![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/11/q9.jpg?itok=5UDUm6xO)
தாய்க்கு மறுமணம் செய்வதற்கு முயற்சிக்கும் மகளின் சவால்களே
இளவயதில் கணவனை இழந்த தன்னுடைய தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கும் மகள் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்திப் பேச விளைகிறது வி. சபேசனின் “துணை”. இது ஜெர்மனியச் சூழலில் உருவாக்கப்பட்ட பதினெட்டு நிமிடக் குறும்படம். படத்தின் கதை இதுதான். தாயின் மறுமணத்தை விரும்புகிறாள் மகள். இதற்குத் தாயை அவள் வற்புறுத்துகிறாள். விருப்பமிருந்தாலும் சமூகம் என்ன சொல்லுமோ என்ற தயக்கம் தாயிடம். ஆனாலும் அதையெல்லாம் கடந்து நீ வரவேண்டும் என்று வலியுறுத்திச் சம்மதிக்க வைத்து விடுகிறாள் மகள். கூடவே தன்னுடைய காதலனின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோருகிறாள். இதை ஏற்றுக் கொள்ள முடியாதென்கிறான் காதலன். “திருமண வயதில் நீ இருக்கும்போது உன்னுடைய அம்மாவுக்குக் கல்யாணமா? இதை எங்களுடைய சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஆட்கள் என்ன சொல்லுவினம்?” என்று சமூகத்தை முன்னிறுத்தித் தன்னை நியாயப்படுத்த விளைகிறான் காதலன்.
ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்புகளையோ மாற்றங்களையோ செய்யாமல் மென்போக்கில் தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள் அந்தப் பெண். “எப்படியும் நீ இந்தத் திருமணத்துக்கு வருவாய் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு, பதிவாளர் அலுவலகத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வரவேயில்லை. ஆனால் திருமணம் நடந்தேறுகிறது.
மறுபக்கத்தில் தன்னுடைய காதலியின் இந்தத் தீர்மானத்தினால் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் சோர்வையும் கவனித்த அவனுடைய தாய் என்ன, ஏது என்று காரணம் கேட்கிறாள். “கல்யாண வயதில் பிள்ளையை வைத்துக்கொண்டு தாய் திருமணம் செய்வதென்றால் எப்படியிருக்கும்? இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுடைய சமூகம் இதை ஒருபோதும் மதிக்காது” என்ற தன்னுடைய குழப்பத்துக்கான காரணத்தைச் சொல்கிறான் மகன்.
“இதிலென்ன தவறிருக்கு? அவள் எடுத்த முடிவு சரியானதே. அதை நாங்கள் வரவேற்க வேணும். சமூகம் என்பது என்ன? அது சரியாகச் சிந்திக்கிறதா? அதில் நியாயமுண்டா?” என்று நாங்கள் பார்த்தே இதை விளங்கிக் கொள்ள வேண்டும்” என்று மகனுக்கு தெளிவூட்டி அவனை உற்சாகப்படுத்துகிறாள் அவனுடைய தாய். தாயினுடைய நேர்த்தூண்டலுக்குப் பிறகு இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் காட்சியோடு படம் முடிவுறுகிறது.
இந்தப்படம் பெண்களின் ஆளுமையையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதில் குவிந்திருக்கிறது. மறுமணம் செய்வதற்குத் தாயைத் தயார்ப்படுத்தும் மகள், அதை வரவேற்கும் மாமியார் அல்லது காதலனின் தாய் ஆகிய இரண்டு பாத்திரங்களும் (பெண்களும்) சமூகத்தின் தயக்கங்களைக் கடந்து புதிய நிலைகளையும் யதார்த்தத்தையும் தொடுகிறார்கள். மறுமணம் செய்யும் பெண்ணும் ஆரம்பத்தில் தயக்கத்தோடிருந்தாலும் பிறகு மெல்ல அதைக் கடந்து புதிய நிலையில் அடியெடுத்து வைக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய துணிச்சலான சிந்தனையே. இதில் மகனுடைய தாயார் ஒரு வாசகியாக இருக்கிறார் என்பது கூடுதல் அழுத்தமாகக் காட்டப்படுகிறார். அவருடைய கையில் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகமிருக்கிறது. பெரியாரை வாசிக்கின்றபோது சமூகத்தைப்பற்றிய, பண்பாட்டைப்பற்றிய, பெண் வாழ்வைப்பற்றிய பார்வை மேம்பட்டதாக இருக்கும் என்பதற்கு இந்தப் பெண் (மகனின் தாய்) எடுக்கின்ற முடிவு முக்கியமாகிறது. இந்த வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலையும் புரிந்து கொள்ளும் பண்பையும் முடிவெடுக்கும் திறனையும் சுட்டுகிறது. மேலும் ஆண் துணையிழந்த பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்வதும் சமூகம் என்ன சொல்லும் என்று தயங்குகின்ற மகனை விழிப்பூட்டித் துணிய வைப்பதும் பெரியாரின் வழிச் சிந்தனை என்றுணர்த்தப்படுகிறது. மூன்று நான்கு பிறேம்களில் - கோணங்களில் – பெண் ஏன் அடிமையானாள் காட்டப்படுவதை இப்படித்தானே புரிந்து கொள்ள வேண்டும்.
