![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/01/Capture-33.jpg?itok=_eIYZsBb)
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும் ஆண்கள் அதை வெளியில் சொல்லுவதில்லை. அது மாத்திரமல்ல புட்டிபாலூட்டுவதை ஓர் ஆண் செய்கின்றான் என்று சொல்வது ஆண்மைக்கு இழுக்கானது. ஆண்கள் இவ்வேலைகளை செய்தல் இழிவான செயலாக கருதப்படுகிறது. அதனாலேயே நடைமுறையில் ஆண்கள் செய்யும் வேலைகள் மறைக்கப்படுகின்றன, பதியப்படாமல் விடப்படுகின்றன.
அண்மையில் நியூசிலாந்து நாட்டு சபாநாயகர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தன் கைக் குழைந்தைக்கு புட்டிபாலூட்டியது சமூக வலைத்ளங்களிலும் செய்திகளிலும் பரவலாக வெளிவந்தன. அதை பலரும் புகழ்ந்து வரவேற்றனர். நம் நாட்டு ஆண்களும் இவ்வாறு செய்கின்றனர் தானே என்று நினைத்துகொண்டு புட்டிபாலூட்டும் தந்தை என்று கூகுலில் தேடினால் இலங்கை, இந்திய ஆண்களின் வலைதளத்தில் கிடைக்கவில்லை. எங்கள் தந்தையரும் இவ்வாறு புட்டிப்பால் கொடுத்து பிள்ளை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். இதை பலரும் எம்மத்தியில் செய்வது எமக்கு தெரியும். ஆனாலும், பெரியளவில் இந்த பங்களிப்பு வெளியில் தெரிவதும் இல்லை, யாரும் சொல்வதும் இல்லை. இதிகாசங்கள், புராணங்களில் தந்தையின் பங்களிப்பு பிள்ளை வளர்ப்பில் கூறப்படவும் இல்லை. பதியப்படவும் இல்லை.
பிள்ளை வளர்ப்பு அல்லது வீட்டை பராமரித்தல் என்பவை பெண்ணிற்கே உரிய கடமையாகவும் அவளின் வகிபாகமாகவும் காலம்காலமாக கருத்தப்படுகிறது. அவ்வாறே நாம் வளர்க்கப்பட்டுள்ளோம்.
இங்கே ஆணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வகிபாகம் உயர்ந்ததாகவும் கர்வத்தை தரக்கூடியதாகவும் ஆண் என்பவன் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் அவனுடைய பொறுப்புக்களை சமூகம் கட்டமைத்துள்ளது. பிள்ளை பராமரிப்பு, வீட்டில் சமையல் செய்வது என்பதெல்லாம் பெண்ணின் கடமையாக சித்தரித்து அந்த வேலைக்கு பெறுமானம் வழங்கப்படவில்லை. வாழ்நாள் முழுதும் பெண் குடும்பம், வீட்டு வேலைகளை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள். ஆதலால், பெறுமானம் இல்லாமல், ஊதியம் இல்லாமல் பெண் செய்யும் வேலைகளை ஆண் செய்வது இழுக்காக கருதப்படுகிறது. இங்கே பெண்கள் இழுக்கானவர்களா என்ற கேள்வி எழுகின்றது? நேரடியாக அவ்வாறு சித்தரிக்கப்படாவிட்டாலும் அவ்வாறுதான் சமூகம் பெண்களுக்கான அந்தஸ்தை கொடுத்துள்ளது. அதனால் தான் பெண் அடங்கிப் போக வேண்டும், கட்டுப்பாடாக இருக்க வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும், குறிப்பாக சமைக்க தெரிய வேண்டும், பிள்ளை பராமரிப்பு செய்யவேண்டும் என பெண்ணை இச் சமூக அமைப்பு வீட்டோடு கட்டிபோட்டுள்ளது. எவ்வளவுதான் படித்த உயர் பதவிகளை வகிக்கும் பெண்ணாயினும் வீட்டில் அவள் பெண்ணிற்குரிய கடமைகளை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றாள்.
