இறைவேதம் அல்குர்ஆனினதும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களினதும் போதனைகள் சகல காலங்களுக்கும் பொருத்தமானவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன்னபி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மீலாத் தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உலக முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களை குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதுமே நினைவு கூர்ந்து, அன்னாரை இம்மை,மறுமை ஈருலக ஈடேற்றத்திற்கும் வழிகாட்டியவராக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பின்பற்றியொழுகுகிறார்கள். ஓரிறைக் கொள்கையான ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக பொதுவாக தங்களது 63ஆண்டுகால வாழ்க்கையையும் குறிப்பாக நபித்துவத்திற்குப் பிந்திய 23ஆண்டுகால வாழ்க்கையையும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) முழுமையாக அல்லாஹ்விற்காக அர்ப்பணித்திருந்தார்கள். உள்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை நபி பெருமானாரைப் பின்பற்றி இஸ்லாத்தின் வெளிச்சத்தில் காண்பதற்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இந் நாளில் உறுதி பூணுவோமாக.