உக்ரைன் போரும் உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்களும்! | தினகரன் வாரமஞ்சரி

உக்ரைன் போரும் உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்களும்!

மேற்கு மீண்டும் ஒரு போருக்கான வாய்ப்பினை ஈரோசியப் பரப்பில் ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவில் இணைவதற்கான உக்ரையினின் நகர்வே இப்போருக்கான அடிப்படையாக உள்ளது. ஆனாலும் ரஷ்யா அமெரிக்கப் போட்டியுடன் நேட்டோ சார்ந்த முரண்பாடும் இதன் பின்னாலுள்ள காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய போர் பிராந்திய அரசியல் நிலைமைகளை முதன்மைப்படுத்தினாலும் நீண்டகாலத்தில் பாரிய மாற்றங்களை நோக்கிய நகர்வுகள் தவிர்க்க முடியாததாக அமையவுள்ளன. அத்தகைய மாற்றங்கள் ஏற்கனவே நிலவியுள்ள உலக ஒழுங்கை மாற்றத்துக்கு உள்ளாக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இக்கட்டுரையும் உக்ரைன் மீதான ரஷ்சிவின் போர் கையாளப்படும் உத்தியையும் அது உலக அரசியலில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை தேடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

21.01.2022அன்று டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரு பிரதேசங்களையும் சுயாட்சி பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியதோடு, 24.02.2022அன்று உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா பிரகடனப்படுத்திக்கொண்டது. இத்தகைய பிரகடனத்தின் நகர்வுகள் ஆரம்பத்தில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய சுதந்திர குடியரசின் எல்லைகளை மையப்படுத்தி நகர்ந்த போதும் கிழக்கு உக்ரைனூடாக தாக்குதலின் நகர்வு தீவிரமடைய ஆரம்பித்தது. ரஷ்யாவின் இராணுவ பலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பின்தங்கிய நிலையிலிருந்த உக்ரைன் அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளால் இராணுவ ஆயுத தளபாட ரீதியில் பலப்படுத்தப்படுகின்றது. ரஷ்யாவின் போர் நகர்வுகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரு குடியரசுகளின் பிரதேசங்களை நோக்கியதாக அமைந்த போதும் அதன் தாக்குதல்கள் ஏவுகணைகளையும், விமானங்களையும் முதன்மைப்படுத்தியதாக மாறி உள்ளது. உக்ரைனின் தலைநகரமான கியூவை நோக்கியும் ரஷ்யாவின் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. சுதந்திர குடியரசின் எல்லைகளை மையப்படுத்தி இருக்கும் தரைப்படையின் நகர்வு படிப்படியாக உக்ரைனின் இதர பிரதேசங்களை நோக்கி விஷ்தரிக்கப்படுவதாகவும், கிரிமியாக்கூடாக அத்தகைய நகர்வை முதன்மைப்படுத்துவதாகவும் அவதானிக்க முடிகிறது. மேற்கு ஊடகங்களும் ஆய்வாளர்களும், அமெரிக்க புலனாய்வாளர்களும் ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் ஏதுநிலை ஏற்படும் என்பதை தவிர்க்கவே முயலுகிறது. அதுமட்டுமன்றி உக்ரைனின் மிகப்பிரதானமான இராணுவ வலிமையென்று கருதப்பட்ட சொர்னோபில் அணுநிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதோடு அப்பிரதேசம் உக்ரைன் தலைநகரிலிருந்து 143.1கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதும் ரஷ்யா உக்ரைனை முழுமையாக கைப்பற்றுகின்ற நோக்கத்தோடு நகர்வதாகவே தெரிகிறது. ஆனால் 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீதான ரஷ்சிய தாக்குதலும் 2014ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலும் அத்தகைய கருத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. ஜோர்ஜியாவின் முழுப்பகுதியிலும் தாக்குதலை நிகழ்த்திவிட்டு தெற்கு ஒசட்டியாவையும், அப்காசியாவையும் கைப்பற்றி குடியரசுகளாக பிரகடனப்படுத்தி பின்னர் தனது செல்வாக்கு மண்டலமாக பராமரித்து வருகிறது. அதேபோன்று 2014ஆம் ஆண்டு போரிலும் கிரிமியாவை கைப்பற்றும் போது இதே மாதிரியான இராணுவ உத்திகளை புடின் பின்பற்றியிருந்தார். ஆனாலும் நேட்டோவின் விஸ்தரிப்பு என்பது உக்ரைன் ஜனாதிபதி ஷெலஸ்கியால் அவரது பாதுகாப்பு அமைச்சால் அவரது வெளிவிவகார அமைச்சால் மீள மீள உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. எற்கனவே உக்ரைனின் எல்லை நாடுகளான போலந்து நேட்டோவில் அங்கம் பெற்றிருப்பதும் நேட்டோ படைகள் போலந்து நோக்கி நகர்ந்திருப்பதுவும் ரஷ்யாவிற்கு இருவகையான எச்சரிக்கையை கொடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்றி ரஷ்யாவிற்கு ஆதரவானவரை ஆட்சியலமர்த்தி ரஷ்யாவின் செல்வாக்கு பிராந்தியமாக மாற்றுவது. இரண்டாவது உக்ரைனை முழுமையாக கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வது. இத்தகைய தெரிவில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் நேட்டோவின் விஷ்தரிப்பு தவிர்க்க முடியாது உக்ரைனை நோக்கி நகரும். இத்தகைய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உக்ரைன் மீதான ரஷ்ய போரை அவதானித்தால் உக்ரைன் முழுமையாக ஏதொவொரு வகையில் கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ரஷ்யாக ஆளாகியுள்ளது.  

