ரஷ்ய -உக்ரைன் போர் எல்லையில்லாத திரிபுகளை உருவாக்கி பிரசார வெளியில் ஏற்படுத்தி வருகிறது. முற்றிலும் முரணானவற்றை உரையாடுவதை விடுத்து உண்மைக்கும் அறிவிற்கும் முரணான பொய்களை உரைத்து வருகிறது. இதனை ஊடகப்போர் என்று கடந்து செல்ல முடியாது. மாறாக போலியான விம்பத்தை உருவாக்கும் உரையாடலாகவே தெரிகிறது. உலகம் அணுவாயுதப் போருக்கு போகுமாகவிருந்தால் அதன் விளைவுகள் எதுவென்பதும் அத்தகைய சக்திகளுக்கு நன்கு தெரிந்த விடயமே. ரஷ்யா அணுவாயுதத்தை பிரயோகிக்குமாக இருந்தால் அணுவாயுதத்தை உடைய நாடுகளும் அதனை பிரயோகிக்க ஆரம்பிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வகைத் தாக்குதல் உலகத்தை முழுமையாக அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும். இக்கட்டுரையும் உக்ரைனில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தரப்போகும் எச்சரிக்கைகளை தேடுவதாக உள்ளது.
முதலாவது, உக்ரைனிலுள்ள ஜபோரிஜ்ஜிஹ (Zapornzszhia) அணுஉலை மீது ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவை கோரியுள்ளார். அது பற்றிய தகவல்களை அதிகம் வெளியிட்ட உக்ரைன் வெளியுறவு அமைச்சு, செர்ணோபில் அணுஉலையை விட பத்து மடங்கு அழிவை ஏற்படுத்தும் எனவும் தற்போது ரஷ்ய ஏவுகணைகள் அணு உலை அமைந்துள்ள பகுதியை தொடர்ச்சியாக தாக்குவதாகவும் சில பகுதிகள் தீப்பிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரம் மேற்குலக ஊடகங்களுக்கு புறம்பாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும்போது அத்தகைய அணு உலையை அண்மித்துள்ள ரஷ்யப் படைகள் துப்பாக்கியால் சுடுவதாகவும் எச்சரிக்கை எழுப்பப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. எதுவானாலும் அணுவாயுதம் தொடர்பில் ரஷ்யாவும் உக்ரையினும் அதிக ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அத்தகைய நகர்வு தமது மக்களையே அழிப்பதாகவும் அணுவாயுதத் தாக்குதல் நிகழுமாயின் அது ரஷ்யர்களையும் உக்ரைனியர்களையும் முதலில் அழிப்பதாகவே அமையும். செர்ணோபில் அணுக்கசிவானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை முன்னாள் சோவியத் யூனியன் தேசியங்கள் அனுபவித்துள்ளன என்பது நினைவுகோரத் தக்கது. அதே நேரம் ரஷ்யாவுடன் இன, மத மற்றும் மொழி தொடர்புகளையும் தரை மற்றும் எல்லைத் தொடர்புகளை அதிகம் கொண்டுள்ள உக்ரைனியர்கள் மீது அணுவாயுதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டால் அதன் விளைவு ரஷ்யர்களுக்குமானதே. அத்தகைய நகர்வை ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்வதென்பது இறுதியிலும் இறுதியான தெரிவாகவே அமையும். அத்தகைய தெரிவு கூட தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாகும். மேற்குலகம்-ரஷ்யா அணுவாயுதத்தை பிரயோகிக்கப் போவதாக குறிப்பிடுவதன் மூலம் போரில் நேட்டோவை ஈடுபடுத்த முனைகிறது. அது மட்டுமன்றி அப்பிராந்தியத்திற்குள் நுழையும் வாய்ப்பினை அமெரிக்காவும் நேட்டோவும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளன. அதனாலேயே இப்போரை உலக அபிப்பிராயத்திற்குள்ளால் நகர்த்த திட்டமிடுகின்றன. இவ்வாறு பல திட்டமிடல்களை நேட்டோ வெளிப்படுத்தி வருகிறது.
