குர்திஸ் – சிரியா உறவு மேற்காசிய அரசியலில் மாறுத்தை ஏற்படுத்துமா? | தினகரன் வாரமஞ்சரி

குர்திஸ் – சிரியா உறவு மேற்காசிய அரசியலில் மாறுத்தை ஏற்படுத்துமா?

பல நூற்றாண்டுகளாக தனி நாடு கோரிவரும் குர்திஸ் இன மக்கள் மீது மீண்டும் ஒரு அழிப்பு நடவடிக்கையை துருக்கி அரசு ஆரம்பித்துள்ளது. தனது எல்லைப் பகுதியை உள்ளடக்கி குர்திஸ் இனம் தனிநாட்டுக்கான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை துருக்கிக்கு ஆபத்தான விடயமாகவே அமைந்துள்ளது. துருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகளை உள்ளடக்கியே குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இக்கட்டுரையும் குர்திஸ் மக்கள் மீதான துருக்கியின் படையெடுப்பும் அமெரிக்காவின் அணுகுமுறையும் குர்திஸ் தலைமைகளின் உத்திகளும் பற்றி உரையாடவுள்ளது. 

ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ்தான் தனி நாட்டுக்கான கோரிக்கை பலநூற்றாண்டுகளாக முன்வைக்கப்பட்டு ஆயுதப் போராட்டமாக நடைபெற்று வருகிறது. குர்திஸ் மக்களின் வரலாறும், இருப்பும் நீண்ட நெருக்கடிகளைக் கொண்டது. குர்திஸ் இனக்குழு நீண்ட வரலாற்றைக் கொண்டது. குறிப்பாக ஓட்டமன் சாம்ராஜ்சியத்தின் ஓர் அலகில் தனித்துவமாக இனமாக வாழ்ந்தாலும் முடியாட்சி பாரம்பரியத்தினால் சுதேசிய அடையாளத்தையும், தனித்துவத்தை பேணமுடியாதவர்களாக மாறினர். அதன் பயனாக மேற்காசியாவின் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருந்த போதும் அந்தந்த நாடுகளில் வாழ்ந்த குர்திஸ்துக்களின் ஒருமைப்பாட்டையும் தமது பண்பாட்டையும் பேணிவந்தனர். ஆனால் அந்த நாடுகளின் எதிர்ப்புகளால் குர்திஸ் இனம் எதிர்கொண்ட துயரத்தினாலும் அழிவுகளாலும் காலப்போக்கில் இந்நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கி தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அனைத்து நாடுகளாலும் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு, சித்திரவதைக்கும், படுகொலைக்கும் உள்ளாக்கப்பட்டனர். இது இன்றுவரையும் அனுபவித்தே வருகின்றனர். இத்தகைய துயரத்தை அவர்கள் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் எதிர்கொண்டனர். 1970களில் மட்டும் ஈராக்கின் அல்அன்பால் பிராந்தியத்தில் மட்டும் 18,2000 குர்திஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈராக் மீதான அமெரிக்க கூட்டுப்படையின் படையெடுப்புக்கு பின்னர் குர்திஸ்தான் பிராந்தியம் தன்னாட்சிப் பகுதியாக மாறியது. 

அமெரிக்கா ஈராக் மீது தலையீடு செய்த பின்னர் குர்திஸ்களுக்கான ஜனநாயகச் சூழலை ஈராக்கில் ஏற்படுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது. குர்திஸ்துக்கள் தாம் முன்வைத்த குர்திஸ்தான் அரசை உருவாக்க முயற்சித்ததை ஈராக்கில் சதாம் ஹுஸைனின் வீழ்ச்சிக்குப் பின்னர் சாத்தியப்படுத்த திட்டமிட்டனர். இதனடிப்படையிலேயே கடந்த செப்டெம்பர் 25. 2017 இல் ஈராக்கில் தனியரசுக்கான பிரகடனத்தின் கீழ் பொது வாக்கெடுப்பொன்றினை நிகழ்த்தினர். அதில் 92 சதவீதமான மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதனையடுத்து அப்பிராந்தியம் முழுவதும் குர்திஸ்களுக்கு எதிரான அணுகுமுறையில் அவ் அரசுகள் தீவிரம் காட்டத் தொடங்கின. இந்த சந்தர்பத்திலேயே அமெரிக்கா தனது துருப்புக்களை அதிகமாக சிரியாவின் எல்லைக்குள் நகர்த்தியது. அல்டான்ப் தளமானது ஈராக்கின் எல்லையோரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்த்கதாகும். சிரியாவுக்குள் அது அமைந்தாலும் ஈராக்கினை கண்காணிக்கவும் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளுடனான உறவை பராமரிக்கவும் அத்தளம் அமெரிக்காவுக்கு உதவியது என்பதும் குர்திஸ் விடுதலைப்படைக்கு அதிக நம்பிக்கையை தந்த செய்தியாக இருந்தது.  

