இறைமறை வழிநடந்து ஈடேற்றம் பெறுவோம்! | தினகரன் வாரமஞ்சரி

இறைமறை வழிநடந்து ஈடேற்றம் பெறுவோம்!

புனித ரமழான் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட அருள் நிறைந்த மாதமாகும். அம்மாதத்தில் நோன்பு விதியாக்கப்பட்டாலும், அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதினால் மேலும் சிறப்படைகின்றது. “நிச்சயமாக நாம் மகத்துவம் பொருந்திய ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அல்-குர்ஆனை இறக்கியருளினோம் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அல் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். மேலிருந்து இறக்கியருளப்பட்ட தெய்வீக வேதமே இதுவாகும். இது போன்றதொன்றை மனித இனமும், ஜின் இனமும் சேர்ந்து கொண்டு வர முயற்சித்தாலும் முடியவே முடியாது என அல்லாஹ்வே கூறுகின்றான். இது எப்பொழுது இறக்கியருளப்பட்டதோ அன்றிலிருந்து எந்ததொரு எழுத்தும் மாற்றமில்லாமல், யாருடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ‘நிச்சயமாக நாமே அல் குர்ஆனை இறக்கி வைத்தோம்; மேலும் அதனைப் பாதுகாப்பதும் நாமே என அல்லாஹ் கூறுகின்றான்.  

அல்லாஹ் எதற்காக அல்-குர்ஆனை இறக்கி வைத்தான்? மனிதன் எப்படி ஈருலகிலும் வெற்றி பெற்றவனாக வாழவேண்டுமோ அதற்கான முழுமையான வழிகாட்டுகின்றது. தனிமனித வாழ்வாக அல்லது குடும்பமாக அமைந்தாலும் பாரிய மாற்றங்களை இதன் மூலம் காணலாம்.  

இறுதி வேதம் அல் குர்ஆன் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) வாழ்க்க, மனித இனத்தின் வெற்றி இவ்விரண்டிலும் தங்கி நிற்கின்றது.  

அல்- குர்ஆனை நாம் இரு கோணங்களாகப் பார்க்கலாம்.  

ஒன்று, இதனை நாம் பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளையை புரிந்து சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இரண்டாவது அல்-குர்ஆனை அதன் முறைப்படி ஓதி கூடுதலான நன்மைகளைப் பெற்றுக் கொள்வது. ஆரம்ப வசனமே ‘ஓதுவீராக என்ற அர்த்தத்தைக் கொடுப்பதாக இருந்தால் எந்த அளவு அதனோடு (சூறதுல் அலக்-01) தொடர்பை ஏற்படுத்தவேண்டும். இது வெறுமனே இறக்கியருளப்படவில்லை. அது கூறும் விடயங்களை சிந்தித்து, ஆராய்ந்து, ஓதி, விளங்கி, வாழ முயற்சிக்க வேண்டும். எந்த வீட்டில் சூரதுல் பக்கரா ஓதப்படுகின்றதோ, ஷைத்தான் அந்த வீட்டை விட்டும் விரண்டோடுதாக நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) மனிதனின் கறைபடிந்த உள்ளங்களை கறை நீக்கி சுத்தம் செய்யும் ஒரே வேதம் அல்-குர்ஆனாகும். ‘இரும்பு துருப்பிடித்து கெட்டுவிடுவதைப் போன்று மனிதனின் உள்ளங்களும் அசுத்தமடைவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியபோது எவ்வாறு சுத்தமடையுமென ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அல்-குர்ஆனை ஓதுவதைக் கொண்டும், மௌத்தை அதிகமாக நினைப்பதைக் கொண்டும் தான் சுத்தமடைவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

நிச்சயமாக நாம் இதனை சிந்தித்து ஆராய்ந்து படிப்பினை பெறுவதற்காக மிகமிக இலேசாக்கி வைத்திருப்பதாகக் கூறுகின்றான். எமது வாழ்வு எப்பொழுது அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்வாக அமையப்பெறுமோ அப்பொழுது தான் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். எந்த சந்தேகமும் கிடையாது. வாழ்வதற்கு சிறந்ததொரு வழிகாட்டியைப் பெற்ற சமூகம் அதனை மறந்துவாழும் பொழுது வாழ்வு நெருக்கடியானதாக மாறுகின்றது. அது பற்றி இறைவன் குறிப்பிடும் பொழுது, எவனொருவன் நமது வசனங்களை புறக்கணிக்கின்றானோ அவனது வாழ்வு நெருக்கடியானதாக இருக்கும். மேலும் அவனை நாம் மறுமை நாளில் குருடனாக எழுப்புவோம். அப்படி எழுப்பப்பட்டவன் இறைவா! ஏன் என்னை குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேனே எனக் கூறும் பொழுது, எனது வசனங்கள் உன்னிடத்தில் வந்தபொழுது அதனை நீ மறந்து விட்டாய் எனவே, இன்றைய நாளில் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என அல்லாஹ் கூறுவதாக சூரா தாஹா மூலம் கூறுகின்றான். இருளிலிருந்து வெளிச்சம் வரை முஃமீன்களுக்கு குர்ஆன் வழிகாட்ட வல்லது.