ஆனால் மேற்குலகத்தின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு தெரிவித்த கருத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் பிரான்ஸ் மக்களுக்கு ஆற்றிய உரையில் ரஷ்ய- உக்ரைன் போர் அதிக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது. அதன் சுமையை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற சாரப்பட தெரிவித்துள்ளார். அதாவது போரில் நேரடியாக ஈடுபடாத பிரான்ஸ், பொருளாதார நெருக்கடியை அதிகம் எதிர்பார்ப்பதென்பது ரஷ்யாவுடனான பொருளாதார உறவையே கோடிட்டுக் காட்டுகிறது. பொதுவாகவே ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்கும் அதிக பொருளாதார உறவு உள்ளது என்பதுடன் ரஷ்யா மட்டுமல்ல ஐரோப்பாவும் அத்தகைய நெருக்கடியை போரால் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என்பதையே பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் கருத்து வெளிப்படுத்துகிறது. ஐரோப்பாவை அமெரிக்கா தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முனைவதுடன் புதிய உலகத்திலும் பழைய மரபுகளையே ஐரோப்பா தொடர்கிறதையும் காணமுடிகிறது. அமெரிக்காவின் நலன்களுக்குள் அகப்பட்டுள்ள ஐரோப்பா தவிர்க்க முடியாது ரஷ்யாவுடன் முரண்பட்டுக் கொள்வதுடன் பொருளாதார ரீதியில் அதிக நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகின்றது. இதனால் ஐரோப்பிய அரசியல் பனிப்போர்க் காலத்திற்குள்ளேயே மையப்படுத்தியுள்ளது. அதிலிருந்து அது வெளிவர முடியாத சூழலை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.
இரண்டாவது, உக்ரைன் -ரஷ்யப் போர் உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்ந்த வாக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக 35நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விட்டாலும் எதிராக 141நாடுகள் வாக்களித்திருந்தமை கவனத்திற்குரியதாகும். அதில் இந்தியாவின் நிலைப்பாடு மீதே மேற்குலகம் அதிக குழப்பத்தை ஏற்படுத்த விளைகிறது. அதாவது இந்தியாவுக்கு எதிராக பொருளாதார நெருக்கடியைக் கூட ஏற்படுத்த அமெரிக்கா முனையலாம் என மேற்கு ஊடகங்கள் கதையாடுகின்றன. மேற்குலகத்தின் பிரதான சந்தையே இந்தியாவாக இருக்கும் வரை அத்தகைய நடவடிக்கை முழுமையாக மேற்குலகத்தையே பாதிப்புக்குள் தள்ளக்கூடியதாக அமையும் என்ற விமர்சனம் நியாயமானதே. எவ்வாறு ரஷ்யாவால் ஐரோப்பாவுக்கு நெருக்கடியோ அவ்வாறாகவே இந்தியா மீதான நடவடிக்கைகள் அமைய வாய்ப்புள்ளது. இந்தியா அணுவாயுதத்தை பரிசோதித்த போதும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையையே முன்னெடுத்திருந்தது. பின்னர் அமெரிக்காவின் ஆட்சியாளர்களே அதனை விலக்கிக் கொள்ள முன்வந்தனர். தற்போது அமெரிக்காவுடனும் மேற்குடனும் அதிகமான நெருக்கத்தைக் கொண்டுள்ள இந்தியா பொருளாதார விடயங்களில் மட்டுமல்ல இராணுவ அரசியல் நெருக்கத்தைக் கொண்டுள்ளன. அதனால் அமெரிக்காவோ அல்லது மேற்குலகமோ அவ்வகை உத்திகளை வகுக்குமாயின் அதன் விளைவுகள் மேற்குலகத்திற்கே ஆபத்தாக அமையும்.
