எண்ணம் மாற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

எண்ணம் மாற வேண்டும்

காலத்திற்கேற்ப பெரும்பாலான பெண்கள் சூழ்நிலையின் காரணமாக வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ளவோ, பணியிட மாற்றத்திற்கு விருப்பம் இல்லாமலோ வேறு ஏதாவது சந்தர்பங்களில்தான் இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். மதிப்பு கொடுக்காமல் இவர்களை நடத்துவதால் பெண்களுக்குள் ஒரு 'தாழ்வு மனப்பான்மை' உருவாகிறது.

"அடுத்தடுத்து என்ன வேலை என்று வீட்டில் இருக்கும் பெண்கள் யோசித்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சின்ன சின்ன வேலை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது"

பணிக்கு போகிறவர்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள், வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள் என்ற மனப்பான்மை இங்கு பரவலாக இருக்கிறது.

'ஹவுஸ் வைஃப்' என்ற வார்த்தை மாறி, 'ஹோம் மேக்கர்' என்ற வார்த்தை தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. வார்த்தை மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர, ஆண் வர்க்கம் இன்னும் மாறவில்லை.

"நீ வீட்டில சும்மாதான உட்காந்திருக்க, பேங்குக்கு போயிட்டு வந்துரு... சும்மாதான் இருக்க கரண்டு பில்ல கட்டிட்டு வந்துரு" என்ற வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை செய்வதில் பெண்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 'நீ வீட்டில் சும்மாதான் இருக்க' என்று கூறி இதை செய்ய சொல்லும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவேதான் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உதாரணமாக நம் வார்த்தை பிரயோகங்களை கவனிக்க வேண்டும். "குழந்தையிடம் அம்மா சும்மாதான் வீட்டுல இருப்பாங்க, அவங்ககிட்ட கேளு என்பதை விட, அம்மா வீட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது அவங்ககிட்ட கேளு" என்று கூற வேண்டும்.

பெண்கள் வீட்டில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஆண்கள் கவனிக்க வேண்டும். வேலைக்கு போகிறது, பணம் சம்பாதிக்கிறது மட்டும்தான் வெற்றி என்று நினைக்கக்கூடாது.

ஆணும், பெண்ணும் சமம் என்று வாய் வார்த்தையில்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். மாற்றம் என்ற ஒன்று இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. கொழும்பில் இருக்கும் பெண்களை மட்டும் பார்க்காதீர்கள். கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கும் சம அந்தஸ்து கிடைத்திருக்கிறதா என்பதை பாருங்கள்.

"என் தாயோ என் மனைவியோ வீட்டில் இருப்பதினால்தான் நான் நிம்மதியாக வெளியில் சென்று வேலை பார்க்க முடிகிறது என்ற எண்ணம் ஆண்களுக்கு வரவேண்டும்."

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பெருமை உண்டு. யார் என்ன வேலை செய்தாலும் அதனை மதிக்கக் கற்று கொள்ள வேண்டும். தனி மனிதனை மதிக்கக்கூடிய பக்குவம் வரவேண்டும்.

Comments