அரசாங்க மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் அனைத்து பாடசாலைகளும் நாளை 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30மணி முதல் பிற்பகல் 1:30மணி வரை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து அசௌகரியங்கள் நிலவுமானால் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரைகளை வழங்கியுள்ளது.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுவதுடன் பாடசாலைகளில் நடத்தப்படும் உற்சவங்களை தொடர்ந்தும் மட்டுப்படுத்துமாறும் கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து அசௌகரிய நிலைமை காரணமாக பாடசாலை தினங்கள் குறைக்கப்பட்டு பின்னர் வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அந்த தீர்மானம் நாளை 15 ஆம் திகதி முதல் மாற்றப்பட்டு வாரத்தின் ஐந்து நாட்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்