மூன்றாவது, சீனா ரஷ்யா மீது எத்தகைய பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை சீனா அறிவித்துள்ளது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவினை வெறுமையாக பார்க்காது அது இரு நாட்டினதும் நலன்சார் உறவாகவே உள்ளது என்பதை புரிதல் அவசியமானது. குறிப்பாக மேற்குலகத்தை எதிர்க்கும் நிலையில் இரு நாடுகளும் ஒன்றானவையே உக்ரைன் போன்று சீனாவுக்கும் தைவான் எனும் விவகாரம் முதன்மையானதாக மேற்குலகத்துடன் உள்ளதென்பதை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் ரஷ்யாவுடனும் சீனா முரண்பட வேண்டிய நிலை உண்டு என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதைய சூழலை எதிர்கொள்ள சீனா முன்கூட்டியே கவனத்தில் கொள்கிறது. ஆகவே பரஸ்பரம் இரு தேசத்தினது நலன்கள் ஒரே இடத்தில் முதல் எதிரியான மேற்குலகத்தை எதிர்கொள்வதென்ற விடயத்தில் ஒன்றுசேர்ந்துள்ளன. இப்போர் அதிக மாற்றங்களை சீனாவுக்கு ஏற்படுத்தக் கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. அதில் பொருளாதாரமும் ஒன்றாகவுள்ளது. சீனாவின் பொருளாதார நெருக்கம் ரஷ்யாவுடனும் ரஷ்ய நட்பு நாடுகளுடனும் அதிகரிக்க வாய்ப்பினை உருவாக்கக் கூடியதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சீனாவுக்கு இராணுவ அரசியல் இலாபங்களையும் ரஷ்யாவின் நடவடிக்கை ஏற்படுத்தவுள்ளது. இது இந்தியாவுக்கும் சில இலாபங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்த முனையும். குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து வெளியேற முனையும் பாலுஸ்தான் விடயத்தை இந்தியா ரஷ்யப் பாணியினால் நகர்த்த வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
எனவே ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா படிப்படியாக முன்னேறுகிறது என்பதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. ஊடகப் போர் வெளிப்படுத்தியது போல் அல்லாது ரஷ்யா நிதானமாகவும் அதிக அழிவுகளை தவிர்த்தும் போரை நிகழ்த்தி வருகிறது. ஆனால் இத்தகைய போக்கு அதிக நாள் நீடிக்க வாய்ப்பு குறைவானது. நிலைமை ஆபத்தை எட்டுமாயின் ரஷ்யாவும் உக்ரைனிய மக்களை இலக்கு வைப்பதில் பின்னிற்காது. அதேநேரம் ரஷ்யா உக்ரைன் நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றதைக் காணமுடிகிறது. இந்த போரில் சீனாவும் இந்தியாவும் எடுத்திருக்கும் முடிவுகளே ரஷ்யாவுக்கு பலமானதாக மாறியுள்ளதுடன் மேற்குலகம் அதிகம் நெருக்கடிக்குள்ளாகும் தருணமும் அதுவாகவே உள்ளது. எனவே ரஷ்யா போாக்களத்தில் தீர்மானங்களை எடுக்க சீனாவும் இந்தியாவும் போர்க் களத்திற்கு வெளியே தீர்மானங்களை நகர்துகின்றன. போர் தொடங்கி இரண்டாவது வாரம் ஏறக்குறைய உக்ரைன் விழும் என்ற கணிப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. அவ்வாறே இரண்டாம் கட்ட பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளது. அப்படியாயின் ஏதாவது ஒரு பக்கத்தின் வெற்றி உறுதியாவதையே காட்டுகிறது. அது ரஷ்யாவாகவே உள்ளது. உக்ரைன் விடயம் எதிர்கால உலக ஒழுங்குகளிலும் புவிசார் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படத்தக் கூடியதாகவே அமையவுள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்