புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள், வாழ்க்கையில் ஒளியேற்றிவைப்பன நூல்களே. புத்தகங்கள் மக்களனைவரதும் பிரச்சினைகளைத் துரிதகதியில் தீர்ப்பதற்கு உதவுவன. அறிவார்ந்த நூல்களில் அறிஞர்களதும் ஆழ்ந்த சிந்தனையாளர்களினதும் அனுபூதிமான்களும் ஆத்மாக்களே சொல்லாகவும் வசனங்களாகவும் நம்முடன் பேசுகின்றன. எனவே தான் இத்தகைய அரிய கருவூலங்களைக் கொண்ட நூல்களைச் சஞ்சிகைகளைப் பத்திரிகைகளை வார, மாத, காலாண்டு அரையாண்டு இதழ்களைப் பெண்களாகிய நாம் எவ்வாறு நேர்கொள்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிச் சிறிது சிந்தித்து அலசிப் பார்ப்பது சுவையான அனுபவமெனக் கருதுகிறேன்.
இலங்கையிலே கல்விகற்ற பெண்கள் 90% என அறிக்கைகள் பேசுகின்றன. கற்றவர்கள் யாவரும் அநேகமாக ஏதோ ஒரு வகையான நிலையில் தொழில் பார்ப்பதோடு ஓரளவு வருவயைப் பெற்று வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் தொழில் பார்க்கும் பெண்கள் இரட்டைச் சுமையால் பாரம் தாங்காது உரத்துப் பேசுவதையும் நாமறிவோம். ஆனாலும் வீட்டுவேலை, தொழில் என இருவேலைகளையும் பொறுப்பாக ஏற்றுக் கொண்டும் வாசிப்பதா எனக் கேட்டு நெற்றியைச் சுருக்கி முறைப்பதையும் என்னால் உணர முடிகிறது. அதேவேளை சேரனைப் படித்தாயா, அனாரைப் படித்தாயா, எஸ். ராமகிருஷ்ணன் தமிழ்நதி, ராஜம்கிருஷ்ணன், சுந்தரராமசாமி, ஜெயமோகனை வாசித்தாயா என ஆர்ப்பாட்டம் போடும் கூட்டம் ஒரு பக்கம். புத்தகங்களா அவற்றைப் புரட்ட எங்க நேரம்? இல்லை இவற்றைப் படித்துத் தான் என்னத்தைப் புரட்டப்போறோம் என அங்கலாய்போரும் ஒரு புறம் காலை மாலை சதா புத்தகத்துடனேயே காலத்தைப் போக்குவோரையும் நாம் தவறவிட்டதில்லை. இப்படியாக நூல்களைப் பயன்படுத்துவோர் இருந்தாலும் அவர்களின் தொகை கணிசமான அளவு குறைவதென்பதே கண்கூடு.
சிலர் நாம் கல்வியில் உச்சநிலை எட்டி விட்டோம். இன்னுமின்னும் படிக்க வேண்டிய தேவையில்லையென்ற தப்பபிப்பிராயத்தோடும் உள்ளனர். இது வெறும் தவறாகும். கல்வியில் உயர்ந்தோராயினும் அவர்கள் சித்தியெய்திய நிலை அந்தத்துறையில் அவர்களுக்கு ஆற்றலுண்டு என்பதும் அதற்கு மிகுந்த தகுதியானவர்கள் இவர்கள் என்பதையும் முத்திரையிட்டுக் காட்டுவதே பரீட்சைப் பெறுபேறுகளின் அத்தாட்சிப் பத்திரங்கள். வைத்தியமோ பொறியியலோ, சட்டமோ எத்துறையானாலும் அவர்கள் அதிலே காலடி வைக்கத் தகுதியைப் பெற்றுவிட்டனராயினும் அனுபவம், செயற்பாடு என்பன மேற்கொண்டும் சில நுட்பமாக ஆற்றலைப் பெற்றுத் தரும். இவற்றையெல்லாம் கூட நாம் பல நூல்களை அவ்வத்துறையில் பொதிந்து கிடக்கும் நெளிவுசுளிவுகளை அல்லது நாம் முன்பு கற்கத்தவறியவற்றை வாசிப்புகள் மூலம் விருத்தியடையலாம். அல்லாமலும் அடிப்படைச் சிந்தனையிலிருந்து புதிய புதிய எண்ணங்கள் கிளர்ந்தெழுவதுபோல அனுபவமும் ஆற்றலும் மிக்கோர் படைத்த நூல்களை நாம் வாசிப்பதனால் நமக்கும் புதிய சிந்தனைகள் கிளர்ந்தெழ வாய்ப்புக்கள் ஏற்படும். காரணம் 'புத்தகமென்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல. அது மனிதவாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லையற்ற அனுபவங்களை நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்பிற்கான முதற்காரணம். அது என்றும் மாறாதது.' என்ற கூற்றை ஒரு ஆங்கிலேய அறிஞர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
பெண்களைப் பொறுத்தளவில் அவர்கள் மனம் வைத்தால் நன்றாக நிர்வாகத் திறமை மிக்க பெண்களாகவும் இனம் காட்டிக் கொள்ள முடியும். அதேவேளை மனம் அடங்கி ஓரிடத்தில் அமர்ந்திருந்து நீண்டநேரம் புத்தகம் படிக்கவும் முடியும். இளம் பெண்கள் பொதுவாகக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகள் பாடங்களில் ஆண்களை விட அதிகமாகச் சித்தியடைவதன் இரகசியம் இது தான். ஆனால் பாடநூல்களை மாத்திரம் உருப்போடல் மேலதிகமான வாசிப்பு என்று கருதிவிட முடியாது.