இவ்வகைப்போர், பிராந்திய அரசியலை புவிசார் அரசியலை கடந்து உலகளாவிய அரசியலில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த விளைகிறது. அவற்றை விரிவாக நோக்குதல் அவசியமாகும். 

முதலாவது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணி உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரையில் பதில் இராணுவ நடவடிக்கைக்கு முன்வரவில்லை என்பதுவும் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வார்த்தையிலிருந்து தெரிய வருகிறது. ஜோ பைடன் அமெரிக்க இராணுவம் உக்ரைன் போரில் ஈடுபடாதென்ற செய்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எனவே நேட்டோவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவானது ஏனைய நேட்டோ நாடுகளை உக்ரைன் போரிலிருந்து விலகி இருக்கவே அதிகம் விரும்புபவையாக காணப்படுகின்றன. அதேபோன்று ரஷ்யாவும் உக்ரைனை கடந்து தனது போரை நடாத்தாது என்றும் அதன் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது தெளிவாக தெரிகிறது. எனவே போரை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் நேட்டோ நாடுகள் உக்ரைன் ஆட்சியாளர்கள் குறிப்பிடுவது போல் ரஷ்யாவிற்கு எதிரான உரையாடல்களையும் பேச்சுக்களையும் முதன்மைப்படுத்திய நேட்டோ நாடுகள் இறுதியில் உக்ரைனை கைவிட்டு சென்றமை அதிகார சமநிலை ரீதியில் நேட்டோவின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன. கடந்த பல ஆண்டுகளாக உக்ரைனுக்கும் நேட்டோவுக்குமான உரையாடல்களை நிராகரித்து வந்த புடின் நேட்டோவின் அணுகுமுறையை உரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் வழங்கியது. அத்தகைய அணுகுமுறையின் இறுதி தெரிவான போர் தவிர்க்க முடியாதது என்பதும் புடினது உரைகளும் இராஜதந்திர அணுகுமுறைகளும் வெளிப்படுத்துகிறது.  

