பெண் உயிர்வாழ்வது ஆணின் தயவில்...? | தினகரன் வாரமஞ்சரி

பெண் உயிர்வாழ்வது ஆணின் தயவில்...?

பெண்களைப் பொறுத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும் வீடுதான், குடும்பங்கள் தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும் சராசரி மக்களால் பெண்களாலும் நம்பப்படுகிறது.

தெருக்களில் போகும் பெண்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத போக்கிரிகளிடமிருந்து மட்டும் ஆபத்து வருவதில்லை. படித்த, கண்ணியமாகத் தெரியும் ஆண் பிள்ளைகளிடமிருந்தும் ஆபத்துகள் வருகின்றன. வக்கிரமாகப் பார்ப்பது தொடங்கி பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான ஆபத்துகள் வருகின்றன. போக்கிரிகளை, வளர்ப்பு சரியில்லை குடும்பம் சரியில்லை என்று குற்றஞ்சுமத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், பார்வைக்குக் கண்ணியமாகத் தெரியும் இந்த ஆபத்தான ஆண்களும் கூட வானத்திலிருந்து குதிப்பதில்லை. நல்ல, பண்பாடு மிக்கதாகச் சொல்லப்படும் குடும்பங்களிலிருந்துதான் இந்தக் கண்ணியவான்கள் வருகிறார்கள்.

எந்தச் சாதியை, மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், பெண்களை, பெண் குழந்தைகளைப் பற்றித் தாழ்வான கருத்தைத்தான் வழிவழியாக விதைத்து வருகின்றன. பெண், ஆணுக்கு இணையானவள் கிடையாது, ஆண்களுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவள், அவள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என வழிவழியாகப் போதிக்கப்படும் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள்தான், பெண்கள் மீது ஏவி விடப்படும் சகலவிதமான வன்முறைத் தாக்குதல்களையும் இந்த நவீன காலத்திலும் கூட நியாயப்படுத்தி வருகின்றன.

மரபுவழிப்பட்ட குடும்பங்கள் பெண்களின் நியாயமான விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவையாக இருப்பதோடு, பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்முறைகளின் இருப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் உள்ளன. கிரிமினல்களால், அடாவடிக் கும்பல்களால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சட்டப்படியான குற்றங்களாகக் கருதப்படும் அதேசமயம், வீட்டிற்குள் அவளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் – அடி, உதை சித்திரவதைகள், பாலியல் தொந்தரவுகள், தாக்குதல்கள் உள்ளிட்டவை கலாசாரம், மரபு என்ற பெயரில் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன; அங்கீகரிக்கப்படுகின்றன.

பெண்கள் பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதைக் கண்டிக்கும் அனைவருமே தங்கள் வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. குடும்ப வன்முறை ஒருபுறம் வெளிப்படையான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது. இன்னொருபுறமோ, பெண்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாதென்றாலும், அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் என பெண்ணடிமைத்தனம் முன்னிறுத்தப்படுகிறது.

பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தப்படும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறைதான், பல நேரங்களில் பெண்ணுக்குச் சமாதி கட்டும் இடமாகவும் மாறிவிடுகிறது. வீட்டிற்குள் நடக்கும் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளை வேறெப்படிச் சொல்ல முடியும்? கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது தனியார் மயம், தாராளமயம் புகுத்தப்பட்ட பின்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்றச்செயல்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. பெண் கருக்கொலையும் அதிகரித்திருக்கிறது.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறப்பதைக்கூடப் ‘பெருந்தன்மையோடு’ ஏற்றுக் கொள்ளும் ஆணாதிக்கக் குடும்பங்கள், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெரும்பாலும் சகித்துக் கொள்வதில்லை. ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என அறிவியல் மெய்ப்பித்த பிறகும், இந்த உண்மையை ஆணாதிக்க சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பழியைப் பெண்ணின் மீதே போட்டு, அவளைத் துன்புறுத்துகிறது. கருக்கொலைகளும், சிசுக் கொலைகளும் வரதட்சணையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன. வரதட்சணை என்பதும்கூட பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் கருவி எனும்பொழுது, அந்த அநீதி பெண்களைக் கருவிலேயே அழித்துவிடத் துடிக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த வன்மத்தையும் பிற்போக்கு ஆணாதிக்கத்தனத்தையும் இந்து மதம் மோட்சம், இறவாத்தன்மை போன்ற தர்க்கங்களை முன்னிறுத்தி நியாயப்படுத்துகிறது. 

பெண்களைப் பாகுபடுத்தி வளர்ப்பதும், ஒரு ஆணுக்கு ஈடாக அவளை மதிக்க மறுப்பதும் பெண்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கு இடையே உணவு வழங்குவதில் கூட வேறுபாடு காட்டப்படுகிறது.

பெண் கல்வி நிலையில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பினும், இது ஒரே சீராக இல்லை.

குறிப்பாக, பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல் இடை நிற்கும் சதவீதம் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் மத்தியில் தான் அதிகமுள்ளது. இந்த இடைநிற்றலுக்கு, பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறமிருக்க, வீட்டு வேலைகள் பெண் குழந்தைகள் மீது சுமத்தப்படுவதும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி தேவையில்லை, வயதுக்கு வந்துவிட்ட பெண்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்பது போன்ற பிற்போக்கு சிந்தனைப் போக்கும், 18 வயதுக்கு முன்பே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதும், அதிகமாகப் படிக்க வைத்தால், அதற்குத் தகுந்தாற் போல படித்த மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும் அதிகமாக வரதட்சணை கொடுக்க வேண்டும் போன்ற சிந்தனைகள் இன்றும் ஒரு சில குடும்பங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள், மாணவிகள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்களும் பெண் கல்வியைக் காவு வாங்கி வருகின்றன. ஆரம்ப வகுப்புகளில் இன்றும் கூட ஆண் என்றால் அலுவலகம் செல்பவன், பெண் என்றால் சமையல் உள்ளிட்டு வீட்டு வேலை செய்பவள் என்ற பிற்போக்கு சிந்தனைதான் பாடமாகப் போதிக்கப்படுகிறது.

சமவேலைக்கு சம ஊதியம் என்பது இன்றும் கூட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. கற்பு நெறி மட்டுமல்ல, கருத்தடை செய்து கொள்வதென்பது கூடப் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாகவே நிலவி வருகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கற்பு என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்து தான் சமூகம் கண்டிக்க முன் வருகிறது.

அதனால்தான், குடும்பத்திற்குள் கணவனால் மனைவி மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்கள் சமூகத்தால் கண்டிக்கப்படுவதுமில்லை, கண்டுகொள்ளப்படுவதுமில்லை.

ஓர் ஆண் மகனுக்குத் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் அற்பத்தனமான சுதந்திரம் கூடப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. படித்த, நவநாகரிகப் பெண்கள்கூடத் தாலி, மெட்டி போன்ற அடிமைச் சின்னங்களைச் சுமந்துதான் தீர வேண்டும். அவற்றை நியாயமானதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இன்றளவும் சமூகத்தில் நிலவுகிறது.

சட்டம் மற்றும் நீதி பரிபாலன முறையின் தோல்வியை மட்டுமல்ல, சமூகம் எந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனத்திலும் வன்கொடுமையிலும் ஊறிப் போயிருக்கிறது என்பதையும்  எடுத்துக் காட்டுகின்றன.

Comments