உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நாட்டின் கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள் இலக்கான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதில், திருச்சபைகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றி இலங்கை சீர்திருத்த திருச்சபையின் தலைமை போதகர் அருட்திரு சேர்லி பேபர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்..
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சபைகளின் போதகர்களையும், தலைமை போதகர்களையும் சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்தும் தேசிய கிறிஸ்தவ மன்றத்தினூடாக பேசியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எண்ணியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு வாழ்க்ைகக்கு திரும்பவும், காயப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும் பிரார்த்திக்கிறோம். இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உலகமே பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் இலங்கையிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முப்பது வருடங்கள் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதிலிருந்து மீண்டு பத்து வருடங்களுக்குப் பின் யாருமே எதிர்பார்க்காத நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதுமாதிரியான மிலேச்சத்தனமான செயல் இங்குமட்டுமல்ல உலகெங்கும் நடைபெற கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.
* தாக்குதலுக்கு பின்னர் சகல ஆலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்காலத்தில் ஆராதனையை முன்னெடுத்து செல்ல முடியுமா?
முதலாவது அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் நன்றிகூற வேண்டும். இப்படியான குழப்பம் நிறைந்த நிலையில் எமக்கு பாதுகாப்பு நடவடிக்ைககளுக்கு உதவுகின்றனர். ஆனால் பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதனையை முன்னெடுப்பது கடினமான விடயம். ஆராதனைக்கும் இது தடையாகவே இருக்கும். இது விசுவாசிக்கும் ஒரு பிரச்சினையான விடயமாகலாம். விசுவாசிகளை சோதனையிடுவதால் அவர்கள் ஒரு மனப்பட்டு ஆராதனையை முன்னெடுப்பது கடினமானது. கூடி ய விரைவில் இவ்வாறான நிலை நீங்கி, சகலரும் சுதந்திரமாக செயற்படவும், தேவ ஆராதனையில் கலந்து கொள்ளவுமான சூழ்நிலை உருவாக வேண்டும். இது எமது விசுவாசம், நம்பிக்ைக சோதனைக்குட்படுத்தப்படும் காலமாகும்.
* இந்த பயங்கரவாத எதிர்காலத்தில் தொடரும் என்று நினைக்கிறீர்களா?
அது எதிர்கூற முடியாதது. இத்தாக்குதலில் கிறிஸ்தவ ஆலயங்கள், உல்லாச பிரயாணிகளின் ஹோட்டல்கள் இலக்கு வைப்பட்டது ஏன்? எதிர்காலத்தில் அவர்களிடம் எவ்வாறான திட்டங்கள் உள்ளன என்பது தெளிவில்லை. இலங்கை அரசாங்கமும் உளவுத்துறையும் இது குறித்து விசாரணைகளையும் தடுப்பு நடவடிக்ைககளையும் முன்னெடுத்து வருகின்றன. இதன் பின்னணியிலுள்ள சகல தகவல்களும் கிடைக்கப் பெறும். இதனூடாக சுமுக நிலை உருவாகும் என எண்ணுகிறேன்.
* திருச்சபைகள் தாக்கப்பட்ட பின்னர், கார்தினால் உட்பட சகல திருச்சபை போதகர்களும் வன்முறை ஏற்படாவண்ணம், சூத்திரதாரிகளை மன்னிக்குமாறு கோரினர். சமூக நிலையை உருவாக்கினர். ஆனாலும் அதன் பின்னர் சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை எப்படி பார்க்கின்றீர்கள்?
வன்முறைகளையும் சிறு குழுவினரே முன்னெடுத்தனர். இதற்காக முழு முஸ்லிம் சமுதாயமும் பொறுப்புக் கூற வேண்டியதில்லை. சகல மதத்தினர், இனத்தினர் மத்தியிலும் அடிப்படைவாத குழுக்கள் இருக்கலாம். இச்சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அப்பாவிகளை கொல்லுதல்,சொத்துக்களை சூறையாடுதல், தாக்குல் நடத்துதல் போன்ற பழிவாங்கல் நடவடிக்ைககள் ஏற்புடையவையல்ல.
"உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்", உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்கள் நித்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்புறத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" என்றார் இயேசு கிறிஸ்து. உலகத்தில் தீயசெயற்படுகள் இடம்பெறுகின்றன. தீயதை தீயதால் வெல்ல முடியாது. நன்மையினால் வெல்லலாம். இந்த சூழ்நிலையில் பயத்தோடு வாழ்பவர்களை தேற்றுவது, பாதுகாப்பது எமது பணியாகும். இதுவே தேவனுடைய அன்பை உலகத்திற்கு காட்டும் சந்தர்ப்பமாகும்.
இந்த தாக்குதலுக்கு பின்னர் இலங்கையிலுள்ள சகல கிறிஸ்தவ திருச்சபைகளும், கிளைச்சபைகளும் ஒன்றிணைந்துள்ளன. பௌத்த துறவிகள், முஸ்லிம் மக்கள், இந்து குருமார் கூட கிறிஸ்தவ ஆலயங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது நன்மைபயக்கும். இது சிறந்த முன்மாதிரியாகும். ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இது நல்ல தருணமாகும்.