இரண்டாவது, உக்ரைன் மீதான போர் ரஷ்யாவுக்கு ஒரு முழமையான வெற்றியை கொடுக்குமாயின் யுரேசியாவிலும் ஐரோப்பாவிற்குள்ளும் மற்றும் பிராந்தியங்களிலும் வலுவான அரசாக அடையாளப்படுத்துகிறது. உலகளாவிய இராணுவ பலத்தன்மையில் ரஷ்யா மேற்கு நாடுகளை கடந்து வலுவுள்ள நாடாக முன்னகர்வதோடு பழைய சோவியத் யூனியனுடைய கனவை நோக்கிய நகர்வை இலகுவில் சாத்தியப்படுத்தக்கூடியதாக அமையும். ஏற்கனவே யுரேசியாவிலிருந்து மத்திய ஆசியா ஊடாக மேற்காசியா வரையில் பலப்படுத்தி உள்ள ரஷ்யாவின் இராணுவ உத்திகள் மேலும் உறுதிப்படுத்தப்படும்.  

மூன்றாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலக அரசியல் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் அதன் விஷ்தரிப்புக்கு எதிரான நடைமுறையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அமெரிக்கா ஒரு இராணுவ ரீதியிலான நடவடிக்கையை உலகத்தில் மேற்கொள்ள முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அத்தகைய உருவாக்கம் ஆப்கானிஸ்தான் வெளியேற்றத்திலிருந்து உணரப்பட்ட போதும் அதற்கான நடைமுறை யதார்த்தம் உக்ரைனூடாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு மட்டுமன்றி சீன, -ரஷ்ய ஆதரவு கொண்ட அணிகளை பலப்படுத்தக்கூடியது. 

நான்காவது, ரஷ்ய,- உக்ரைன் மோதல் ரஷ்ய,-சீன உறவின் ஓர் அங்கமாகவே காணப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய சீன விஜயம் ஐரோப்பாவுடனான பொருளாதார உறவு பாதிப்படையும் என்ற எடுகோளுடனேயே சீனாவுடனான அணுகுமுறையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. உக்ரைனுடனான போரை ஐரோப்பாவும் அமெரிக்காவும் ரஷ்யா மீதும் புடின் மீதான பொருளாதார தடை மூலம் முடிவுக்கு கொண்டு வரலாமென முயலுகிறது. அத்தகைய முயற்சிக்கு முன்கூட்டியே பொருளாதார தடையை எதிர்பார்த்ததும் அதிலிருந்து விடுபடுவதற்கான உத்தியாக புடின் சீனாவை அணுகியதும் அவதானிக்கக்கூடிய விடயமாக உள்ளது. குறிப்பாக எரிவாயு தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடியை விட ரஷ்யா எதிர்கொள்ள உள்ள பொருளாதார நெருக்கடி மட்டுப்படுத்தப்பட்டவை என்பதையே அண்மைய நாட்கள் வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பாவுக்குள் எரிவாயுவும் பெற்றோலியமும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. 

ரஷ்யா, -உக்ரைன் போர் சீனா-, தைவான் தாக்குதல்களை இலகுபடுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பின்வாங்கல் சீனாவின் இராணுவரீதியிலான நகர்வை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. சீனா, தைவான் மீது போரை மேற்கொள்ளும் போது ரஷ்யா ஆதரவளிக்குமென்பது மாறான கருத்துக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.  

எனவே, ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் இராணுவ பலக் கோட்பாட்டிலும் அதிகார சமநிலையிலும் ரஷ்யாவை முதன்மைப்படுத்தி உள்ளது. அதுமட்டுமன்றி உலக அரசியலில் பிராந்தியத்தை கடந்து ரஷ்சியாவின் எழுச்சி ரஷ்ய-, சீன அணியை அதன் ஆதரவு நாடுகளை பலமான நிலைக்குள் நகர்த்தக்கூடியதாக அமைந்துள்ளது. இந்தியாவின் நடுநிலைமை போக்கு கீழைத்தேச நாடுகளின் வலுவை மேலும் வலுப்படுத்தக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. 

பேராசிரியர்
கே.ரீ. கணேசலிங்கம்  

Comments