உலக பொதுமறையான அல் குர்ஆன் லஹ்பூல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு) பதிவேட்டிலிருந்து முதலாம் வானத்தின் பைத்துல் இஸ்ஸாவுக்கு இறக்கி அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் இறுதிப் பத்திலுள்ள ஒற்றைப்படையான ஒரு நாளில் உள்ளது. அதன் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா மனிதன் மீது அளவுக்கு அதிகமான அன்பும் கருணையும் கொண்டவன் மாத்திரமல்லாமல் அவனது இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சத்திலும், விமோசனத்திலும் அதிக அக்கரை கொண்டவனும் ஆவான். அதற்கு அவன் வகுத்தளித்திருக்கும் இறைவழிகாட்டலின் அடிப்படை மூலாதாரமாக விளங்கும் அல்குர்ஆனும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான ஆதாரங்களாக உள்ளன. தான் படைத்து பரிபாலிக்கின்ற மனிதனின் ஈருலக வாழ்வின் வெற்றியும் விமோசனமுமே இவ்விறைவழிகாட்டலின் ஒரே இலக்கும் நோக்கமும் ஆகும்.
இந்த இறைவழிகாட்டலின் அடிப்படையான அல் குர்ஆனை இற்றைக்கு 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் மக்காவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை உலகிற்கான தன் இறுதி இறைத்தூதராக தேர்டுந்தெடுத்து அவர் ஊடாக காலசூழ்நிலைக்கு ஏற்ப அவன் அருளினான். இது கட்டம் கட்டமாக அருளப்பட்டு 23 வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தப்பட்டது.
உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் விமோசனமும், ஈடேற்றமும் தான் இந்த இறைவழிகாட்டலின் அடிப்படை. இது கால இட சூழ்நிலை வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லா காலசூழ்நிலைக்கும்் ஏற்றவகையில் உயிரோட்டத்துடன் திகழும் ஒரு வாழ்க்கை நெறி. இது தனியே அதனை ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு மாத்திரமுரியதல்ல. மாறாக உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்குமென அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே இறை வழிகாட்டலாக இது உள்ளது.
30 ஜுஸுவுகளை 114 அத்தியாயங்களாகவும், 6666 வசனங்களாகவும் கொண்டுள்ள இந்த அருள்மறை உலகிற்கு அருளப்பட்டு இற்றைக்கு 1400 வருடங்களாகி விட்டன. வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஊடாக ஒலி வடிவில் இவ்விறைவழிகாட்டலை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதலில் அருளி அல்லாஹ் எவ்வாறு முழுமைப்படுத்தினானோ அதே ஒழுங்கில் தான் இன்றும் உள்ளது. அதில் எதுவித மாறுதல் ஏற்படவுமில்லை. இனியும் ஏற்படப் போவதுமில்லை. உலகம் இருக்கும் வரையும் இதே அமைப்பில் தான் இவ்வருள்மறை இருக்கும்.
கடந்த1400 வருட காலப்பகுதியில் உலகில் எத்தனையோ விதமான மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. எத்தனையோ பழக்கவழக்கங்களும் கலாசாரங்களும் மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் உள்ளாகியுள்ளன. சில நாகரிகங்களும் கலாசாரங்களும் அழிந்தே போய் விட்டன. சில மொழிகள் கூட இருந்த இடம்தெரியாது வழக்கொழிந்து விட்டன. ஆனால் அவ்வாறான தாக்கம் எதுவும் இவ்விறைவழிகாட்டலிலோ அதன் மொழியிலோ சொற்கள், வசனங்களிலோ அணுவளவும் ஏற்படவில்லை.
இவ்வாறு இவ்விறைவழிகாட்டலால் எவ்வாறு உயிரோட்டத்துடன் நிலைத்திருக்க முடிகின்றது என்ற கேள்வி அல்லாஹ்வின் ஆற்றலையும் சக்தியையும் அறிந்திராதவர்கள் மத்தியில் எழலாம்.
அதனால் தான் அல்லாஹ், நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உங்கள் மீது) இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம் (அல்குர்ஆன் 15:09) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
உண்மையில் இது மனிதன் தயாரித்த அல்லது வரைந்த ஒன்றாக இருந்திருந்தால் அதில் மாறுதல்களும் மாற்றங்களும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் எல்லா கால சூழ்நிலைகளையும் முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்ட படைப்பாளனான அல்லாஹ் வகுத்தளித்தது இது. அதனால் அதில் குறைகள் கிடையாது. புதிதாக அதில் எதுவொன்றையும் சேர்க்க வேண்டிய தேவையும் அதற்கில்லை. அது பூரணத்துவமானது. முழுமைத்துவம் பெற்றது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த கால மக்களுடன் உரையாடி அவர்களுக்கு நேர்வழிகாட்டலை வழங்கிய அதே இறைவழிகாட்டல் தான் இன்றைய நவீன அறிவியல் உலகிலும் நேர்வழிகாட்டலை வழங்குகின்றது. இதைவிடவும் அறிவு எழுச்சி பெற்ற யுகத்திலும் கூட இதே இறைவழிகாட்டல் தான் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டலை வழங்கும். அதாவது நபி (ஸல்) அவர்களது காலத்தை விடவும் இன்று உலகம் அறிவியல் ரீதியில் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களது கால மக்களுடன் அளவலாவி அவர்களுக்கு நேர்வழிகாட்டிய அதே குர்ஆன் தான் இன்றும் நேர்வழிகாட்டுகின்றது. நாளையும் அது தன் பணியைச் செய்யும்.