என்னதான் ஐரோப்பியச் சூழலில் இணைந்து வாழ்ந்தாலும் தமிழ் மனம் பண்பாட்டு ரீதியிலும் சிந்தனையிலும் தன்னை நெகிழ்த்தாமலும் முன்னகர விரும்பாமலும் இருளின் அடுக்குகளுக்குள்ளேயே மறைத்து வைக்க முனைகிறது. மறுமணம் பற்றி மட்டுமல்ல, சாதி, பிரதேசவாதம், பால் அசமத்துவம் எனப் பலவற்றிலும். சம்பிரதாயங்கள், சொத்து மற்றும் ஆண்நிலைச் சிந்தனை போன்றவற்றினால் மறுமணம் பற்றிய தயக்கங்கள் தமிழ்ச்சமூகத்தில் இன்னும் நீடிப்பதே இந்தச் சவால்களுக்குக் காரணம். ஆனால் நமது யதார்த்தம் வேறு தெரிவையும் வேறு நகர்வுகளையுமே கோரிநிற்கிறது. போரில் பாதிக்கப்பட்ட பெண்களை அதிகமாகக் கொண்ட சமூகத்தில் மறுமணம் என்பது பல நிலைகளிலும் அவசியமான ஒன்று. இதைப் புரிந்து கொண்டு செயற்படுவதற்குப் பலரும் முன்வருவது குறைவு. இந்த நிலையில் “துணை” குறும்படம் ஒரு தூண்டலாகவும் விழிப்புணர்வுக்கான உந்துதலாகவும் உள்ளது. இதற்கான விவாதங்களை உருவாக்கக் கூடியதாக உள்ளது.
முக்கியமாக இது பெண்களின் படம் என்றே தோன்றுகிறது. பெண் பாத்திரங்களின் அழுத்தம் தூக்கலாக உள்ளது. பாத்திரங்கள், நடிப்பு என்பவற்றிலும் பெண் சித்திரமே கூடுதலாக மனதில் பதிகிறது. சபேசனுக்கு இது முதற்படம். புதிய அனுபவம். இயக்குநருக்கு மட்டுமல்ல, நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும் இது முதல் படம். புதிய அனுபவம். இருந்தாலும் படத்தில் செம்மையுண்டு. குறிப்பாக மகளாகவும் மகளின் தாயாகவும் நடிப்போர். இருவரும் இயல்பாகவும் அழுத்தமாகவும் நடிக்கின்றனர். தேர்ச்சியான நடிகைகளைப் போன்று செயற்படுகின்றனர். இசை புதிய கோலத்தில் இழைக்கப்படவேண்டும். ஒளிப்பதிவு ஈர்ப்பைத் தருகிறது. எடிற்றிங்கில் இன்னும் நேர்த்தி வேண்டும். மேலும் இரண்டு நிமிடங்களைக் குறைத்தால் படம் கட்டிறுக்கமாகும்.
ஜேர்மனியச்சூழலில் படமாக்கப்பட்ட இந்தப்படம் போர்விளைவுகளாலான ஆண் துணையிழந்த பெண்களை மட்டுமல்லாது சமூகத்தில் வேறு காரணங்களுக்காக கணவனை துறந்த, இழந்த பெண்களின் மனஉலகையும் புரிந்து கொள்ள முற்படுகிறது. சம்பிரதாயங்கள் என்ற போர்வையில் ஒடுக்கப்படும் பெண்களின் நிலையை வெளிக் கொணரும் கலையாக இருப்பது இதனுடைய வெற்றியாகும். “இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மறுமணம் பற்றிய உரையாடல்களைச் செய்யப்போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்பும் சபேசனின் முயற்சி முக்கியமானது
ஆரதி