இலங்கையில் தமிழரின் அரசியலானது போர்காலத் தொடர்ச்சியாகவே நீண்டு கொண்டிருக்கிறது. போர் மட்டும் நடக்கவில்லையே தவிர, அரசியற் சிந்தனையும் அணுகுமுறைகளும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் போர்க்கால அரசியலின் நீட்சியாகவே உள்ளன. இதனால்தான் இன்னும் அரச ஆதரவு, – அரச எதிர்ப்பு, துரோகி – தியாகி என்று கறுப்பு – வெள்ளையாக எதையும் பார்க்கும் நிலை நீடிக்கிறது. புனிதப்படுத்தல்களும் தீவிரப் பிரகடனங்களுமாக நடக்கின்ற அரசியற் கூத்துகள் வெற்றிக்கான பாதையைப்பற்றியும் விளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதாகத் தெரியவில்லை என்பதால்தான் பிளவுண்ட நிலையில் – விரோதப்போக்குடன் தமிழ் அரசியல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்களோ இதை விரும்பவேயில்லை. அவர்கள் கட்சிகளுக்கிடையிலும் தலைமைகளுக்கிடையிலும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறைந்த பட்சம் சனங்களைக் குறித்து பொது உடன்பாடுகளை அவசியமான தருணங்களிலேனும் காண வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், இதையெல்லாம் எந்தக் கட்சியும் பின்பற்றுவதாகவோ புரிந்து கொண்டதாகவே இல்லை. சரியாகச் சொன்னால் சனங்களின் தேவை, விருப்பம், நலன் சார்ந்தெல்லாம் சிந்திப்பதற்குப் பதிலாக கட்சிகள் தமது இருப்பு, நலன் சார்ந்தே அதிகமாகச் சிந்திக்கின்றன. இதனால்தான் எத்தகைய மாற்றங்களும் நிகழமுடியாமலிருக்கிறது.
கட்சிகள் மட்டுமல்ல, அரசியல் ஆய்வாளர்கள், அபிப்பிராய உருவாக்கிகள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோரும் போருக்குப் பிந்திய அரசியலைப் பற்றிச் சிந்திக்கும் அடையாளங்கள் எதுவுமே இல்லை.
போருக்குப் பிந்திய அரசியலானது கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது. நிலைமாறு காலகட்ட அரசியற் செயற்பாடுகளிலிருந்து சமாதானம், தீர்வு என்ற வகையில் முன்னகர வேண்டியது.
இந்த அடிப்படையில்தான் போருக்குப் பிந்திய சூழலானது “போருக்குப்பிந்திய அரசியலை” (Post war politics) முன்னெடுக்க வேண்டும் என்று கோருகிறது. இதனை முன்னெடுக்கக் கூடிய நிலையில் இன்று எந்தத்தமிழ்க்கட்சியும் இல்லை.
போருக்குப் பிந்திய அரசியல் எப்படி இருக்க வேண்டும்? அதை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைக் குறித்த புரிதலும் அக்கறையும் எந்தக் கட்சிகளிடத்திலும் இல்லை. இது தமிழ்க்கட்சிகளிடத்தில் மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் தமிழ்க்கட்சிகளிடத்திலும் கூட இல்லை. இதனால்தான் ஏட்டிக்குப் போட்டியாக எதிரெதிர் முகத்தோடு இவை தமது அரசியலை முன்னெடுக்கின்றன. இனவாதம் அப்படியே கூர்மைப்படுத்தப்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது தமிழர் அரசியல். பழைய உள்ளடக்கம், பழைய சிந்தனைப் பாரத்தோடு முன்னெடுக்கப்படும் அரசியல் எந்த வித மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரமுடியாதிருக்கிறது. அதாவது, அதே பழைய பாணியிலான எதிரும் புதிரும் விலக்கலும் சந்தேகமும் நிறைந்த அரசியல் இது என்று தொடருகிறது. இதனால்தான் தமிழ்த் தரப்பினால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
காலம் கடந்த அரசியல், காலப்பொருத்தமற்ற அரசியல் என்பது கூழ்முட்டைக்குச் சமனானது.
ஆகவே புலி எதிர்ப்பு – புலி ஆதரவு, அரச எதிர்ப்பு – அரச ஆதரவு என்ற பழைய சூத்திரங்களுக்குள்ளிருந்து விடுபட்டு புதியதொரு அரசியற் சிந்தனையையும் அரசியற் பண்பாட்டையும் நாம் உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குப் பல வகையிலும் முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து உரையாடல்களை நடத்த வேண்டும். இல்லையெனில் புதிய தரப்புகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். இதுவே விடுதலைக்கான வழி. இதுவே தேவையான அரசியல் வழிமுறை.
இந்த நோக்கத்தோடு 2009 க்குப் பிறகு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றில் எந்தவொரு முயற்சியும் இதுவரை பயனுடையதா அமையவில்லை. அதை இங்கே பொதுத்தளத்தில் பேசுவதன் மூலமாக எதிர்காலத்தில் இதை எப்படி மாற்றிப் புதியதாக – பயனுடையதாக முன்னெடுக்கலாம் என்ற அறிதலைப் பெறமுடியும் என நம்பப்படுகிறது.
கீழே சுட்டப்படும் முயற்சிகள் பற்றிய விவரங்கள் அந்த முயற்சிகளோடு சம்மந்தப்பட்டவர்களின் அனுபவத் தொகுப்பிலிருந்து கண்டறியப்பட்டவை. சில சுய அனுபவத் தொகுப்புகள். இவற்றைக் குறித்து உரையாடின் சிறப்பு.
I
2009 இல் யுத்தத்திற்குப் பிறகான அகதி முகாம் (உண்மையில் இது அகதிகளின் முகாமல்ல, தடுப்பு முகாமே) வாழ்க்கை முடிந்து வெளியே வந்தபோது (2009 டிசம்பரில்) அரசிய(லி)ல் மாற்றங்களை விரும்பும் நண்பர்கள் சிலர் இணைந்து ஒரு முயற்சியில் ஈடுபட்டோம். அது நேரடியாக அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சியல்ல. பதிலாக அப்பொழுது தமிழ்ச் சூழலில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளையும் தலைவர்களையும் முதற்கட்டமாக ஒரு உரையாடற் பரப்புக்குக் கொண்டு வருதல், போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுக்கும் விதம் குறித்துச் சிந்தித்தல், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளுதல், அதற்கான ஆய்வுகளைச் செய்தல், இதன் வழியாக உருவாகும் சிந்தனைப்போக்கினை மையமாக வைத்து புதிய அரசியற் சாத்தியப்பாடுகளைக் குறித்த திட்டமிடலை மேற்கொள்ளுதல், இதன் அடுத்த கட்டமாக தமிழ் மொழியில் செயற்படும் சமூகங்களுடன் உரையாடல்களைத் தொடங்குதல், போரிலே பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வை ஒழுங்கமைத்தல், அழிவுற்ற பிரதேசங்களை மீளுருவாக்கம் செய்யும் முறைமை, போராளிகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை, படையினரின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டெடுத்தல், அரசியற் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களைக் கையாளுதல், இவையெல்லாவற்றுக்குமான ஒரு மென்னழுத்தக் குழுவை உருவாக்குதல் என்றவாறாக எமது முயற்சிகள் அமைய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
இதற்கென ஒரு செயற்பாட்டு அமைப்பை உருவாக்குவது அவசியம் என்ற வகையில் “மக்கள் ஜனநாயக அமையம்” என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதலாவது கூட்டம் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் தவரத்தினத்தின் தலைமையில் நடந்தது. அதில் இந்த அமைப்பின் நோக்கத்தைக் குறித்து ஒரு ஊடகவியலாளர் சந்திப்பும் நடந்தது. அதிலே இந்த அமைப்பின் நோக்கம் என்ன? இது எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படவுள்ளது? இந்த அமைப்பில் உள்ளவர்கள் யார்? என்ற விவரமெல்லாம் வெளிப்படுத்தப்பட்டன. ஏனென்றால், அன்று எதையும் சந்தேகிக்கும் ஒரு நிலை பொதுவாகக் காணப்பட்டது. அதைப்போல எவரையும் சந்தேகிக்கின்ற நிலையும். அவ்வாறு யாரும் யாரையும் சந்தேகிப்பதில் அன்று எந்தத் தவறுமிருக்கவில்லை. அந்தளவுக்கு அப்பொழுது எல்லாவற்றின் மீதும் எல்லோரின் மீதும் அரசாங்கத்தின் கண்காணிப்பு மீந்திருந்தது.
