முற்போக்கு சிந்தனையை ஏற்க மறுக்கும் சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

முற்போக்கு சிந்தனையை ஏற்க மறுக்கும் சமூகம்

தமிழ் சமூகம் முற்போக்கான சமூகம் என்று சொல்லும்போது பெருமை கொள்ளும் நாம், அதிலிருந்து ஒரு பெண் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை.

காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தும் பழக்க வழக்கங்களை எதிர்த்து நின்றாலோ, ஆணுக்கு பெண் அனைத்து வகையிலும் சமம் என்று சொன்னாலோ ஏன் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலோ கூட அவர்கள் இந்த சமூகத்தில் இருந்து தள்ளி வைத்தே பார்க்கப்படுகிறார்கள்.

கதைகளிலும், கவிதைகளிலும் முற்போக்கு பெண் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டுபவர்கள் அனைவரும் நிஜத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

முற்போக்கு பேசுகின்ற பெண்கள் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் என அனைத்தையும் முழுமையாக கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எல்லோருமே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்தபடிதான் வளர்ந்திருப்பார்கள். பழமையை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். முற்போக்கு கருத்துகளை உள்வாங்கும்போது ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தன்னை தானே செதுக்கி கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்வில் அனிச்சை செயலாக மாறிவிட்ட விஷயங்களை கூட இது தேவையா? இல்லையா என மறு ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நொடிதோறும் கற்றுக்கொண்டிருப்பார்கள். இத்தகைய சமயத்தில், அறியாமையின் காரணமாக கொண்ட கொள்கைக்கு எதிரான ஒரு முடிவை எடுத்துவிட்டால் அல்லது ஒரு செயலை செய்துவிட்டால் அது நகைப்புக்குரிய, நம்பிக்கையின்மைக்குரிய விஷயமாக மற்றவர்களால் பார்க்கப்படும்.

“முற்போக்கு கொள்கை நோக்கி நடை போட்டு கொண்டிருக்கிறார்கள், போக போக சரியாகிவிடுவார்கள்” என்ற எண்ணம், தெளிவுள்ள கொள்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அந்த தெளிவு இருக்காது. சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி, கொள்கையை பின்பற்ற தகுதி இல்லாதவர் என்பது போல பின்நோக்கி இழுப்பார்கள்.

முற்போக்கு கொள்கைகளை முன்னெடுப்பதால் பல விஷயங்கள் சாதகமாக இருந்தாலும், ஒரு சில பிரச்சினைகளையும் பல சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தை பொறுத்தவரையில், முக்கிய பொறுப்பில் பணியாற்றும் நபர்களை பொறுத்து, பிரச்சினைகளின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். குறைந்தபட்ச ஜனநாயகம் கொண்டவர்களாக உயர் அதிகாரிகள் இருந்தால் கூட முற்போக்கு பெண்களுக்கான அடையாளம் மதிக்கப்படும். குறைந்தபட்ச ஜனநாயகம் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தொடங்கும்போதே நம்மை பற்றிய தவறான முன்கணிப்பை வடிவமைத்துக் கொள்வார்கள். முற்போக்கு பேசும் பெண்களின் எழுத்து மட்டுமல்ல உடை, நடை, பாவனை, செயல்பாடு என அத்தனையும் உற்று பார்க்கப்படும். ஏன் அதை செய்கிறாய்? இதை செய்கிறாய் என்ற கேள்விகள் சீரியசாகவும், நகைச்சுவையாகவும் வந்து நம்மை பதம் பார்க்கும்..

தன்னை விட பெண் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் குறைந்தவள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்களுக்கு உண்டு. பத்திரிகை மற்றும் மீடியாத்துறையும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. முற்போக்கு பேசும் பெண் எப்போது சறுக்கி விழுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நேராக வாக்குவாதம் செய்து வீழ்த்த நினைப்பது ஒரு வகை என்றால், நம் முன் சிரித்து பேசிவிட்டு, பின்புறம் திமிர் பிடித்தவள், சண்டைக்காரி இப்படித்தான் வேண்டுமென்று சிரித்து மகிழும் நபர்களோடு தான் நாம் தினமும் நடைபோட வேண்டும்.

முற்போக்கு பேசும் பெண்களை கண்டால் பெரும்பான்மையான ஆண்களுக்கு பிடிப்பது இல்லை. நீயும், நானும் சமம் என்றாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்..

சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமமாக பார்க்கப்பட்டிருந்தால், மதிக்கப்பட்டிருந்தால் பெண்களை பொருளாக பார்க்காமல், சக மனுஷியாக பார்த்திருப்பார்கள். ஆனால் துர்வாய்ப்பாக சிறு வயது முதலே பெண்ணை சமமாக மதிக்கும் போக்கை இந்த சமூகம் கற்றுக் கொடுப்பதில்லை.

இத்தகையவர்களை சந்திக்கும்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நமக்கு உறுத்தும் விஷயத்தை, அவர் சரியென நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை தவறு என போட்டுடைக்க வேண்டும். ஒருவேளை அந்த இடத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டால், அவர் செய்யும் தவறு சரியாகிவிடும், எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்தால் நாம் அதற்கு உடந்தை என்றாகிவிடும்.

குடும்பங்களும், உறவுகளும், சுற்றியிருக்கிற மக்களும் சேர்ந்து தான் சமூகமாகிறார்கள். எனவே வழக்கம்போல குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையே சமூகத்திலும் கிடைக்கும். அலுவலகத்தில், பொது வெளியில் சந்திக்கும் சவால்களுக்கு இணையாக குடும்பத்திலும் முற்போக்கு சிந்தனையுடைய பெண்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். ஓரளவு முற்போக்கு கொள்கைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் பெண்களால் சமாளித்துவிட முடியும். அவர்களுக்கு குடும்பங்களில் பெரிய தடைகள் இருக்காது. தடைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிக்காது.

ஆனால் எந்தவித கருத்தியலும் இல்லாத சாதாரண குடும்பங்களில் இருந்து வரும் பெண்கள் மிகப்பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அத்தகைய குடும்பங்களில் இருந்து பெண்கள் முற்போக்கு நோக்கி வெளியே வருவதே குதிரைக் கொம்பு. அப்படியும் வெளிவந்து விட்டால் அவளை இயங்கவிடாமல் தடுக்க ஆயிரக்கணக்கான விஷயங்கள் முளைக்கும். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

முற்போக்கு பேசும் பெண்கள் வாழ்க்கையில் எத்தனை உயரத்திற்கு போனாலும் திமிர்பிடித்தவள், அடங்காதவள் என்ற பெயரே பெரும்பாலான நேரங்களில் மிஞ்சுகிறது. முற்போக்கு பெண்களோடு வாழும் பக்குவம் முற்போக்கு பேசும் ஆண்களுக்கு கூட அத்தனை சீக்கிரம் வந்து விடுவதில்லை.

பிபிசி

Comments