை அளவிடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, ரஷ்ய ஜனாதிபதி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்வில் 04.02.2022 அன்று கலந்து கொண்டதுடன் இரு நாட்டுக்குமான இராணுவ வர்த்தக புரிதல் எட்டப்பட்டது. இரு தலைவர்களது கூட்டறிக்கையிலும் நேட்டோவின் விஸ்தரிப்பையும் அமெரிக்காவின் அணுகுமுறையையும் கண்டித்ததுடன் போர் ஒன்றுக்கான வாய்ப்புக்களை ரஷ்யா சீனாவுடன் இணைந்தே எதிர்கொள்வதற்கான புரிதலும் ஏற்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி நேட்டோவினது தீவிரத்தன்மையை கூட்டாக எதிர் கொள்வதுடன் உலகளாவிய அமைதிக்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டன. போர் பதற்றமும் நேட்டோவின் மிரட்டலும் ரஷ்ய ஜனாதிபதியின் பீஜிங் விஜயத்திற்கு பின்னர் மாற்றமடைய ஆரம்பித்தது. ஏற்கனவே பாரிய உடன்பாடின்றி ஒத்துழைத்த இரு தேசங்களையும் போர் பதற்றம் ஒன்றிணைத்ததுடன் பலமான இராணுவ உடன்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற அச்சத்தை மேற்குலகத்திற்கு ஏற்படுத்தியது. அதிலும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் தலைமைகள் உக்ரைனுடன் ஏற்படுத்திய நெருக்கம் அதிக குழப்பத்தை ஐரோப்பாவுக்குள் உருவாக்கும் நிலையை உணரக்கூடியதாக அமைந்திருந்தது. அது ரஷ்யாவையும் பாதித்தது. அதனை எதிர்கொள்ளும் விதத்திலேயே சீனாவுடனான நெருக்கத்தை விளாடிமிர் புட்டின் ஏற்படுத்தினார்.

இரண்டாவது, ரஷ்ய ஜனாதிபதியின் சீன விஜயம் நிறைவு பெற்றதும் ஐரோப்பாவுக்குள் தலையெடுத்த பிரிட்டன் பின்வாங்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ரஷ்யாவுக்கு 07.02.2022 இல் பயணமானார். அவர் புட்டினுடன் உக்ரைன் போர் பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கைக்கான பேச்சுக்களை ஆரம்பித்தார். அவர் புட்டினுடனான பேச்சுககளுக்கு பின்பு கருத்து தெரிவிக்கும் போது இப்பேச்சுவார்த்தை அவசியமானது. ஐரோப்பாக் கண்டத்தின் பாதுகாப்பிற்கும் உறுதிப்பாட்டுக்குமான சூழலை உருவாக்க உதவுமெனவும் புட்டினுடனான சந்திப்பு போர் பதற்றத்தை தணிப்பதற்கான முதல்படி என்றும் தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி மக்ரோனின் மத்தியஸ்த நடவடிக்கையை பராட்டியதுடன் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார். பிரான்ஸ் ஜனாதிபதி 08.02.2022 உக்ரைன் தலைநகரான கீவ் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலெஸ்ன்ஸ்கியுனான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அப்போது கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி சமரசப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதே நேரம் உக்ரைன் ஜனாதிபதி வெற்று வார்த்தைகளை நான் நம்பவில்லை. உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஒவ்வொரு அரசியல்வாதியும் வெளிப்படையாக இருக்கமுடியும் என்றார். பிரான்ஸ் ஜனாதிபதியின் மத்தியஸ்த முயற்சியில் அடுத்த கட்டமாக ஜேர்மனியின் தலைநகரான பேர்லினுக்குச் சென்று அங்கு ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களுடன் இணைந்து உக்ரைனுக்கான கூட்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.

மூன்றாவது, மக்ரோனின் ரஷ்ய விஜயத்திற்கு சமதையாக ஜேர்மன் தலைவர் ஓலாப் ஷோல்டஸ் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் விடயம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு தலைவர்களும் பேச்சுக்களுக்கு பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி உக்ரையின் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு பெற்றோலியப் பொருட்களை கொண்டு செல்லும் 'நோட் ஸ்ரீம்' என அழைக்கப்படும் எரிவாயுகுழாய் வினியோகம் துண்டிக்கப்படும் என எச்சரித்தார். இது கருங்கடல் வழியாக ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான குழாய் திட்டமாகும். 2019 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டு 2022 இல் நிறைவு பெற்றுள்ளது. எனினும் அதற்கான விநியோகம் ஆரம்பிக்கப்படவில்லை. 1230 கீ.மீ. நீளமுடைய இத்திட்டம் மேற்கு ஐரோப்பாவை நோக்கி விஸ்தரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது. ரஷ்யாவின் பொருளாதார இருப்பு எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதியிலேயே அதிகம் தங்கியுள்ளது. அவ்வாறே ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களையே இறக்குமதி செய்து வருகின்றன.

நான்காவது, இத்தகைய இராஜதந்திர முயற்சிகள் ஒருபக்கம் அமைய பெலாரஸ் நாட்டுடன் இணைந்து ரஷ்யா போர்ப்பயிற்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளது. 10 நாட்கள் நீடிக்கும் போர்ப்பயிற்சியானது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அத்தகைய போர் ஒத்திகைகள் போரை தவிப்பதற்கும் வழியமைக்கலாம் என்ற உரையாடலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. காரணம் நேட்டோவின் போர் நகர்வை கையாளும் உத்தியுடன் சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி புடின் பெலாரஸ் நாட்டுடன் போர் ஒத்திகையை மேற்கொள்வதன் நோக்கம் நேட்டோவின் நடவடிக்கைக்கு எதிரானதாகவே அமையகிறது. அதாவது நேட்டோவின் கூட்டு பாதுகாப்பிற்கு நிகரான கூட்டை உருவாக்கும் உத்தியில் விளாடிமிர் புடின் போர் ஒத்திகையை முதன்மைப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாது போரை இறுதித் தெரிவாக கொண்டாலும் அதில் எப்படி வெற்றி ஈட்டுவதென்ற உத்தியையும் புடின் வகுத்து வருகின்றார். மீள மீள ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிடுவது படைகுவிப்பானது உக்ரையினைத் தாக்குவதற்காக அல்ல எனவும் அவ்வாறே போர்ப் பயிற்சியும் போருக்கான தயாரிப்பல்ல என்பதையும் முதன்மைப்பத்துகின்றார். ஆனால் நேட்டோவின் நகர்வுகளை கண்டிப்பதுடன் நேட்டோவில் உக்ரையின் இணைவதை நிராகரிக்கின்றார். அதனால் அவர் போருக்கு தயாராகிறார் என்பதே அதன் அடிப்படையாகும். ஆனால் போர் என்பவது இரு தரப்புக்கும் இறுதி முடிபாகவே அமையும்.

ஐந்தாவது ஐரோப்பா தன் மீதான ஒரு போரை தவிர்க்க முயலுகிறதைக் காணமுடிகிறது. பிரான்ஸ் ஜனாதிபதியின் நகர்வு அமெரிக்காவின் நலன்களுக்கு மாறானதாகவே அமைந்துள்ளது.

(15ஆம் பக்கம் பார்க்க)

Comments