![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/22/readers_letters.jpg?itok=JrcRGKnK)
கோழைகளாக வாழ்வது பெண்களே!
சென்ற செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி வெளிவந்த தினகரன் வாரமஞ்சரியில் “கோழைகளின் ஆயுதம் ஆணாதிக்கம்” என்ற தலைப்பில் நளினி ரட்ணராஜா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அதில் “பெண் ஆணில் தங்கி வாழ வேண்டும் என்று நினைப்பது கோழைத்தனம்; இதை ஆண்கள் புரியாமல் கோழையாக வாழ்ந்து கொண்டு உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
Madam! இங்கு ஆண்கள் அல்ல பெண்களே கோழைகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். நீங்கள் கூட உங்கள் பெயரை உங்கள் நண்பிகள் நளினி! நளினி! என்று கூப்பிடுகின்ற போதும் “ரட்ணராஜா” என்ற ஆணின் பெயரையும் உங்கள் பெயருடன் சேர்த்தே எழுதுகின்றீர்கள். இதிலிருந்து உங்கள் பெயர் கூட ஓர் ஆணின் பெயரைச் சேர்த்து எழுதுவதன் மூலம் உங்கள் பெயர் ஒரு கௌரவம், பெறுமதி பெறுகிறது என்று நினைக்கிறீர்கள். இது உங்கள் கோழைத்தனம் இல்லையா? வீட்டுக்குள் ஒரு பாம்பு அல்லது எலி ஓடித்திரியுது என்றால் எங்கே? ஓடி ஒழிகிறீர்கள். கணவன் அல்லது ஓர் ஆம்பிளை அதை அடித்துப் புதைக்க வேண்டும். இதுதான் உங்கள் வீரமா? நடுநசியில் யாரோ கதவைத் தட்டுகிறார் அல்லது கோலிங்பெல்லை அமுக்குகிறார். உங்கள் விழி பிதுங்குகிறதே. உடல் நடுங்குகிறதே. கதவைத் திறப்பது யார்? ஓர் ஆண்தான் கதவைத்திறக்க வரவேண்டும். உங்கள் வீரம் எங்கே போய்விடுகிறது? நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து, புறக்கோட்டை பேரூந்து தரிப்பிடம் வரை தனியே உங்களால் ஆயுதங்களின்றி நடந்து வர முடியுமா? முடியாது? ஏன் முடியாது? பெண் ஒரு போகப்பொருள் அது ஆணழகை கவர்கிறது. இதனால் தான் பெண்ணுக்கு இந்த சங்கடங்கள். அதனால் தான் பெண்களின் நிர்வாகிகளாக ஆண்கள் இருக்கிறார்கள்.
இப்போது நீங்கள் திருக்குர் ஆனில் 4ம் அத்தியாயம் 32ம் வசனத்தை அவதானியுங்கள்.
“இன்னும் உங்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதைப் பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் உரிய பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு. மேலும் அல்லாஹ்விடத்தில் அவனின் பேரருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அத்துடன் திருக்குர்ஆனின் 4ம் அத்தியாயம் 34ம் வசனம் இப்படிக் கூறுகிறது.
“ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர். ஏனெனில் அவர்களில் சிலரை விட (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலுமாகும்...
இந்த வசனம் நீண்டு செல்வதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். தினகரன் வார மஞ்சரி 2019 ஓகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை
வெளியான பேராதனை பகிடிவதை முகாம் பற்றிய கட்டுரை மனவருத்தத்தைத் தருகிறது. இதற்காக ஒரு தீர்வுத்திட்டத்தை நான் தருகிறேன். அனேகமாக எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் வைத்தியம், பல் வைத்தியம், என்ஜினியரிங், முகாமைத்துவம் போன்ற எல்லாத் துறைகளும் இருக்கின்றன. முதலாம் வருட எல்லா மாணவர்களுக்கும் ஒரு பல்கலைக்கழகத்தையும் இரண்டு வருட எல்லா மாணவர்களுக்கும் வேறொரு பல்கலைக்கழகத்துக்கும் என்றும் மாற்றலாம்.
உதாரணமாக
1ம் வருடம் பேராதனைப் பல்கலைக்கழகம்
2ம் வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
3ம் வருடம் ருஹூணுப் பல்கலைக்கழகம்
4ம் வருடம் கொழும்பு பல்கலைக்கழகம்
5ம் வருடம் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினை தீரும் பல்கலைக்கழக மாணவர்களும் புதிய சூழலில் பகிடிவதையை மறந்துவிடுவார்கள்.