ஆனால் அமெரிக்கா தனது படைகளை வெளியேற்றப் போவதாக அப்போது அறிவித்த மறுகணம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட குர்திஸ் விடுதலைப் படை மீளவும் ஒருதடவை வல்லரசுகளது நலனால் ஏமாற்றப்பட்டதாக கருதியது. அதே தவறை அமெரிக்கா மீண்டும் சிரியா எல்லையிலிருந்த தனது படைகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததும் துருக்கிய தாக்குதலுக்கு வழிவிட்டே தனது படைகளை விலக்குவதாகவும் தெரிவித்தது. அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமக்து முதுகில் குத்தியுள்ளதாக குர்திஸ்தான் போராளிகள் தெரிவித்துள்ளனர்.  

இத்தகைய நெருக்கடி குர்திஸ்தானியர்களுக்கு புதிதல்ல எனக் கூறிக் கொண்டாலும் ஆயுதப் போராட்டத்தை வலுவாக கடைப்பிடித்த ஒரு விடுதலைப்படையையே ஆதரவு வழங்கிய அதிக இலாபங்களை அனுபவித்த அமெரிக்கா கைவிடுதல் என்பது தேசிய இனவிடுதலைக்கான மக்கள் கூட்டம் கவனத்தில் கொள்ளவேண்டிய படிப்பினையாகும். ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல சதாம் ஹுஸைனை காட்டிக்கொடுத்து அமெரிக்காவிற்கு அதிக இலாபத்தை ஏற்படத்தியவர்கள் குர்திஸ்தானியர் என்பது தெரிந்ந விடயம். அதனால் அரபு உலகம் முழுவதும் நிரந்தரமாகவே சுன்னி முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்த நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

கைவிடுதல் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம். மறுபக்கத்தில் தமது எல்லைப்புறத்தில் இருந்து கொண்டு தனி நாட்டுக் கோருவது ஆபத்து என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கருதுகிறார். குர்திஸ் இனப்போராளிகளை அழித்தெழித்தற்கான சமயமாக தற்போதைய சூழலை துருக்கிய அரசு கருதுகிறது. அமெரிக்காவின் வெளியேற்றம் குர்திஸ்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்பானதாக அமைந்துள்ளது. 

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஸ்தான் படையினர் மீது துருக்கி தொடர்ச்சியான தாக்குதலை நடாத்தி வருகிறது. தற்போது வரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் நான்கு இலட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். துருக்கியின் இச்செயலை ஐரோப்பிய நாடுகள் உட்பட மேற்குலக நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் அமெரிக்கா திட்டமிட்டு நகர்ந்து ஒரு போரைத் தொடக்கிவிட்டு, தற்போது அதனை எதிர்ப்பதாக கூறுகின்றது.  துருக்கி தொடர்பான  அமெரிக்காவினதும் அதன் ஜனாதிபதியினதும் வார்த்தையில் எந்தவிதமான உண்மையும் கிடையாது.  

அமெரிக்காவுக்கு மேற்காசியாவில் ஒரு போர் தேவை என்பதையே கடந்த பல ஆண்டுகளாக அது முயன்றுவருகிறது என்பதையும் இப்பகுதியில் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டது. அதன் ஒரு வடிவமே துருக்கி குருத்திஸ்தான் மோதல். ஆனால் அதனை சிரியா – துருக்கி போராக மாற்றுவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. அதனை ரஷ்யா தடுத்து வருகிறது.  

அதேநேரம் குர்திஸ்தான் போராளிகளுக்கும் சிரிய அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு அதிக மாற்றங்களை குர்திஸ்தான் போராட்டத்தில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதாவது தாக்குதல் தொடர்ச்சியாக நிகழும் நிலையில், போராட்டத்தையும் மக்களையும் தற்காத்துக் கொள்வதற்காக சிரியா நெருக்கமான உறவை கொள்ள முயல்வதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதன்படி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மன்பீஜ் மற்றும் கோபேன் ஆகிய நகரங்களை சிரியாவிடம் ஒப்படைக்க குர்திஸ் போராளிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கு பிரதிபலனாக எல்லைப் படைகளை அனுப்பி, குர்திஸ்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி இராணுவத்தை எதிர்கொள்ள சிரியா அரசு ஒப்புக் கொண்டதாக குர்திஸ்தானியர் கூறுகின்றனர். ஆனால் இதில் எதனையும் சிரியா அரசு வெளிப்படுத்தியதாக தகவல் இதுவரை இல்லை என்றே கூறலாம்.  

சிரியா அரச படைகளுடன் சிரிய ஜனநாயக படைகள் குர்திஸ் பகுதிக்குள் அனுமதிப்பதன் மூலம் துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ளலாம் என குர்திஸ் படைகள் நம்புகின்றன. அதனால் துருக்கியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சில பகுதிகளை விடுவிக்கவும் முடியும் என குர்த்திஸ்தான் போராளிகள் நம்புகின்றனர்.  குறிப்பாக துருக்கி ஏற்கனவே கைப்பற்றிய ஆஃப்ரின் போன்ற நகரங்களை விடுவிக்கவும் இது வழிவகுக்கும் என சிரிய ஜனநாயகப் படை கூறியுள்ளது. இவ்வகை உடன்பாடு குர்திஸ்தானியருக்கு முக்கிய மாற்றம் ஆகும். அதுவும் குறிப்பாக அமெரிக்காவின் உதவியை இழந்த பிறகு நடக்கும் முக்கிய மாற்றமாகும்.  

குர்திஸ்தான் மீதான போர் நடவடிக்கைகளை துருக்கி முன்னெடுத்தால் அதன் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். துருக்கிய தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மிக மோசமான வார்த்தைகளை பாதித்துள்ளார் ட்ரம்ப். ஆனால் இந்த எச்சரிக்கையை பதிலளிக்கும் துருக்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டோம். குர்திஸ்தான் போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என துருக்கிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெவுல்ட் காவ்சகச்லோ தெரிவித்தார். துருக்கி மீதான 100 பில்லியன் ​ெடாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தினை இரத்து செய்ததுடன் அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு துருக்கிய பிரச்சினையை தேசிய அவசர நிலையாக பிரகடனப்படுத்துமாறு ட்ரம்ப் கேட்டுள்ளார்.  

இதே நேரம் சிரியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதுவர் அலெக்ஸாண்டர் லாவ்ரெண்ட்யேஃப் துருக்கி மேற்கொண்டுள்ள இந்த தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். முந்தைய ஒப்பந்தங்களின்படி துருக்கி, சிரியாவிற்குள் ஐந்து முதல் பத்துக் கிலோ மீற்றர் எல்லைக்குள் செல்லலாம். ஆனால் துருக்கி தற்போது சுமார் முப்பது கிலோ மீற்றர் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாக கூறுகிறது. சிரியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த துருக்கிக்கு உரிமையில்லை.  போரினை தவிர்க்க துருக்கியோடு சிரியா தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார். ஆனால் அதனை நேட்டோ தரப்பு ஒப்புக் கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது.  

எனவே, துருக்கியின் போர் வியூகம் அமெரிக்காவின் விலகல் என்பனவற்றிலிருந்து குர்திஸ் போராட்டத்தை தற்காத்துக் கொள்ளவதற்கான உத்தியை அப்போராட்ட அமைப்பு தொடக்கியுள்ளது.   

ஒரு புதிய பாதைக்கான அணுகுமுறையாகும். பல நூற்றாண்டுகளாக கைக்கொண்ட அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தினை குர்திஸ் மக்களுக்கு உருவாக்கப் போகிறது. அத்தகைய தாக்கம் சாதகமானதாகவோ பாதகமானதாகவோ அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் குர்திஸ் விடுதலைப் போராட்டத்தின் புதிய திருப்பத்தை சிரிய- குர்திஸ் உறவு ஏற்படுத்த போகிறது. இந்த உறவுக்கு பின்னால் மீண்டும் ஒரு வல்லரசு மறைந்திருக்குமானால் அது ஆபத்தானதாக அமையும் என்று குர்திஸ் போராளிகள் கருதுகின்றனர். குறிப்பாக ரஷ்ய – சிரியா நெருக்கமே அத்தகைய அச்சத்திற்கு காரணமாக கொள்ளப்படுகிறது. 

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments