தொழிலுக்காக கருப்பையை நீக்கும் பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

தொழிலுக்காக கருப்பையை நீக்கும் பெண்கள்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வாறான அறுவை சிகிச்சைகளை செய்திருக்கின்றனர்.

ஓவ்வொரு வருடமும் மகாராஷ்டிராவின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.

அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் இவர்கள் பெண்களை பணிக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.

பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்பு தோட்டங்களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப்பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடைபெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடினமான ஒரு காலமாக அமைந்துவிடும்.

எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குணமடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமானவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப்பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.

இதன் தாக்கம் இன்று இலங்கையிலும் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இலங்கையில் பெண்களின் சதவீதம் 51% இருப்பதால் அதிகமாக எல்லா துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால், மாதவிடாய் காலங்களில் இன்றுவரை அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கு எவ்விதமான முன் ஆயத்தங்களும் எடுக்கப்படவில்லை. இவ் விடயம் தொடர்பாக பேசப்படுவதும் குறைவாகவே இருக்கிறது.

குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களே மாதவிடாய் காலங்களில் அதிக சிரமங்களுக்கு ஆளாகின்றனர். காரணம் இவர்கள் கூடுதலான நேரம்  நின்று கொண்டே வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  ஆனாலும் இவற்றை சகித்து கொண்டு தங்களில் கடமைகளில் குறைவின்றி பணிபுரிகின்றனர்.

சில பெண்களுக்கு இயல்பாகவே மாதவிடாயின் போது கடுமையான வலிகளும் உடல் உபாதைகளும் ஏற்படுவது இயல்பாகும். அந்நேரங்களில் அவர்கள் தங்களுக்கான சொந்த விடுமுறைகளையே எடுக்கின்றனர். அதிலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை. மேலதிகாரிகளின் நச்சரிப்புகளும் பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு தங்களது கடமையை செய்ய வேண்டியுள்ளது.

இப் பிரச்சினை இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பெண்கள் என்ன தான் போராடினாலும் இதற்கான தீர்வு கிடைப்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.  

Comments