மனிதனுடைய பலவீனங்களினாலேயே தீயகுணங்கள் உருவாகுகின்றன. தீயவர்களையும் நல்லவர்களாக மாற்றுவதற்கு இறைவனாலேயே முடியும். அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமையாகும். நாட்டில் அமைதியில்லாவிட்டால் அபிவிருத்திகள் தடைப்பட்டு விடும். அதேபோல் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படலாம். இதனால் பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினைகளை உருவாக்கலாம். நாளாந்தம் தொழில் செய்து சம்பாதிக்கும் கூலி தொழிலாளர்கள்தான் அதிகளவில் கஷ்டப்படுகின்றனர். உல்லாசபயணத்துறை துறை வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை முழுவதும் வருவாய் முழுமையாக வீழ்ச்சிக்கண்டுள்ளது.
83 ஜூலை மாதிரியான வன்செயல் திரும்ப ஏற்படாவண்ணம் பாதுகாத்து, முடிந்தளவு எல்லோரிடமிருந்து பயம், சந்தேகம், தீயச்செயல்களை போக்கி, சுமுகமாக வாழ்க்ைகயை உருவாக்க வேண்டும்.
* ஒரு குறித்த சமூகத்தின் மீதான எமது பயத்தையும் சந்தேகத்தையும் நீக்குவது எவ்வாறு?
இப்படியான மிலேச்சத்தனமான செயல்கள் இடம்பெறும் போது, மக்களிடம் பயமும், சந்தேகமும் உருவாகும். இதனை இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் செயற்பாடாகும். மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அரசாங்கம் மக்களிடையே உள்ள சந்தேகத்தை தீர்க்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும். அரசாங்கமும், பாதுகாப்புத் துறையினரும் விரைவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளை இல்லாதொழித்து , மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அப்போது மக்கள் சுதந்திரத்துடன் வாழக் கூடிய நிலை உருவாகும். சந்தேகமும் பயமும் மறைந்துவிடும்.
* நாட்டில் ஓரளவுக்ேகனும் கட்டியெழுப்பப்பட்ட நல்லிணக்கம் வீழ்ச்சிகண்டுள்ளது. இதனை எப்படி மறுபடி கட்டியெழுப்புவது?
நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இன்னும் காலம் இருக்கிறது. மதத்தலைவர்களின் மத்தியில் ஐக்கியம் குறித்த சிந்தனை இருப்பது நல்லிணக்கத்தை குறித்திருக்கிறது. நல்லிணக்கம் வீழ்ச்சி காணவில்லை. அதில் சிறிது பழுது ஏற்பட்டுள்ளது.முன்புபோல் ஊர் மட்டத்திலும், கிராம மட்டத்திலும் சிவில் குழுவினரை அமைத்து அதனூடாக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். பொலிஸாருக்கும் சிவில் சமூகத்தினருக்கும்இடையில் நல்லுறவை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் என்ற ரீதியில் நாங்களும் இதற்கு பங்களிப்புச் செய்யலாம். முன்பின் தெரியாத ஒருவர் கிராமத்திற்கு வருவாரானால் அவர் குறித்து சந்தேகங்கள் இருந்தால் அவரை பரிசோதிக்கலாம். இதற்காக நாம் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. விசாரணைகளை பொலிஸாரே மேற்கொள்ள வேண்டும். இதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். மதங்களுக்கிடையிலேயே இனங்களுக்கிடையிலேயே எந்த ஒரு பிரச்சினையும் உருவாக கூடாதென்று நான் பிரார்த்திக்கிறேன்.
அப்படி பிரச்சினை உருவானால் எரியும் நெருப்பில் நாம் வைக்ேகாலை போடுவது போலாகிவிடும். இப்படியான செயல்கள் உருவானால் நாடு இன்னும் ஐம்பது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்றுவிடும். நாட்டின் அபிவிருத்திகள் பின்னடைவை காணும். இரண்டாம் யுத்தத்திற்குப் பின்னர் சாம்பலாகி போன நாடுகள், அந்த நாட்டு மக்களின் ஐக்கியம், நல்லிணக்கம் ஆகியவற்றினால் உலகின் முன்னணி நாடுகளாக மாற்றமடைந்துள்ளது.
எமது நாடும் அந்த இடத்திற்கு வரமுடியும். எமது நாட்டில் சகல வளங்களும் நிறைவாக உள்ளன. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு பெறுமதியானதாகும்.
நாட்டின் ஐக்கியம் நல்லிணக்கத்தை உருவாக்குவது எமது ஒவ்வொருவரின் பணியாகும். அரசியல்வாதிகள் மதத்தலைவர்களின் பணியென்றில்லாமல் எல்லோரதும் பணியாகும்.
எமது நாட்டில் பல இனத்தவர், பல மதத்தவர் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டிற்கு தேவையான ஆசீர்வாதத்தினை இறைவன் வழங்குவாராக.
போல் வில்சன்