முகம்மத் ஜிப்ரி,
குருநாகல்
தொழிலாளர் தலைவர் செல்லசாமி
கடந்த இரண்டு வாரங்களாக வாரமஞ்சரியில் வெளியான எம்.எஸ். செல்லசாமியைப் பற்றிய கட்டுரையை ரசனையுடன் படித்தேன். அவரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவரைப் போல பரபரப்பாக, சுறுசுறுப்பாக, உதவிகள் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வுடன் தொழிலாளர் மத்தியில் பணியாற்றிய ஒரு தொழிற்சங்கவாதியை அவருக்குப் பின் அவருக்கு நிகராக நான் காணவில்லை. செல்லசாமி என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தொழிற்சங்க போராட்டங்கள்தான். சங்கங்கள் அரசாங்கத்துக்குள் வராத காலத்திலும் 77க்கு பின்னரும் அவர் பல போராட்டங்களை நடத்தினார். பங்கெடுத்துக் கொண்டார். மடகும்புற போராட்டம், உருளை வள்ளி போராட்டம், முல்லோயா போராட்டம், மொன்டி கிறிஸ்டோ போராட்டம் எனப் பல போராட்டங்களைச் சொல்லலாம். சுழற்சி முறை போராட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே செல்லசாமி ஐயாதான்!
ஸ்ரீபாத கல்லூரி திறப்புவிழா என்று நினைக்கிறேன். அந்த வைபவத்துக்கு ஜே.ஆர். ஜயவர்தன வந்திருந்தார். அவரது ஆங்கில மொழி பேச்சை புத்திரசிகாமணி தமிழில் மொழி பெயர்த்தார். ஜே.ஆர். தன்பேச்சில், செல்லசாமி வேகமாக வேலை செய்பவர். அவரிடமிருந்து எனக்கு எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பு வரும். அவசியம் என்றால் உடனே எடுத்துப் பேசுவார். அதனால் நான் குளியலறையில் இருந்தாலும் தொலைபேசியை அங்கு வைத்திருப்பேன் என்று அவர் சொன்னது எனக்கு நினைவில் உள்ளது.
இந்தச் சம்பவம் எனக்கு ஒரு நண்பர் சொன்னது.
ஒருமுறை அவரது கைபேசி பழுதடைந்து விட்டதாம். அதைத் திருத்துவதற்காக தன் உதவியாளரிடம் கொடுத்து விட்டு, இது பழுதுபார்த்து திரும்பிவர எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டிருக்கிறார். ஒரு மணித்தியாலம் செல்லலாம் என்று அவர் கூறவே, ஐயய்யோ, அவ்வளவு நேரமாகுமா? பிரச்சினைகள் குறித்து என்னுடன் தொடர்பு கொள்பவர்கள் ஏமாந்து போவார்களே! என அங்கலாய்த்துக் கொண்டாராம்.
தொழிலாளர் சேவைக்காக தொலைபேசியையும் பத்திரிகைகளையும் சரியாகப் பயன்படுத்தியவர் செல்லசாமியாகத்தான் இருக்கவேண்டும். அவர் காலையிலேயே எழுந்து பத்திரிகைகளை படித்து விடுவார். எந்தெந்த தோட்டங்களில் பிரச்சினைகள் உள்ளன என்பதை பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டு அந்தந்த மாவட்ட காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை விசாரிப்பார்.
அவசியமான நடவடிக்கைகளை உடனுக்குடன் தோட்ட காரியாலயம், தொழில்ஆணையாளர் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேசி தீர்த்து வைக்க முனைவார்.காலைப் பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச பெயர் பெற்றவர். எம்.எஸ். செல்லசாமியும் பிரச்சினைகளை நேரிடையாக அணுக பத்திரிகைகளைப் பயன்படுத்தினார். அவர் அலுவலகத்துக்கு வந்தால் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். இரண்டு தொலைபேசிகளும் அலறிய வண்ணமே இருக்கும்.
ஒருவர் இறந்த பின்னர் அவரைப் புகழும் பழக்கமே பலரிடமும் உள்ளது. உடல் நலமில்லாமல் இருக்கும் போது அவரைச் சென்று பார்க்க மாட்டார்கள்.
அவர் இறந்ததுமே சடலத்தைப் பார்க்க பறந்தோடுவார்கள். புகைப்படம் எடுத்து அவரைப் புகழ்ந்து பேசுவார்கள். செல்லசாமி ஐயா உயிருடன் இருக்கும்போது அவரைப் பற்றி பேசிய வாரமஞ்சரிக்கு நன்றி. இந்த வாய்ப்பு தந்ததற்கும் நன்றி.
வி.பி. பெரியசாமி,
ஹட்டன்.