பெண்களுக்கான சுகாதாரத் துவாய் கேலி கிண்டலுக்குரியது அல்ல | தினகரன் வாரமஞ்சரி

பெண்களுக்கான சுகாதாரத் துவாய் கேலி கிண்டலுக்குரியது அல்ல

தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பெண்களுக்கு மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வேன் என்ற ஒரு உறுதிமொழியை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேசமதாச வழங்க, இலங்கை தேர்தல் அரசியல் களத்தில் அது பரபரவென பற்றிக் கொண்டது. எதிர்த்தரப்பினர் இதை வைத்து எள்ளி நகையாடவும் தவறவில்லை. இந்த உறுதி மொழியைக் கேட்ட பலருக்கு கொடுப்புக்கள் நகைப்பு!  

ஆனால், பெண் என்ற வகையில் எமக்கு என்ன புரியவில்லை என்றால், பெண்களுக்கான ‘பேட்’களை வழங்குவேன் என ஒரு வேட்பாளர் உறுதிமொழி வழங்குவதில் என்ன நகைப்பு இருக்கிறது என்பதுதான். இதில் ஆண்களின் இறுமாப்பையும், பெண்களை இன்னமும் கூட புரிந்து கொள்ள விரும்பாத ஆணவத்தையும் தான் காண முடிகிறது. மாதவிடாய் என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிகழ்வதல்ல. அது சாத்தானின் வஞ்சகமும் அல்ல. சகல பெண்களுக்கும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. இந்த உலகை தொடர்ந்து இயங்கச் செய்யும், மனித சமுதாயத்தை தொடர்ந்து உலகில் நிலை பெறச் செய்யும் ஒருமுக்கியமான விஷயமாகவே மாதவிடாய் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அது ஒன்றும் நகைச்சுவையல்ல.  

வேட்பாளர் சஜித் பிரேமதாச இவ்வாறான ஒரு உறுதிமொழியை வழங்குகிறார் என்றால் அது அவரது நெருக்கமான சமூக பார்வையை, சமூக சிக்கல்களை நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் தன்மையை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே நாம் கருதவேண்டும். பேசப்படாத ஒரு பொருளை அவர் பேசியிருக்கிறார். கிராம, தோட்டப்புறங்களில், ஏழைக்குடும்பங்களில் மாதவிடாய் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டதற்கு நாம் அவரை வாழ்த்த வேண்டும். உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள் தன் பேசாப் பொருள் பற்றி பேசுவார்கள்.  

மாதவிடாய் துவாய்கள் தற்போது விதவிதமாகக் கிடைக்கின்றன. இவை வருவதற்கு முன்னர் பருத்தி துணி (பழந்துணியும் கூட) பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கும் கிராமங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் பருத்தித்துணி உபயோகத்தில் உள்ளது. துவாய் வாங்குவதற்கு வசதியில்லா ஏழைப் பெண்கள் துணியைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.  

இவர்கள் வாழும் சூழல்; வாழ்க்கை முறை உணவுப் பழக்கங்கள் கலாச்சார கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இவ்வாறான பல்வேறுப்பட்ட காரணங்களால் பெண்களுடைய நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அவர்களின் சுகாதாரம் என்பதும் கேள்விக் குறியான நிலையிலேயே காணப்படுகிறது. வேலைசெய்யும் இடங்களில் ஓய்வறைகள் இல்லாததினால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பெறும் சவால்களை எதிர்கொள்கின்றார்கள். இதனால்      பெருந்தோட்ட பெண்கள் சரியான சுகாதார சேவைகளை பெறும் உரிமைகளை இழந்துள்ளனர்.  

மாதவிடாயின் போது பெரும்பாலான தோட்டத்தில் வேலைசெய்யும் பெண்கள் துணியையே பயன்படுத்துகிறார்கள் இதனால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியதாகிறது.   ஒருவிதமான பய உணர்வு மனஉளைச்சல் கங்காணியின் கெடுபிடியினால் இந்த நாட்களில் கூட மெதுவாக பணி செய்யாமல் வேகவேகமாக வேலை செய்து முடிக்க வேண்டியிருக்கிறது.  

இவர்கள் வீடுகளிலும் தங்களுடைய பிள்ளைகளிடம் துணியையே பயன்படுத்த வழிகாட்டுகிறார்கள் ஓரே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது கருப்பை அழற்சி, புண்கள் கட்டிகள் அரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.  

அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டப் பகுதியில் மாணவிகளில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மார்களை போலவே தூய்மையில்லாத துணிகளை பயன்படுத்துகிகறார்கள். சில பெருந்தோட்டப் பாடசாலைககளில் முறையான மலசல கூடவசதி இல்லாமையால் மாதவிடாய் காலத்தில் அனேகமாக பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை. அனால் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் இதுபற்றி பகிரங்கமாக பேசியது கிடையாது.    இந்த பின்னணியில் தனக்கு எதிர்ப்பு வரும், தான் கேலிக்குள்ளாக்கப்படுவேன் என்பதை தெரிந்து கொண்டு துணிந்து பெண்களுக்கு அதிலும்

வசதி குறைந்த பெண்களுக்கு பயன்படுத்தக்கூடிய சுகாதர துவாய்களை (பேட்களை) வழங்க முன்வந்திருப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். வருடங்களுக்கு முன்னர் பெண்கள் சுகாதார மேம்பாடு குறித்து யுனிசெப் நிறுவனம் சர்வதேச ரிதியில் வெளியிட்ட அறிக்கையில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற முறைகளை கையாள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அது பெண்களை மட்டுமல்லாது அவர்கள் கருவில் வளர்க்கூடிய குழந்தைகளுக்கும் கூட பாதிப்பபை ஏற்படுத்தும் என்று கூறியிருந்ததுடன் அரசாங்கங்கள் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.  

இந்த நவீன யுகத்தில் பெருந்தோட்ட பெண்களுக்கு அல்லது வறுமையில் வாடும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதார துவாய்களை பயன்படுத்த யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அது அவர்களுக்கு தெரியாத விடயம் அல்லவே என்று சிலர் சொல்லலாம். உண்மைதான் அது அவர்களுக்கு தெரியாத விடயம் அல்ல. ஆனால் தங்களுடைய வருமானத்தில் அதற்கான செலவை ஈடுசெய்ய முடியாததாலேயே அவர்கள் அவ்வாறு பாதுகாப்பில்லாத முறைகளை கையாள்கிறார்கள் என்பதை இந்த ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால் பெண்களின் பயஉணர்வை போக்கி நம்பிக்கையை ஏற்படுத்தும். எந்த வேலையானாலும் முன்வந்து அதை ஆற்றக்கூடிய முன்வருதல் எவ்வளவு தூரம் பயணம்செய்வதாக இருந்தாலும் துணிந்துசெல்ல கூடியபக்குவம் ஆர்வம் ஏற்படும்.பெண்களின் தேவைகளை உணர்ந்து அவர்களை மதித்து இவ்வாறான திட்டங்களை முன்மொழிந்தது பாராட்டத்தக்க விடயமாகும  

இதே விடயத்தினை பாடசாலை மாணவிகளுக்கும் அறிமுகப்படுத்தும் போதும் பயன்படுத்தும் போதும் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும்.    நகர்ப் புறங்களில் வாழ்கின்ற பெண்கள் சுகாதார துவாய்களை பயன்படுத்துகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவற்றை பயன்படுத்துவதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் இவர்கள் பணியாற்றும் இடங்களிலும் வீடுகளிலும் சூழல் இருக்கின்றது.  

பெருந்தோட்ட பெண்களும் பாடசாலை சிறுமிகளும் இவற்றை பயன்படுத்தவும் மாற்றிக் கொள்ளவுமான சூழல் இல்லை. பாடசாலையில் தனித்துவமான அறை கிடையாது நீர் வசதிகள் இல்லை ஓய்வு அறைகளும் (பாடசாலையிலும் வேலைசெய்யும் தளங்களிலும்) இல்லை. பழைய முறையை மாற்றக்கூடிய சூழ்நிலை இன்னும் இல்லை.  

வேலைதளங்கலுளும் பாடசாலையிலும் இதற்கென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள் இல்லை இதனால் பெண்பிள்ளைகள் மாதவிடாய் நின்றுவிட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள் ஆகவே இதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் FEAMS EVA பாவனையை எடுத்துச் சொல்ல கூடிய ஆசிரியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியுள்ளது.  

இந்த விடயத்தை எதிர்பவர்கள் , கேலி செய்பவர்களை என்னவென்று சொல்வது? நவீனமாக சிந்திக்கத் தெரியாத, பெண்கள் உரிமைகள் அவர்கள் மேம்பாடு குறித்து அக்கறை இல்லாதவாகள், பிற்போக்குத் தனம் கொண்டவர்கள் என்றே இவர்களை வர்ணிக்க வேண்டியிருக்கிறது.  

எனவே ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொண்டு வந்துள்ள பெண்கள் அனைவருக்கும் நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட சுகாதார துவாய்களை வழங்கும் திட்டம் காலத்திறகு உகந்ததும், ஆக்கபூர்வமனாதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு திட்டமாகும். இதனால் பெண்கள் சுகாதாரம் அதிலும் வசதிகுறைந்த குடும்பங்களில் உள்ள பெண்களின் சுகாதாரம் மேம்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்களின் சுகாதாரம் மேம்படும் என்பது பிள்ளைகளினதும் முழு சமூகத்தினதும் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.  

பெருந்தோட்ட மக்கள் பொதுவாக சம்பளம் வாங்கிய பின் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது பெரும்பாலும் ஆண்களின் பொறுப்பாகவே உள்ளது. வீட்டுசெலவில் சுகாதார துவாய்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய பிள்ளைக்கோ மனைவிக்கோ வாங்கி கொடுப்பதில்லை அது பற்றி சிந்தித்தும் பார்ப்பதில்லை.

பெண்களை எடுத்துக் கொண்டால் பார்மஸிகளுக்குச் சென்று இதைப் பெயர் சொல்லி கேட்டு வாங்குவதற்கு தயங்குகிறார்கள். மலையகப் பகுதிகளில் பேட்விற்கும் கடைகளில் பெண் விற்பனையாளர்கள் அரிது.

ஆண்களுக்கு புரியவில்லை; பெண்களுக்கு தயக்கம் என்றால் என்ன செய்வது? இந்த இயற்கை உபாதை தொடர்பாக ஒரு வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது. அரசாங்கமே இத் துவாய்களை விநியோகித்தால் மக்களுக்கு இயல்பாகவே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விடும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

வி. புஷ்பகுமாரி – வி. ஷாந்தி
போகவந்தலாவை

Comments