மழையுடனான காலநிலை தொடரும்; 5,212 குடும்பங்களை சேர்ந்த சுமார் 22,000 பேர் பாதிப்பு | தினகரன் வாரமஞ்சரி

மழையுடனான காலநிலை தொடரும்; 5,212 குடும்பங்களை சேர்ந்த சுமார் 22,000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 22,000பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  நாட்டில் பதினொரு மாவட்டங்களில் 5,212குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 22,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடும் மழை,வெள்ளம், மண் சரிவு, மின்னல் தாக்கம் ஆகியவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  

அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட – மேல் மாகாணங்களில் 150மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

இதனை தவிர இங்கிரிய, ஹல்வத்துர, அரகாவில, ஹெகொட, தெய்வேந்திரமுனை, நுவரெலியா- களுகல மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 06மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக 48மணி நேரத்திற்குள் ஆற்றுப் பள்ளத்தாக்கு தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படலாம்.  

களனி ஆறு - தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, வத்தளை.    களு கங்கை பள்ளத்தாக்கு - பாலிந்த நுவர, புலத்சிங்கள. அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகள் - திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை பகுதிகளில் இந்த அபாய நிலை இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

எனவே இது தொடர்பில் இப் பிரதேசங்களில் வசிப்பவர்களும், அந்த வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

மேலும், தற்போது நிலவும் அதிக மழையுடனான சூழ்நிலை காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.   தீவை அண்மித்த பகுதிகளில் குறைந்த அளவிலான வளிமண்டல குழப்பம் இன்னும் நீடிக்கிறது.  

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 31பிரதேச செயலகங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 03ஆம் நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, தொடங்கொட, மத்துகம, மில்லனிய, பண்டாரகம மற்றும் ஹொரண பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவவுக்கும் 02ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக மற்றும் பாதுக்க, காலி மாவட்டத்தில் பத்தேகம, களுத்துறை மாவட்டத்தில் மதுராவல, பேருவளை, பாணந்துறை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களுக்கு நிலை 01 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments