நசுக்கி அடக்கப்படும் பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

நசுக்கி அடக்கப்படும் பெண்கள்

அறியாத உலகத்தை ஆட்டிப்படைத்த அடிப்படைவாதங்களில் பெண் சிசுக் கொலைகளும் ஒன்று. இது கொடூரங்களாக சித்தரிக்கப்பட்டு மனமாற்றங்களும் காலவோட்டங்களும் மனித உரிமைகளின் தேவைப்பாடுகள் உணர்த்தப்பட்டு பெரும் போராட்டங்களுக்கிடையில் குறைவடைந்துள்ளது என்று நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நவீன யுகத்திலுமா இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவின் கருத்தையும் கதையையும் தருகிறோம்...

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா இந்தியாவில் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணியாற்றுகிறார்.

அண்மையில் இந்தியாவில் 17நாட்களே வயதான ஒரு பெண் சிசுவை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர்.

நான் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணி புரிகையில் பல சிசு மரண ஆய்வுகளில் (குழந்தை இறப்புக் கட்டுப்பாடு) பங்கேற்றுள்ளேன். அந்த ஆய்வுகளில் ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களின் மரணங்கள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படும்.

ஆட்சியர், இணை இயக்குனர் சுகாதாரம், துணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறு நலத் துறைத்தலைவர்கள் போன்ற அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த ஆய்வு செய்வர். எங்கு தவறு நடந்தது? அந்த சிசுவை காப்பாற்றியிருக்க முடியுமா? யாருடைய தவறால் இது நடந்தது?என்றெல்லாம் ஆராயப்பட்டு முடிவுகள் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவர்களுக்கு செயல்வடிவமாக மாற்றி அனுப்பப்படும். இதன் மூலம் புதிய நெறிமுறைகள்  உருவாகும்.

இதில் வேறு காரணங்களினால் மரணமடைந்தது என்று நிரூபணமாகாதவரை, அனைத்து பெண் சிசு மரணமும் சிசுக்கொலையாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

சென்னை, ராமநாதபுரம் முதலிய எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் பெண் பிறப்பு குறைந்துள்ளது. நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000ஆண்குழந்தைக்கும் 936பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. அதுவும் சில மாவட்டங்களில் 900க்கும் கீழ் இருக்கிறது. இவை பாலின ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணங்களாகின்றன.

1. வரதட்சணை தரும் பயம்.

2. பெண் குழந்தைகள் கடின வேலைகளுக்கு உதவ மாட்டார்கள்.

3. ஆண் பிள்ளைதான் வாரிசு. அவனால் தான் பரம்பரையை அடுத்த நிலைக்கு. கொண்டு செல்ல முடியும் என்ற மூடநம்பிக்கை.

இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறிந்து கொல்லப்படுகிறார்கள். ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுகிறது. கண்டறியப்பட்டவுடன் பெண் சிசு என்றால் கொல்லப்படுகிறது.மீறிப்பிறந்த பெண் குழந்தைகள் எங்காவது பொது, நவீன மலசலகூடங்களில் அல்லது குப்பைத்தொட்டிகளில் வீசப்படுகின்றன.  உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளில் ஆரோக்கியமான பாலின விகிதம் என்பது ஒவ்வொரு 1000பெண் குழந்தை பிறப்புக்கும் 1005ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும்.

இந்த 1.05என்ற பெண்களுக்கு ஆண்கள் விகிதம் அனைத்து வயதுகளிலும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் 1.07முதல் 1.14என்ற அளவில் அதிகமாக இருக்கிறது.

இதனால் 15முதல் 20சதவிகிதம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் திருமணம் செய்யும் வயதைத்தாண்டி முதிர் கண்ணன்களாய் பல ஆண்கள் வாழும் நிலை ஏற்படும். இதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

இதன் விளைவாக ஆண்கள் மனத்தாழ்வு நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு. மது / புகை போதைவஸ்துகளுக்கு அடிமையாவதுண்டு. திருமணம் அல்லாத உறவுகளை நாட அதிக வாய்ப்பு உருவாகிறது. திருமணமான பெண்களின் வாழ்க்கையில் நுழைந்து அவர்கள் வாழ்க்கையை வீணடிக்கின்றனர். இவை அனைத்தையும் அன்றாட நிகழ்வுகளில் நாம் கண்டுதான் வருகிறோம். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த ஆய்வில், ஆண்கள் பிறப்பு விகிதம் சராசரியை விட அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடந்தேறின என்கிறது ஆய்வு. இதை செயல்பாட்டு பாலின விகிதத்தில் சிதைவு என்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை குழந்தை பிறக்க வைக்கும் தகுதியுடைய ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அங்கே ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை அமையும்.

ஒரு ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான ஆண்கள் 100பேர் இருக்கிறார்கள். அதே ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான வயதில் 80பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அங்கே திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளும் நிகழ்வுகள், அதனால் ஏற்படும் கர்ப்பங்கள், அதனால் நிகழ்த்தப்படும் கருக்கலைப்புகள் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

அத்தோடு சிறுபான்மையாக இருக்கும் பெண்கள் மீது கூட்டு பலாத்காரம், சரியான படிப்பு இல்லாத, திருமணத்தகுதி இன்னும் வராத, உழைத்து தன்னை காப்பாற்ற இயலாத ஒருவரை கணவனாக அவள் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவாள்.

இதனால் மிக அதிகமான அளவில் விவாகரத்துகள்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வரதட்சணை கொடுமைகள் அதனால் கொலைகள், தற்கொலைகள் (ஆண் பெண் இருதரப்பிலும் நிகழலாம்) அதிகரிக்கும்.

ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை என வருடம் 1,32,000பெண் சிசு கொலை நடக்கும் தேசமாக இந்தியா மாறியுள்ளது. பெண்கள் இல்லாத ஊரில் ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது.

இதுவே வரலாற்றுப்பாடம்.

Comments