![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/14/60_12072019_SSK_CMY.jpg?itok=wTIGR6p0)
பெண்மை என்றால் மென்மை என்று மனிதன் தோன்றிய காலம் முதல் தோற்றுவிக்கப்பட்ட கருத்துக்கள் இன்றுவரை ஆழப்பதிந்துதான் இருக்கின்றன. பெண்களின் போராட்டங்களும் பொது உரிமைக்காக ஆண்களுக்கு இணையாக ஆயுதமேந்தி போரிட்டாலும் பெண்ணின் உழைப்பும் பெருமையும் போற்றப்படுவதில்லை.
30வருட உரிமை போராட்டத்தில் சகல ஆயுத குழுக்களிலும் பெண்கள் இருந்தனர். கடல்புலிகளாக, தற்கொலை குண்டுதாரிகளாக களத்தில் நின்று எதிரிகளுடன் நேருக்கு நேர் போரிட்டனர். போர் குணமும் மூர்க்க குணமும் கொண்டவர்களாக எம் பெண்கள் இருந்தனர். சமூகம் எதிர்பார்க்கும் அன்பு, கருணை, பாசம், தாய்மை போன்ற குணங்கள் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறு போராடி இருக்க முடியுமா என்று ஏன் நாம் சிந்திக்க தவறுகின்றோம்? ஏன் நம் இளம் தலைமுறையினருக்கு சொல்லி கொடுக்க மறுக்கின்றோம்?
சொர்ணக்கா என்ற வில்லி கதாபாத்திரம் பிரபலமானது. சினிமாவில் வில்லன் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம். ஆனால் வில்லனின் பெயரை யாரும் பெரிதாக ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. அப்படி ஞாபகம் இருந்தாலும் அசோகன், நம்பியார், மன்சூர் அலிகான் போன்றவர்களையே சொல்லலாம். அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்கள் ஞாபகப்படுத்தப்படுவதில்லை.
அதற்கு காரணம் உண்டு. பெண் என்றால் மென்மையாக, அன்பாக, பாசமாக இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புத்தான். மாறாக பெண்ணானவள் வீரமாக, வாயாடியாக இருந்தால் அவள் பெண்ணாகவே எடுத்துகொள்ளப்படமாட்டாள். முதலில் சொந்த வீட்டிலேயே அவள் ஒதுக்கப்படுவாள், பின் அவள் சார்ந்த சமூகம் அவளை வேற்று கிரகத்து வாசியை பார்ப்பதுபோல் பார்க்கும்.
உதாரணமாக, இந்த மன நிலையை சமீபத்தில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வீட்டில் உள்ள வனிதாவை பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளின் வழியாக அதற்கு வரும் பின்னூட்டத்தை பார்க்கும் போது கவலை தருகிறது. பெண் இப்படி இருப்பது தவறு என்ற பார்வையே அடிப்படை காரணமாக உள்ளது. ஆனால் அவளின் உண்மையான குணாதியங்கள் அறிந்துக்கொள்ளப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் அவளை ஒரு கொடூரமான வில்லியாக விமர்சிப்பவர்கள் எத்தனை பேர்? அவளுடைய வாழ்க்கையை நேரில் பார்த்தவர்கள் எத்தனை பேர்? அவளுடைய இன்ப துன்பங்கள் அவள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்னவென்று அறிந்தவர்கள் எத்தனை பேர்? சினிமா தகவல்களும் ஊடகங்களில் வரும் தகவல்களையும் செய்திகளையும் காணொளிகளையும் பார்த்துவிட்டு அதை வைத்து அவளை நியாயப்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள்.
தமிழ் சமூகத்தில் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலை இன்றும் காணப்படுகிறது. இது சமூகத்தில் முற்போக்கான மாற்றங்களை கொண்டுவராது.
இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு, துஷ்பிரயோகம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள், சீதனக்கொடுமை, தற்கொலை போன்றவை பெண்ணை நலிவடைந்தவளாக பார்க்கும் கண்ணோட்டமே காரணமாகிறது. பெண் எதிர்த்து நின்றால், கேள்வி கேட்டால் தைரியசாலியாக திடகாத்திரமானவளாக நீதிக்காக குரல்கொடுப்பவளாக காணப்பட்டால் அவள் பெண்ணாக கருதப்படுவதில்லை. மாறாக அவள் நடத்தை கெட்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
ஆணும் பெண்ணும் உடல் உறுப்புகளிலும் அமைப்பிலும் மாறுபட்டவர்கள். இந்த வித்தியாசம் எந்த இனமானாலும் ஒன்றுதான்.
5000வருடத்திற்கு முன் இருந்த பெண்ணின் உடல் அமைப்பும் இன்று இருக்கும் பெண்ணின் உடல் அமைப்பும் ஒன்றே. இதேபோல் தான் ஆண்களுக்கும்.
குணங்கள், மனப்பாங்கு போன்றவை உடல் மூலக்கூறு சார்ந்தது அல்ல. ஆண் குறி உள்ளவனுக்கு இந்த மாதிரி குணங்கள் இருக்கவேண்டும் என்றோ, யோனியும் மார்பகமும் உடையவர்கள் இந்த குணங்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம். மூர்க்க குணமோ, கருணை உள்ளம் கொண்ட குணமோ பாலுறுப்பையோ ஹோமோன் சுரப்புக்களையோ அடிப்படையாக கொண்டவையல்ல. அன்பு, பாசம், தாய்மை குணம் உள்ள ஆண்கள் எம்மத்தியில் பலர் உள்ளனர். ஆணிலும் கருணை உள்ளவர்கள் உண்டு.
ஆண் பெண் சமத்துவம் என்று வரும் போது முன்னுதாரணமாக இருக்க வேண்டியது தமிழ் சமூகம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆனாலும் அது நடக்கவில்லை.
சமத்துவம், பெண்ணுரிமை பேசி முன்னெடுத்த ஆயுத போராட்டங்கள் சமூக மாற்றத்தை கொண்டுவரவில்லை என்பதை பறைசாற்றி சொல்கிறது. சமூக மாற்றம் மக்கள் மனதில் ஏற்பட்டிருந்தால் தமிழ் பெண்கள் இன்று எம்மத்தியில் சமமாக நடத்தப்படிருப்பார்கள். இன்று எம்மத்தியில் ஏற்பட்டிருக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், மனமாற்றம் ஏற்படாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
நளினி ரட்ணராஜா