இது தொடர்பில் அல்குர்ஆன் விளக்கவுரையாளரான இமாம் முஹம்மத் முதவல்லி அஷ் ஷஃராவி (ரஹ்) அவர்கள், “அல் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் காணப்பட்ட அதே வார்த்தைகள் தான் இன்றும் உள்ளன. அவை இந்த 21 ஆம் நூற்றாண்டின் செய்திகளோடு கொஞ்சமும் முரண்படாமலும் பிசகாமலும் ஒத்துப்போவதைக் காணலாம். அதாவது குர்ஆன் இறங்கிய போது அக்கால மக்களின் அறிவுடன் இக்குர்ஆன் ஒத்துப்போனது. அதேபோன்று நவீன கண்டுபிடிப்புக்களும் அறிவியல் வெளிப்பாடுகளும் நிறைந்துள்ள இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் அது ஒத்துப்போகின்றது. வசனங்களும், வார்த்தைகளும் ஒன்றுதான். பொருட்களும் அதுவே. ஆனால் விளக்கம் தான் விரிவடைந்து வருகின்றது. இப்படியான அதிசயத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் வெளிப்படுத்தவே முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அது முற்றிலும் உண்மை. இந்த அற்புதத்தை மனிதன் சரியான முறையில் அணுகுவானாயின் அவன் நிச்சயம் பிரமித்துப்போவான். இவ்வாறான அற்புதத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலுமே ஆற்ற முடியாது என்பதை அவன் உறுதிபட ஏற்றுக்கொள்வான்.
நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சமூகம் இன்று போன்று சமூக, அறிவியல் ரீதியில் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இருந்தும் இக்குர்ஆன் அன்றைய மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற எல்லா மக்களுக்கும் ஏற்றவகையில் நடைமுறைச் சாத்தியமானதாகவே அமையப் பெற்றிருக்கின்றது.
அல்லாஹ்வின் குர்ஆனை மக்களுக்கு கொண்டு சேர்த்த நபி (ஸல்) அவர்கள் அதனை கற்றுக்கொடுக்கவும் தவறவில்லை. தன் செயற்பாடுகளையும் குர்ஆனிய அடிப்படையில் அன்னார் அமைத்துக் கொண்டார்கள். ஆனால் குர்ஆன் வசனங்களுக்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை. மக்களின் தேவைக்கு ஏற்ப குர்ஆனின் போதனைகளை எடுத்துக்கூறினார்கள். அதாவது குர்ஆனின் சட்டங்களை மக்கள் ஏற்று நடந்தால் நன்மைகள் கிடைக்கப்பெறும். அதன்படி செயற்படத்தவறினால் தண்டனை கிடைக்கப்பெறும். இது தான் இறை வணக்கத்தின் அடிப்படையாகவும் அமைந்திருந்தது.
ஆனால் குர்ஆனில் படைப்புக்களின் இரகசியங்கள், அறிவியல் உண்மைகள், படிப்பினை மிக்க வரலாற்று சம்பவங்கள் உள்ளிட்ட மனிதனின் வாழ்வுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களது உள்ளங்கள் மீது தாழிடப்பட்டு விட்டதா? (அல் குர்ஆன் 47:24)
(நபியே) நீங்கள் கூறுங்கள் மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப் போன்ற ஒரு குர்அனைக் கொண்டு வர முயற்சித்த போதிலும் இதைப் போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது (அல் குர்ஆன் 17:88).
அவ்வாறு தான் இல்லாவிட்டாலும் இந்த குர்ஆனிலுள்ளது போன்ற பத்து அத்தியாயங்களை கொண்டு வர முடியுமா (11:13) அல்லது ஒரு அத்தியாயத்தை கொண்டு வர முடியுமா (2:23) அல்லது ஒரு வசனத்தை கொண்டு வர முடியுமா (52:34) என்றும் குர்ஆன் கேள்வி எழுப்பி இருக்கின்றது.
அதேபோன்று வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே. அதனை நீங்கள் (உங்கள் கண்களால் காண்கின்றீர்கள். (13:02) அவன் தான் பூமியை விரித்து அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான் (13:03)
இவ்வாறு மனிதனின் சிந்தனைகளைத் தூண்டி, அறிவியல் எழுச்சிக்கு வித்திடக்கூடிய வசனங்களும் குர்ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன. இருந்தும் அவை தொடர்பில் அன்னார் விபரிக்கவில்லை. ஏனெனில் அன்றைய மக்களின் அறிவு, விடயங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் என்பன எந்த மட்டத்தில் காணப்பட்டதோ அந்த மட்டத்திற்கு ஏற்பவே அன்னாரால் விளக்கப்படுத்தப்பட்டது.
இக்குர்ஆன் உலக முடிவு நாள் வரையும் நீடித்து நிலைக்கக்கூடியது. அதனால் ஒவ்வொரு நவீனத்துவத்தினதும், நாகரிகத்தினதும் வெளிப்பாடுகளை எதிர்கொள்ளும் சக்தி அதற்குள்ளது.
என்றாலும் நபி (ஸல்) அவர்களின் பின்வந்த சமூகங்களை சேர்ந்த ஜாபிர் இப்னு ஹய்யான், இப்னு சீனா, அபுல் காசிம் நஃபிஸ் உள்ளிட்ட பலர் குர் ஆனின் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிவியல் எழுச்சிக்கும் நாகரிக முன்னேற்றத்திற்கும் வித்திட்டுள்ளார்கள். இது மறைக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு மிகுந்த நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய முழுமையான இறைவழிகாட்டலை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலுமே வகுத்தளிக்க முடியாது. அதன் மூலம் பயன்பெற வேண்டியது மனிதனைச் சார்ந்த விடயமாகும்.
மர்லின் மரிக்கார்