எக்காலத்திற்கும் பொருத்தமானது

எப்படியான சந்தர்ப்பங்களில் அல்-குர்ஆனின் வசனங்கள் இறக்கியருளப்பட்டன, சில சந்தர்ப்பங்களில் இறங்கினாலும் எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே அமையப்பெறுகின்றன. இன்று அல்-குர்ஆனுக்கு எதிரான வாதங்கள் சர்வதேச மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சில வசனங்கள் சமகாலத்திற்கு பொருத்தமானதாக அமையவில்லை என குருட்டு வாதம் பேசுபவர்கள் ஏராளம். சிறந்த நோக்கத்தோடு அமையும் பொழுது, அதனை உற்றுநோக்கும் பொழுது சிறந்ததாகவே தென்படும். அதற்கு மாற்றமாகப் பார்க்கும் பொழுது தனது சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.  

தவறான புரிதல்  

அல்குர்ஆனை அதில் காணப்படும் ஒரு சில வசனங்களின் அர்த்தங்களை இன்று நம் நாட்டிலும் பலர் தவறாகப் புரிந்துள்ளனர். முழுமையான அதன் விளக்கங்களை எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறக்கியருளப்பட்டது என்பதை ஆழமாக விளங்காமல் விளக்கம் சொல்ல முற்படுகின்றனர். ஒன்று முதலில் நம்மில் அனேகமானவர்கள் அல்- குர்ஆனைப் படிக்கவும் இல்லை, விளங்கவும் இல்லை ஆராய்ந்து பார்க்கவும் இல்லை; அடுத்தவர்களுக்கு அது கூறும் விடயங்களை எடுத்துச் சொல்லவும் இல்லை. இது செவிடனுக்கு ஊமையன் வழிகாட்டுவதைப் போன்றறுதான். முழு மனித சமூகத்திற்கும் இறக்கியருளப்பட்ட வேதம். அல்லாஹ் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். சத்திய மார்க்கத்தில் பல வந்தம் கிடையாது.  

அல்குர்ஆனைப் பற்றி மண்ணறையிலும் கேள்வி கேட்கப்படும். மனிதன் சதா காலம் வாழ வந்தவனல்ல. சொற்பகாலம் வாழ்ந்து மரணித்ததும் ஆலமுல்பர்ஸக் எனும் கப்ருடைய வாழ்வில் நீண்டகாலம் வாழப்போகின்றான். இருளடைந்த தனிமையான துணைக்கு எவரும் வராத, பூச்சிகளும் தேள்களும், புழுக்களும் வாழும் அந்த இடத்தில் முதல்நாளில் முன்கர், நகீர் (அலை) இருவரும் வந்து பல கேள்விகளை கேட்பார்கள். எவரும் தப்பிக்க முடியாது. அதில் ஒன்றுதான் அல்-குர்ஆனைப் பற்றியதாகும்.  

இறைவிசுவாசிகளின் கப்ருடைய வாழ்க்கை மற்றும் அதற்கு மாற்றமானவர்களின் கப்ருடைய வாழ்வு பற்றி அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இதில் கூட படிப்பினை பெறவேண்டாமா?  

குர்ஆனுடையவர்களின் மறுவாழ்வு  

மறுமை நாளில் அல்-குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனின் தோழரே! ஓதுவீராக! என்று கூறப்படும். உலகத்தில் எப்படி அழகாக திருத்தமாக நிதானமாக ஓதினீரோ அவ்வாறே ஓதுவீராக நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சுவர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (திர்மிதி)  

மனித வாழ்வில் சகல விடயங்களும் வியாபாரமாக இருந்தாலும், குடும்பவாழ்வாக, எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் தீர்வை அல்-குர்ஆன் அழகாக முன்வைக்கின்றது. ரமழானில் இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனை சரியாக ஓதி, சரியாக விளங்கி அதன்பால் மக்களையும் அழைத்து அதன் வழி நடப்போம். அல்லஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக.

Comments