![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/01/30_30082019_SSK_CMY.jpg?itok=WCC8Zlou)
நுண்கடன் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் அழிக்கப்பட்டு கிராமப் பெண்களை அழிக்கும் நோக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை உயர்த்தி கஷ்ட நிலையை போக்குவதற்காக வழங்கப்பட்ட நுண்கடன் இன்றைய நிலையில் பெண்களின் வாழ்வாதாரத்தையே பாழ்ப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் சமூக சீர்கேடுகளும் நிலைமாறுதல்களும் குறிப்பாக தமிழ் பெண்களை சீரழித்துள்ளது எனலாம். இக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களையே ஆக்கிரமித்துள்ளன. இந் நிறுவனங்கள் பெண்களை மையப்படுத்திய நுண்கடன் திட்டங்களை செயற்படுத்துவதால் அதில் பெண்கள் ஈர்க்கப்பட்டு திக்கு முக்காடுகின்றனர். கிராமத்து பெண்கள் ஓரளவு கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதிலுள்ள தந்திரோபாயங்களை அறியாமல் இருக்கின்றனர். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர். இவற்றை சாதகமாக்கி கொள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் பெண்களை அவர்களின் வளைக்குள் சிக்க வைத்து பின்னர் சின்னாபின்னப்படுத்துகின்றனர். சில பெண்கள் தனது குடும்பங்களுக்கு தெரியாமல் இவ்வாறான கடன்களை பெற்று கொண்டு செலுத்த முடியாத நிலையில் தற்கொலைகளும் செய்து கொள்கின்றனர். நுண் நிதி நிறுவனங்கள் அதிக இலாபத்தை எதிர்பார்த்து நடத்தும் இவ்வாறான செயற்பாட்டால் சமுதாய சீர்கேடுகளே அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் இந்த நுண்கடனால் இன்னுமொரு சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.
நுண்கடன்களை அடைப்பதற்காக இன்று பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வது அதிகரித்துள்ளன. இச் செயற்பாடு மேலும் மேலும் பிரச்சினைகளையே உருவாக்குகின்றன. குறிப்பாக சில பெண்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களை கொண்ட பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டத்தை நீக்குவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறான புலம்பெயர்வுகளால் அக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது எதிர்கால தமிழ் சந்ததியினரை சீரழித்து விடும்.
நுண்நிதி என்பது இலங்கை மத்திய வங்கியினால் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிதி உதவியை வழங்கி அவர்களது பொருளாதார மட்டத்தை உயர்த்துவதற்கான ஒரு உத்தியாக முன்வைக்கப்பட்டதாகும். எனினும் பெண்கள் அதிகளவில் முதலீடு அல்லாத நடவடிக்கைகளுக்கு கடன் வாங்குகிறார்கள். ஏனெனில் அவர்களின் அன்றாட குடும்ப நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே இவ்வாறான கடன்களை பயன்படுத்துகின்றார்கள். சிலரிடம் எதற்காக இவ்வாறு கடன் பெறுகின்றீர்கள் என கேட்ட போது அது வாழ்வாதார விருத்திக்கு அல்ல, அன்றாட நுகர்வு தேவைக்கே பணம் பெறப்படுகின்றது என்றனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் கணவனின் தொழில் தேவைக்காகவோ அல்லது பிள்ளைகளின் நலனுக்காகவோ கடன்களை பெறுகின்றார்கள். சில பெண்கள் தனது இயலுமையைத் தாண்டி கடன் வாங்கியிருப்பதால் ஏதேனும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந் நிறுவனங்கள் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி வீதம் தொடர்பான விபரங்களை பெண்களுக்கு தெளிவுப்படுத்துவதில்லை. அவர்களின் கருத்துபடி, அவர்களுக்கு குறித்த மாதத்திற்கு அல்லது வாரத்திற்கு எவ்வளவு தொகை மீள செலுத்த வேண்டும் என்ற கணிப்பு மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. கடன் தொகையை மீள செலுத்த தாமதம் ஏற்படின் அவர்கள் தண்டிக்கப்படாவிட்டாலும் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தினை கொடுப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. சில சந்தர்ப்பங்களில் தமது அன்றாட வீட்டு செலவுகளை விட்டுக்கொடுத்து கடனை திரும்பச்செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
பல்வேறுபட்ட கடன்களுக்கு பழக்கப்படும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் முறைசாரா கடன் வழங்குநர்களிடம் இருந்தும் கடனைப் பெற்றுக்கொள்கிறார்கள். மேலும் இவர்களிடையே சேமிப்பதற்கு எவ்வித உத்தியும் காணப்படுவதில்லை. ஆரம்ப காலங்களில் மேற்கொண்ட சீட்டு சேமிப்பு திட்டங்களிலும் பங்குகொள்ள முடியாத நிலைமை பெண்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். கடனை மீள செலுத்துவதற்கு தங்களிடையேயுள்ள நகைகள், சொத்துக்களை அடகு வைக்கின்றார்கள். இந்நிலை சொத்துக்களின் அழிப்புக்கு வழிவகுக்கின்றது.