இலங்கையில் கல்வியியலாளர்கள், பொதுவாகப் பள்ளி மாணவர்கள் அனைவருமே வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அரசு பாடசாலைகளில் கீழ் வகுப்புகள தொடக்கம் 13ம் ஆண்டு வரையுள்ள மாணவரின் வாசிப்பை ஊக்குவிக்கப் பாடாசலைகளில் நூல் நிலையங்களை அமைத்துள்ளதோடு, வருடாவருடம் வெளிவரும் நல்ல நூல்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பெருந்தொகையான பணத்தையும் கொடுத்து வருகின்றது. எனவே தற்போது சகல பாடசாலைகளிலும் மாணவர் நலம் கருதி நூல் நிலையங்களும், அதற்கான பாடநேரத்தை ஒதுக்கியும் அவர்களுக்கேற்ற நூல்களையும் வருவித்தும் வாசிப்பினை ஊக்குவிக்கின்றது.
இத்தகைய பழக்கத்தை தொடர்ந்து பெண்கள் வாசிப்பதற்கான தூண்டுதல்களை மேற்கொள்ளப் பல நடைமுறைச் சிக்கல்கள் தடையாக அமைந்துள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாம் மனங்கொள்ள வேண்டும். ஒன்று குடும்பம் என்ற அமைப்பின் முக்கிய பங்காளியாகப் பரம்பரை பரம்பரையாகப் பெண்ணே பொறுப்பேற்றுள்ளமையால் குழந்தைகள், கணவன், உறவினர், கொண்டாட்டங்கள், கலாசார சம்பிரதாயங்கள் என ஏராளமான அவளது நேரம் கொள்ளையடிக்கப்படுகின்றது. இது தவிர அவள் மனமொருமித்து வாசிக்கக் கூடிய சூழ்நிலை, அவள் விருப்பிற்கேற்ற வகையிலான நூல்கள், அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தூரத்திலுள்ள நூல் நிலையங்கள், போக்குவரத்து போன்ற வதிகளென்பன அருகியே உள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனினும் எத்தகைய நெருக்கடியினுள்ளும் மனம் கொண்டால் இடமுண்டு என்பதற்கிணங்க சில பெண்கள் ஆர்வம் மிக்கோராய் வெகு துணிச்சலுடன் தமது வாசிப்புப் பயணத்தை வெகு சிறப்பாக மேற்கொள்வதையும் நாம் இனம் காண முடியும். சிலர் நூல்களைத் தாம் வாசிப்பதன் மூலம் தாம் பெறும் மேலதிக அறிவைவிட, தமது அறியாமையின் ஆழத்தை தௌிவுறத் தேர்ந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிடுவர். பெண்ணுக்கு சமத்துவம் வேண்டுமென என்னதான் நாம் சத்தம் போட்டாலும், பழைய நிலையிலிருந்து கல்வியால் நாம் ஓரளவு உயர்ந்து விட்டோம் எனக் கருதினாலும் பொதுவாக சமூகத்தில் இடம்பெறும் அறிவார்ந்த விடயங்களிலெல்லாம் கூடச் சமத்துவமான நிலையில் பெண்கள் பங்கேற்கிறார்களோவென்றால், இலைமறை காயாக அங்கேயும் இங்கேயுமென ஒரு சில பெண்கள் முகம் காட்டுகிறார்களே தவிர ஆண்களுக்குச் சமமான அளவில் பெண்களும் பங்கு கொள்கின்றார்களோ? என்றால் அது கேள்வியடையாளாம் தான். ஒரு சில தமிழ் இலக்கிய விழாக்கள், விவாதங்கள், கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் விமர்சன அரங்குகள் இவற்றிலெல்லாம் கூடப் பார்வையாளராகப் பெண்களின் தொகை சமமாக இருப்பதும், ஒரு சிலவற்றில் அறவே இல்லாமலிருப்பதும் பங்காளராகப் பெண்கள் இல்லாமலிருப்பதுமே விந்தையாகப்படுகிறது. மக்களோடு இணைந்திருக்கும் கல்விகற்ற பெண்கள், இலக்கியம் படைப்பவர், சாமானிய மக்களை விட்டு விலகி நிற்கும் போது அங்கு கலை மலர்வதற்கில்லை என்பதற்கிணங்க, பெண்கள் மக்களோடு நெருங்கி பழகும் தன்மையுடையவர்களாக இவர்கள் படைப்பாளிகளாயின் அவை யதார்த்தமும் சத்தியமும் நிறைந்ததாக இருக்கும். கல்வியோடு மிக நெருக்கமான ஆசிரியத் தொழிலிலே 52% பெண்களும் 48% ஆண்களும் கடமையாற்றுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அப்படியிருந்தும் கல்வியோடு இத்தகைய அரங்குகளில் பெண்கள் தம் முத்திரையைப் பதிக்காதிருப்பது பாரதூரமான தவறென்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாமா?
பரீட்சைகளில் நன்கு சித்தியெய்தித் தமது தொழிலைக் கண்ணியத்தோடு காப்பாற்றிக் கொள்ளும் இவர்கள் அன்றோடு தாம் படித்த நூல்களை வைத்துவிட்டு மேற்கொண்டு தேடலின்றியிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 'தமிழாழ் ஒன்றிணைவோம்.' என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் பேசிய தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.ம. ராசேந்திரன் "ஒரு புத்தகத்தை நீங்கள் படிக்கிற போது அந்தப் புத்தகத்தோடு நீங்கள் உரையாடுகிறீர்கள். அந்தப் புத்தகத்தின் ஆசிரியரோடு உரையாடுகிறீர்கள். ஆங்காங்கே உங்களுக்குக் கேள்விகள் எழுகின்றன. அதற்குப் பதிலைத் தேடுகிறீர்கள். வாசிப்பது சமூகத்தில் நிகழ்கிற நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்ற அதில் உங்களைப் பங்கேற்க வைக்கும். அந்தப் பழக்கத்தை நாம் கைகொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டது போல உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் மாணவருக்கும் கூட நீங்கள் புத்தி கூறுவீர்கள். அவர்களுக்குக் கூறும் இதே விடயத்தை நீங்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை என்பது தான் கட்டுரையாளர் பெண்களிடம் கேட்கும் கேள்வி.
"ஆ பெண்களா? அவர்கள் நன்கு படித்திருந்தாலும் நூலியல், உலகியல் அறிவு போதியதாக அவர்களுக்கில்லையோ!" எனும் கூற்றை மாற்றியமைக்கும் வகையில் வாசிப்பு மூலம் பெண்கள் தம் அறிவைப் பெருக்க வேண்டும். தாம் பெற்றுள்ள அறிவை விரிவடையச் செய்ய வேண்டும். காலதாமதமாகியே பெண் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையால் இத்தகைய பின்னடைவு அதிகமான பெண்களுக்கு அனுபவமற்ற பாதிப்பை ஏற்படுத்தினாலும் கணிசமானளவு பெண்கள் தத்தம் துறைகளில் தமது முத்திரையை பதித்துள்ளனர் என்ற பாராட்டையும் நாம் தெரிவிக்கும் இவ்வேளையிலே, மென்மேலும் பெண்கள் தமது அறிவையும் ஆற்றலையும் தமது சுயமுயற்சியினால் வளர்த்திட அறிவார்ந்த சிறந்த நூல்களைத் தமது கரங்களில் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். வாசிப்பே சுவாசமாக நூல்களையே தோழமையாகக் கொள்ளும் அனைவர் வாழக்ைகயுமே ஒளி வீசி மிளிரும் என்பதில் இரு கருத்துக்கு இடமேயில்லை.
பெண்கள் ஓய்வு நேரத்திலே தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் வரும் தேவையற்ற சீரியல்களோடு மாத்திரம் நேரத்தைச் செலவழிக்காது அறிவை மேம்படுத்த அறிவார்ந்த நல் நூல்களோடு தம்மை இறுக்கமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டும்.
பத்மா சோமகாந்தன்