எனவேதான் இந்த வெளிப்படைத்தன்மை அவசியப்பட்டது. இந்த வெளிப்படைத் தன்மையானது பலருடைய குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும். அதோடு வெளிப்படைத் தன்மையின் மூலமே ஓரளவு பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.
போர் முடிவுற்ற பிறகான அரசியல், சமூக, பொருளாதார முன்னெடுப்புகளை எப்படித் தொடங்குவது? என்பதில் அப்பொழுது எல்லா அரசியற் கட்சிகளுக்கும் நிறையத் தடுமாற்றங்களிருந்தன. யுத்தம் நடக்கும் வரையிலும் புலிகளின் அரசியலே மேலோங்கியிருந்தது. மறுபக்கத்தில் அரசாங்கத்தின் அரசியல். இந்த இரண்டு அரசியல் போக்குகளுக்கும் அப்பால் புதியதொரு அரசியலை, போருக்குப் பிந்திய சூழலில் (Post War situation) முன்னெடுக்கக்கூடிய நிலையில் எந்தவொரு அரசியற் கட்சியுமிருக்கவில்லை.
அதாவது போருக்குப் பிந்திய அரசியலை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவான பார்வை எந்தக் கட்சிக்குமிருக்கவில்லை. ஏன் இன்றுகூட இதைக்குறித்து எந்தக் கட்சிக்கும் சரியான பார்வையுமில்லை. சரியான திட்டங்களுமில்லை.
எனவேதான் இந்தச் சூழலில் நம்மிடையே உள்ள அரசியற் சக்திகளிடத்தில் இடையீட்டைச் செய்து, அவற்றை ஒரு புதிய அரசியற் பண்புக்குட்படுத்துவது அவசியம் என உணர்ந்தோம். இதற்கு ஏற்றவாறு இந்த அமைப்பை பயன்படுத்த வேண்டும். மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என்று சிந்திக்கப்பட்டது.
முதலாவது கூட்டம் முடிந்த பிறகு சில அரசியற் தரப்புகளோடு ஆரம்பகட்ட உரையாடல்களைத் தொடர்ந்தோம். அப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்கட்சிக் குழப்பங்களுக்குள்ளாகிக் கொண்டிருந்தது. கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி போன்றவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோடு முரண்பட்டுக்கொண்டிருந்தனர். அத்துடன் அரசாங்கத்தோடும் கூட்டமைப்பு முரண்பாடுகளுடன் இருந்தது. இதனால் கூட்டமைப்புடன் முழுமையான அளவில் ஒரு உரையாடலைத் தொடங்க முடியவில்லை. தனித்தனியாக சில அரசியற் பிரமுகர்களைச் சந்தித்து எமது நோக்கத்தைப்பற்றிச் சொன்னோம். அடுத்த கட்டமாக அரசாங்கத்தோடு இணைந்தும் பொதுத்தளத்திலும் செயற்படும் தரப்பினர்களோடு பேசினோம்.