இதை சமூக மட்டத்தில் நோக்கும் போது, கடன் பழக்கங்களினால் குடும்பங்களிடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. அதிகாரிகள் வீட்டிற்கு வருகைதரும் போது பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்தல், கடனை திரும்ப செலுத்தக் கூறி திட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள். அதேபோல் பெண்களிடையே காணப்படும் ஒற்றுமை குழம்புவதோடு கடனை பெற்றுக் கொள்ள இளம் ஆண் உத்தியோகத்தர்கள் பணம் தரும் வரை வீட்டை விட்டு செல்ல மறுக்கின்றமையினால் அப்பெண்கள் களங்கத்திற்கு ஆளாகிறார்கள்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் பெண்கள் அரச நிறுவனங்களான கிராமிய வங்கி, சமுர்த்தி வங்கி போன்றவற்றிலிருந்து கடன்களை பெற்றுக்கொள்ள அதிக விருப்பம் காற்றுகின்றபோதிலும் வங்கியை சென்றடைவதற்கான தூரம், ஆவணங்கள், உத்தரவாதம் காலவரையறை போன்ற காரணங்களால் அந் நிறுவனங்களை நாடுவதை தவிர்க்கின்றனர். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன் உதவிகள் ஓரங்கட்டப்படுவதனால் இத்தகைய தனியார் நுண்கடன் நிறுவனங்களுக்கு மக்கள் இலகுவாக சென்றடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது.
பெண்களின் விழிப்புணர்வின்மை மற்றும் கல்வி அறிவின்மையினால் அவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். நுண்கடன் மூலம் பாதகமான விளைவுகள் மட்டுமல்ல சாதகமான சில முன்னேற்றங்களும் உள்ளன. இது தொடர்பான சில சட்ட விதிமுறைகள் கொள்கைகள் என்பன முன்வைக்கப்பட்ட போதிலும் அவை பெரும்பாலும் ஆவண வடிவில் மட்டுமே இருக்கின்றதே தவிர செயல்படும் நிலையில் இல்லை.
நுண்கடன் வழங்கல் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பான வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்பொன்று மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதோடு அதில் குறித்த கடன்தொகைகளுக்கான வட்டி வீதம், அதன் தன்மை கடன் பெரும் அடிப்படை விபரம், விண்ணப்ப முறைகள் என்பன தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுண் நிதி நிறுவங்களூடாக வழங்கப்படும் கடனானது மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு செயட்திட்டத்தினை மையமாகக்கொண்டு வழங்கினாலும் அவை கண்காணிக்கப்படாமல் கடன் வழங்குவது தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், இவ்வாறு பெண்கள் எடுக்கும் கடன் தொகை மற்றும் கடன் பெறப்பட்ட எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் கடன் தகவல் மையத்தில் உள்ளது. ஆனால், அதனை உரிய அதிகாரிகள் பயன்படுத்துவதில்லை. அதனால் சரியான தகவல் பரிமாற்றம் நடைபெறுவதில்லை.
நுண் கடன் முறைகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான அரச கொள்கைகள் சட்ட விதிமுறைகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வுகள் மிகக்குறைவாகவே உள்ளது. இலங்கையில் பல பகுதிகளில் 10,000க்கு மேற்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருவதை காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறான பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தடைசெய்ய வேண்டும். அல்லது அவர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டும். மேலும் வழங்கப்படும் கடனானது மக்களின் வாழ்வாதார எழுச்சி தவிர்ந்து ஏனைய அடிப்படை தேவைகளுக்காக வழங்குவதை தடைசெய்ய வேண்டும். நுண்கடன் நிறுவனங்களை நோக்கி மக்கள் செல்வதில்லை அவர்களே மக்களைத் தேடி வருகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகள் மூலம் மட்டுமே வறுமையில் வாழும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணம் முற்றிலும் பிழையானது. நுண்நிதி நிறுவனங்கள் மூலம் இதனை இலகுவான திட்டமிடலுடனும் விழிப்புணர்வுடனும் தனிநபர் பொருளாதார விருத்தியினை கருத்தில் கொண்டு இயங்கினால் மட்டுமே இதனை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். அதிகளவிலான வட்டியை அறவிடுவதன் மூலமோ தகாத முறையில் பணம் மீளப்பெறல் மூலமோ இலாப நோக்கினை மட்டுமே கொண்ட இவ்வியாபாரம் மூலம் பெண்களின் வாழ்க்கைமுறை மட்டுமன்றி சமூக சீர்கேடுகளுக்கும் இட்டுச்செல்கிறது. இவ்வாறான கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை அதிகளவில் நாடுவதால் மனித வளம் சுரண்டப்படுவதோடு உடல் உள ரீதியில் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். இதற்கான உடனடி தீர்வை அரசு முன்வைக்காவிடின் எதிர்கால பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமன்றி பெண் வர்க்கமே பாரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.
ஸ்ரீ சுரேஷ் குமார் சுஜாந்தி
ஆய்வு உத்தியோகத்தர்,
வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA)