அமெரிக்கர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்கர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்

அமெரிக்கர்களின் ஆரோக்கிய உணவு

வொஷிங்டன் போன்ற பரபரப்பான நகரங்களில் உணவுகள் ஏராளமான வண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுவதைக் காணலாம். அவை சுத்தமானவை. எம் கண் முன்னாலேயே சுடச்சுட தயாரித்து வழங்குவார்கள். அங்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, கொரியா, ஐப்பான் என அனைத்து நாட்டு உணவுகளும் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன.

பொதுவாக அங்குள்ள வெள்ளை அமெரிக்கர்கள் மெக்ஸிக்கன் உணவுகளையே அதிகமாக விரும்பி உண்பதைக் கண்டேன். அவை ஆரோக்கியமானவை என்பதே அவர்களுடைய பொதுவான கருத்து. அதிலும் 'டாக்கோ' எனும் மெக்ஸிக்கன் உணவு அங்கு மிகப் பிரபலம். தட்டில் அரைவாசிக்கு நறுக்கிய கோவா ஏதாவது ஒருவகை சோசுடன் கலந்து வைத்திருக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டு இறைச்சி. பப்படம் மாதிரி பொரிக்கப்பட்டிருக்கும். சிறியதொரு வட்ட சப்பாத்தி. அதை தொட்டு சாப்பிடுவதற்காக தானியங்களை அரைத்து ஒலிவ் ஒயிலில் தாளித்த சட்னி வைக்கப்பட்டிருக்கும். அதனை அவர்கள் 'பீன்ஸ் சோஸ்' என்று கூறுவார்கள். இதனை அமெரிக்கர்கள் அதிகமாக விரும்பி உண்கிறார்கள்.

தானியங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும் நம்மைப் போல அவர்கள் கடலை, பயறு போன்ற தானியங்களை அவித்து வைத்து உண்பதில்லை. மாறாக அவற்றை அரைத்து தேவையானளவு உப்பு, காரம் சேர்த்து சட்னியாக்கி சாப்பிடுகின்றார்கள். அது வித்தியாசமான சுவையைத் தருகிறது. தானியங்களை சாப்பிட மறுக்கும் நம் நாட்டு குழந்தைகளுக்கு சிறந்ததொரு மாற்று வழியென்பதையும் நான் உணர்ந்தேன். !

நம் நாட்டில் என்நேரமும் நிரம்பிவழியும் பிரபலமான அமெரிக்க உணவகங்கள் அங்கே வெறிச்சோடிப்போய் கிடப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கர்களுக்கு எடை ஒரு பிரச்சினையானதை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக கடந்த பத்து வருடங்களாக அங்குள்ள மக்கள் ஆரோக்கியமான உணவகங்களை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க 'பர்கரை' சுவைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எப்போதும் என் மனதில் இருந்தது. பார்ப்பதற்கு அழகாக அடுக்குகளைக் கொண்ட பெரிய பர்கரிலும் சிப்ஸ்களிலும் நம் நாட்டில் கிடைப்பதைப் போன்ற உப்பும் உறைப்பும் இல்லாததால் என் நா ஏமாந்து போனது!

மெக்சிகன் உணவு

அமெரிக்காவில் செலட் கடைகள் மிகப்பிரபலம். அங்கே உணவுகள் நிறைகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். விதம் விதமான அரிசிகளில் சமைத்த சோறு, இறைச்சி வகைகள், செலட்கள், சோஸ்கள், பழங்கள், கீரை வகைகள் என வைக்கப்பட்டிருக்கும். நாம் ஒரு பெட்டியை எடுத்து தேவையான அளவை அதில் பறிமாறிக் கொள்ளலாம். ஆகக்குறைந்த நிறை சுமார் 07 டொலர்களில் இருந்து ஆரம்பிக்கும். நிறைக்ேகற்ப கட்டணம் கூடும். தனியாக வாழ்பவர்களுக்கு சமைப்பதிலும் பார்க்க இது இலாபகரமானதாகவே அங்கு கருதப்படுகின்றது. பெட்டி நிறைய செலட்களை பரிமாறிய பின் விரும்பினால் ஒரு கரண்டி சோற்றையோ அல்லது ஒரு துண்டு பாணையோ அதனுடன் அமெரிக்கர்கள் சேர்த்துக்ெகாள்வார்கள். இந்நடைமுறை நம்மவர்களுக்கு முற்றிலும் நேர்மாறானது! அவர்கள் நம்மைப்போல தட்டில் சோற்றைக் குவித்து அதனுடன் கறிகளை தொட்டுக் கொள்வதில்லை. உண்மையில் அமெரிக்கர்களின் நடைமுறைதான் ஆரோக்கியமானது! நம்மவர்கள் இப்பழக்கத்தை பின்பற்ற இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லு​மோ என்று எனக்கு நானே கேட்டுக்ெகாண்டேன்.

எம்முடன் இருந்த 'டொட்' அதிக மாப்பொருளை ஒரு நாள் சாப்பிட்டு விட்டால் அடுத்த நாள் முழுவதும் காய்கறி மற்றும் பழங்களாலேயே தனது வயிற்றை நிரப்புவார். மாச்சத்து உடலுக்கு ஆகாது என்று கூறுவார். அதுமட்டுமா! ஒவ்வொரு பிரதான உணவு வேளை முடிந்ததும் நாங்கள் ஒரு மாநாட்டு மண்டபத்தில் இருந்தால்கூட அவர் தனது பையிலிருந்து பற்தூரிகையை எடுத்துச் சென்று பற்களை சுத்தப்படுத்திக்ெகாண்டு வருவார். டொட் தன் உடல் மீது அதீத அக்கறை கொண்டதொரு அமெரிக்கர்!

இதுவரை புத்தகங்களில் மட்டுமே சொல்லக் கேட்டிருந்த சில காய்கறிகள் மற்றும் பழங்களை அமெரிக்காவில் நேரில் பார்க்க கிடைத்தது. அவற்றின் சுவையோ பிரமாதம்! விரல் அளவு நீளமான குட்டிக்குட்டி கரட்டுகள் அங்கேயுள்ள சுப்பர் மார்க்கட்களில் ஏராளமாகக் கிடைக்கும். அவற்றை சமைத்தும் உண்ணலாம் அல்லது பசி வரும் நேரங்களில் பச்சையாகவே கூட பல்லில் வைத்து நொருக்கிக்கொள்ளலாம்!

அதேபோன்று ப்ளெக் பெறி மற்றும் ப்ளூ பெறி பழங்களும் அங்கே மலிந்து கிடக்கின்றன. ஒரு பெட்டி வாங்கினால் ஒரு பெட்டியை இலவசமாக கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ஸ்ரோபெரிகளும்கூட அப்படித்தான். ஒரு டொலருக்கு சுமார் முப்பது காய்களை வாங்கலாம். அவை அந்நாட்டில் விளைபவை என்பதால்தான் அத்தனை மலிவு! இதனையே நாம் இறக்குமதி செய்யும்போது வரியையும் சேர்த்து மூன்று மடங்கு பணத்தை கொடுக்க வேண்டியுள்ளது! வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலுமான செர்ரிப்பழங்களும் பார்ப்பதற்கு மட்டுமன்றி சுவைப்பதற்கும் இனிமையானவை.

அமெரிக்க கையேந்திபவன் 

சிறுவர்களுக்கான ஆங்கிலக் கதைப்புத்தகங்களில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்டமான மஞ்சள்நிற பூசணிக்காய்களை அங்கே நிஜத்தில் கண்டேன். பூசணிக்காய்குள் கதாபாத்திரங்கள் வாழ்வதாகவும் அவை குதிரை வண்டிகளாக மாறுவதாகவும் சிறுவர் கதைகளில் சித்தரிக்கப்பட்டிருப்பதை வாசித்தபோது, பூசணிக்காய் எப்படி இவ்வளவு அழகாகவும் பெரிதாகவும் இருக்க முடியும்! இதெல்லாம் வெறும் கற்பனையென்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையிலேயே அவை பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தில் பென்னம் பெரிதாக இருந்தன. அதேபோன்று தான் கத்தரிக்காய்களும், நம் நாட்டுடன் ஒப்பிடும்போது அளவில் மிகப் பெரியவை. விதம் விதமான சலாது இலை வகைகள். குடை மிளகாய்கள் என ஒட்டு மொத்தத்தில் அங்கு காணப்பட்ட எல்லா காய்கறிகளுமே நம் நாட்டில் போன்று காய்ந்து வாடிப்போயிராமல் புத்தம் புதிதாக செழுமையாக காட்சியளித்தன.

பரிஸ்தா காணும்போதெல்லாம் குட்டி கரட்டுகளையும் பழங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு கொறிப்பார். தஜிகிஸ்தானிலும் அப்படித்தானாம். இங்கே நாமென்றால் இடையிடையே வரும் குட்டி பசிக்கெல்லாம் பனிஸ் , பிஸ்கட் மற்றும் கேக் வகைகளை வாங்கி அடைக்கிறோம். இது உடலுக்கு எவ்வளவு கேடு என்பதை நான் இங்கிருந்த நாட்களில் உணர்ந்தேன்.

அப்புறம் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நாம் அதிகம் விரும்பும் பழங்களாக அப்பிள், திராட்சை, பெயார்ஸ், மஞ்சள் தோடம்பழங்கள் என்பனவாகவே உள்ளன. அவை 'உயர்வான' பழங்களாக கருதப்படுகின்றன. கொய்யா, அன்னாசி, வாழைப்பழம், சீத்தா ​போன்றவற்றுக்கு நாம் கொடுக்கும் கெளரவம் கொஞ்சம் குறைவுதான். அன்னாசியா திராட்சையா என்றால் பெண்களும் குழந்தைகளும் திராட்சையை நோக்கித்தான கைநீட்டு வார்கள். இன்றைக்கும் இறக்குமதி என்றால் ஒசத்தி என்ற ஒரு வகையான அடிமைச் சிந்தனை நம்மிடையே பரவலாக இருப்பதால்தான் இறக்குமதி பழங்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்த மூன்று வாரங்களும் எமக்கு தங்குவதற்கு மிக பிரமாண்டமான ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் எமக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அறையும் மிக பிரமாண்டமானவை. உண்மையில் அவை தேன் நிலவு சோடிகளுக்கு ஏற்புடைய வகையில் அத்தனை அலங்காரங்களையும் சோடனைகளையும் கொண்டவை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எமக்காக அவ்வளவு பணத்தை செலவு செய்திருந்தது. அநேகமான அறைகளில் கூடவே சமையலறையும் இருந்தது. தேநீர் மற்றும் கோப்பி தயாரிக்கும் இயந்திரங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற வசதிகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் கடைக்குச் சென்று முட்டை மற்றும் காய்கறிகளை வாங்கி வரும் மீரப், அவற்றை அவித்து அதனுடன் வாசனைத் திரவியங்கள் சேர்த்து சாப்பிடுவார். பாகிஸ்தானில் தான் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்பதாகவும் 'உடன்' உணவுகளைக்கு தனக்குத்தானே தடைவிதித்திருப்பதாகவும் அவர் அடிக்கடி கூறுவார். பசிக்கும்போது கொறிப்பதற்காக தனது கைப்பையில் எப்போதும் பாதாம், பிஸ்தா அல்லது பழங்களை வைத்திருப்பார். இது அவருடைய ஆரோக்கியமான உணவு பழக்கம்! ஆண்கள் போல் அல்லாமல் பெண்கள் தான் எப்போதும் தங்களுடன் பெரிய கைப்பை ஒன்றை வைத்திருப்பார்களே! அதில் என்ன இருக்கோ இல்லையோ, நிச்சயம் சீப்பு, கண்ணாடி, பவுடர் இருக்கும். அவற்றுடன் கூடவே இதுபோன்ற உலர்ந்த ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வைத்துக் கொள்வது, குட்டிப் பசிக்கான நல்ல யோசனையாகவே எனக்குப்பட்டது!

நினைவுகள் தொடரும்...

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments