![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/06/a27.jpg?itok=2wDXGdkG)
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 10ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணு மின் நிலையம் மீது அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.
அணு மின் நிலையம் மீது குண்டுகள் வீழ்ந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துளளார். அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அணு உலை புதுப்பிக்கப்பட்டு இயங்கவில்லை என்றாலும், அதன் உள்ளே அணு எரிபொருள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.
உக்ரைன் நாட்டிற்கு 25சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது. அணுமின் நிலையத்தின் அருகே கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அணு உலைக்கருகில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைனின் அவசர சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த அணு உலைக்கருகில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆசியாவில் பங்குகளின் விலைகள் சரிவு
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைக்கருகில் தீ பரவியதையடுத்து, ஆசியாவில் பங்குகளின் விலைகள் சரிவடைந்துள்ளன. டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் பங்குகளின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நிக்கி பங்குச்சுட்டெண் 2.5வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ஹாங்காங்கின் Hang Seng பங்குச்சுட்டெண் 2.6வீதத்தால் சரிவை சந்தித்துள்ளது.
ஆசியாவில் வர்த்தகத்தின் போது எண்ணெய் விலைகள் அதிகரித்திருந்தன.
மரியுபோல் தற்போதும் உக்ரைனின் கட்டுப்பாட்டில்
உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகராகிய மரியுபோல் தற்போதும் உக்ரைனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த நகரை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்துள்ளதாகவும் அங்கு தீவிர மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் புலனாய்வு அறிக்கையொன்றில் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதல்களில் சிவிலியன்களின் உட்கட்டமைப்புகள் இலக்காகுவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
தாக்குதலில் 47பேர் பலி
உக்ரைனின் சேர்னிஹிவ் நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள குறித்த நகர் மீது வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடுமையான ஷெல் வீச்சின் காரணமாக மீட்புப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக உள்ளூர் அவசர சேவைகள் நிலையம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிராந்தியத்தில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 148பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் வட பகுதியிலுள்ள சேர்னிஹிவ் நகரம் ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகாக அமைந்துள்ளது இங்கு மூன்று இலட்சம் பேர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தற்காலிக உடன்பாடு
போர் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தியுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய தூதுக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகள் முற்றிலும் தெளிவாக உள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக பரஸ்பர புரிதல் பேச்சுவார்த்தையின்போது காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவை உருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களை கடைப்பிடிப்பது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும், எனினும் அவற்றில் சில ரஷ்ய மற்றும் உக்ரைன் பாராளுமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்ய தூதுக்குழு உறுப்பினரும் அந்நாட்டின் மூத்த பாராளுமன்ற உறுப்பினருமான லியோனிட் ஸ்லட்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தம்: உலக வங்கி அதிரடி
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன. இந்த நிலையில், ரஷ்யாவிலும் அதன் கூட்டாளியான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தியுள்ளது.
கனகசூரியர்