வசதி வாய்ப்பு உள்ள வீடுகளில் காலுக்கும் கைக்கும் என்று சேவகர்கள் இருந்தாலும் அங்கேயும் கூட அந்த சேவகர்களிடம் வேலைவாங்கும் பொறுப்பு பெண்ணிடமே புகுத்தப்பட்டுள்ளது. அதுதான் இல்லத்தரசி என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்கள் பெருமையாக சொல்வார்கள் “என் துணைவிதான் வீட்டில் முடிவெடுப்பது. நமக்கு அங்கே குரல் எழுப்பக்கூட உரிமை இல்லை” என்று. இங்கு பெண் இல்லத்துக்கு அரசியாகவும் ஆண் நாட்டுக்கு அரசனாகவும் உருவகிக்கப்படுகின்றான். பெண்ணை வீட்டுக்குள்ளே கட்டிபோடும் தந்திரோபாயத்தின் உச்சபட்சம் இந்த இல்லத்தரசி பதிவு. இந்த கற்பிதங்களில் ஊறிப்போன சமூகத்தின் பங்காளியான பெண்களும் கட்டமைப்பை நம்பியே அல்லது நம்பவைத்தே பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள். இந்த பழக்கமானது சரியாக குழந்தையை பராமரிக்க முடியாவிட்டால் அல்லது துணைவனின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத பட்சத்தில் தான் குற்றம் செய்கின்றேன் என்ற மாயையான குற்ற மனப்பாங்கால் தவிக்கின்றாள். காரணம் ஆண், பெண்களின் வகிபாகம் என்பது அவ்வளவு ஆழமாக மனதில் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக புகுத்தப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை முறை கட்டமைப்பெல்லாம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் என்பதை நாம் புரிய மறுக்கின்றோம். பெண் வீட்டு வேலைகளுக்கும் பிள்ளை பராமரிப்புக்கும் தள்ளப்பட்டிருப்பது வீட்டின் வருமானத்தில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அதேசமயம் ஆணுக்கு அவனின் தகுதிக்கு அப்பால் பொறுப்பையும் சுமையையும் அதிகரிப்பதால் ஆண் என்பவன் மிகவும் பாரத்தை சுமக்க வேண்டி உள்ளது. குடும்பச் சுமை ஆணின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவன் பலவகையான மன அழுத்தங்களுக்கு ஆளாகிறான். ஆண் என்ற அந்தஸ்தை தக்கவைக்க படாதபாடுபடுகின்றான். ஆண்மைக்கு இழுக்கு வராமல் நடப்பது அவனுக்கு வாழ்நாள் போராட்டமாக போய் விட்டது. இப்படியான எதிர்பார்ப்புக்களால் ஆண்களின் வாழ்நாள் காலம் பெண்களின் வாழ்நாள் காலத்தை விட குறைவாக காணப்படுகிறது. அவன் மது, புகைத்தல் போன்றவற்றுக்கு அடிமையாகிறான். (புகைத்தல் அல்லது மது அருந்துதல் ஆணுக்கு கௌரவம் என்ற நிலையும் இதற்கு காரணம்)
பிள்ளையை கருவில் சுமப்பதிலிருந்து தாய்பால் ஊட்டும் வரை பெண்கள் மட்டும்தான் அந்த வேலையை செய்யமுடியும். அதற்கமைவாகவே இயற்கை எம்மை உடல் வேறுபாடுகளுடன் படைத்துள்ளது. இதை எப்போதும் யாராலும் எங்கேயும் மாற்ற முடியாது. ஆனால், சமையல், புட்டிபால் கொடுத்தல், தாலாட்டு பாடுதல், பிள்ளையை சுத்தம் செய்தல் போன்றவை ஆண்களால் செய்ய முடியும். இதை ஆண்கள் செய்ய முன் வரவேண்டும். இவற்றை எல்லாம் செய்வதற்கு பெண்ணுக்கு எந்த பாடசாலையிலும் பயற்சிகள் வழங்கப்படவில்லை.
இன்று நியூசிலாந்து நாடு அபிவிருத்தியடைந்து முன்னணியில் இருக்கின்றது.அதற்கு காரணம் ஆண், பெண் இருவரும் குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து செய்கின்றனர். இங்கே ஆண்மை பெண்மை என்ற பேதங்கள் மறைந்து வருகின்றது.
இதுவே நாட்டின் வளர்ச்சியின் அடிப்படை. அதற்கு இந்த சபாநாயகர் உதாரணம். இன்னும் பிள்ளை வளர்ப்பு, இயற்கையில் பெண்களுக்கே உள்ளது என்ற மாயையான நம்பிக்கை மனநிலையில் இருந்து எமது அரசியல்வாதிகள், சட்டவல்லுனர்கள், கொள்கை வகுப்பளார்கள் வெளியே வரவேண்டும்.
ஆணும் பெண்ணும் வீட்டு பொறுப்புக்களையும் வருமானம் ஈட்டுவதையும் தமக்குள் பகிர்ந்து செய்ய பழகினால் வீடும் நாடும் தன்னிறைவு அடையும்.
நளினி ரட்ணராஜா