இந்த உரையாடல்கள் தொடக்க நிலையிலேயே ஏமாற்றத்தை அளித்தன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இவ்வளவு சுருக்கமாக அமையும் என்பதை நம்பக் கடினமாக - கசப்பாகவே இருந்தது. ஏனெனில் புலிகளின் காலத்திலிருந்ததைப்போலவே இரண்டு தரப்பும் இரண்டு விதமாக இருந்தன. போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுக்கக் கூடிய உளப்பாங்கோடும் அரசியற் புரிதலோடும் எவையும் காணப்படவில்லை. போர்க்கால மனப்பதிவுகளோடுதான் தங்களுடைய வழிப்படத்தையும் பயண ஒழுங்கினையும் வைத்திருந்தன. இதனால் இவை எந்தப் புள்ளியிலும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்களைக் காணவே முடியவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் அவர்களின் வழிவந்தவையும் புலிகளின் நீட்சியைப் பிரதிபலித்தன. புலிகளைப்போன்ற செயற்பாட்டு அடிப்படைகள் எதையும் கொள்ளாமல் அரசியற் சொல்லாடல்களில் மட்டும் புலிகளின் தொடர்ச்சியைத் தாம் பிரதிபலிப்பதாகக் காட்டுவதற்கு இவை முயற்சித்தன. இதனால் இவற்றினால் விரிந்த தளத்தில் பிற தரப்புகளோடு உறவாடல்களை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளை கூட்டமைப்பிற்குள்ளேயே உட்கட்சி ஜனநாயகத்தையும் உடன்பாடுகளையும் காண முடியாமலிருந்தது. இந்தமாதிரியான குறைபாடுகள் கொந்தளிப்புச் சூழலை உண்டாக்கியது. இது கடந்த காலச் சேற்றுக்குள் புதையுண்ட நிலையைப் பிரதிபலித்தது. இந்த நிலையில் எப்படிக் கூட்டமைப்புடன் போருக்குப் பிந்திய அரசியலைப்பற்றிப் பேச முடியும்? அவ்வாறானதொரு புதிய அரசியலைப்பற்றிப் பேசக்கூடிய அளவுக்கு அதற்குள்ளே ஆட்களுமிருக்கவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஓரளவுக்கு புரிதல் உள்ளவர் என்றாலும் அவரால் எம்மையும் எமது நோக்கத்தையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. அல்லது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்ல முடியாத நிலையிலிருந்தார் எனலாம்.
அரச சார்பாக இயங்கிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவற்றோடும் இடதுசாரிக்கட்சிகளோடும் பேசியபோது அவை பழைய தடத்திலேயே தமது பயணத்திசையை வைத்திருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் வரையறுக்கப்பட்ட அளவில் அதிகாரத்தையும் நிதியையும் பெற முடியும். அதன்மூலம் முதற்கட்டமாகச் செய்யக் கூடியதைச் செய்வோம் என்று உணரப்பட்டது. அரச ஆதரவுக்கு அப்பால் செயற்பட்ட இடதுசாரிகள் தமது நிலைப்பாட்டிலிருந்து இன்னொரு தளத்துக்கு மாறுவதற்கு விரும்பவில்லை. அவர்கள் அரசாங்கத்தையும் நம்பவில்லை. தமிழ்த்தரப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை புதிய வழிகளில் பயணிக்கவும் விரும்பவில்லை. இதனால் திட்டமிட்டவாறு அரசியற் தரப்புகளோடு பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தோம். வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் வரையில் அவகாசம் கொடுத்து, அவர்களிடையே ஏதாவது மாற்றங்கள் நிகழ்கிறதா என்று பார்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதற்குப் பிறகும் இரண்டு மூன்று கூட்டங்களும் சந்திப்புகளும் நடந்தன. இது எமது அமைப்புகளுக்குள் மட்டுமே. அதன்பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் பலரிடத்திலும் ஒரு விதமான சோர்வுத் தன்மை உருவாகியது. எதுவும் சரிப்பட்டு வராது என்று சொல்லிக் கொண்டு பலரும் வெளியேறினார்கள். (தொடரும்)
கருணாகரன்